
விமலா தனிமைக்குப் பழக்கப்பட்டவள்தான். தள்ளாமை மெதுவாக எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. மாதம் தோறும் பென்ஷன் . ஆனாலும் ஒரு வெறுமை.
கடந்த சில நாட்களாகச் சிலை போல் ஒரே இடத்தில் அமர்ந்து விட்டத்தைப் பார்க்கத் தொடங்கினாள். வாழ்க்கை சலிப்படையத் துவங்கியது. அவள் பூனையும் அவள் காலடியில் சுருண்டு படுக்க ஆரம்பித்தது.
ஒருநாள், தெருவில் ஒரே சத்தம். மெல்ல வெளியே வந்து பார்த்தாள். அறுபது வயதைத் தாண்டிய இருபது பெண்கள் தங்கள் கைகளில் பதாகைகளைப் பிடித்துக் கொண்டு கோஷமிட்டபடியே வந்தனர். ஆதரவற்ற முதியோர்களைக் கவனித்து வருபவர்கள். ஒரு பெண்மணி, ” நீங்கள் பண உதவி செய்ய வேண்டாம், உங்கள் நேரத்தைச் செலவிட்டு அவர்களுடன் ஒரு நாளாவது சிறிது நேரம் உரையாடுங்கள். அதுவே பேருதவி. இது அவர்களின் தனிமையைப் போக்கும். இங்கு வந்திருக்கும் நாங்கள் எல்லோருமே தனித்து விடப்பட்டவர்கள். இப்போது குழுவாகச் செயல்படுகிறோம். முடிந்தால் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்” என்று சொல்லி முடித்தாள்.
உடனே தெருவிற்கு வந்து, ” நான் என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள். என்னை உங்கள் குழுவில் இணைத்துக் கொள்கிறீர்களா?” என்றாள் விமலா.
அந்தப் பெண்ணும் விமலாவின் கையைக் குலுக்கி ” கண்டிப்பாக” என்று சிரித்த முகத்துடன் கூறினாள்.
விமலா அன்புடன் புன்னகைத்தாள்.
133
