
நேற்றிரவு தூக்கம் வராமல் திணறி விட்டார் சொர்ணம்மாள். சென்னை, கோவையிலிருந்து வந்திருந்த இரு மகன்களும் குடும்பங்களும் நேற்றிரவு ரயில், கார் எனக் கிளம்பி விட்டனர். மீண்டும் வீடு பேரப்பிள்ளைகள், மருமகள்கள், மகன்கள் இல்லாம நீண்ட இருளில் மூழ்கியது. 12 வருடக் குறிஞ்சி போல 12 மாதத்திற்கொரு முறை பேரக் குழந்தைகள் ஆச்சியுடன் ஒரு மாதம் தங்கி ஓடியாடி சொந்தக் கிராமத்தை அனுபவிப்பர். கோவில் கொடை, தாமிரபரணி நீரைச் சுமந்து ஊர்வலமாக வந்து கோவில் கலசத்துக்கு அபிஷேகம், முளைப்பாரி, வில்லுப்பாட்டு, கரகாட்டம் என மே மாதம் ஊரே கலகலவென மாறிப்போச்சு. இளம் பெண்களின் பட்டுச் சேலைகளின் சரசரப்பே அந்த கொடை நேரம் மட்டுந்தான்.
மூன்று நாட்கள் யார் வீட்டிலும் சமைக்கத் தேவையில்லை. கோவிலில் வரிசையாக உட்கார வைத்து, கல்யாண வீடு போன்ற விருந்து நடக்கும். ஆச்சி இன்று காலை மௌனமாகப் பழையதையெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தார். பெற்றோர், கணவர், கூடப்பிறந்தவர், சித்தி, அத்தை, தாய் மாமா எல்லோரும் போயாச்சு. அடுத்து தானும் போக வேண்டியதுதான். இதுதான் வாழ்க்கை நியதி என தன்னைத்தானே சமாதானப் படுத்திக் கொண்டார். நிசப்தத்தைக் கலைத்தது வளர்ப்புப் பூனையின் மியாவ். நினைவுலகத்திற்கு வந்த ஆச்சியின் புன்னகையோ ஜென் போலிருந்தது.
129
