
அத்தை இறந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. அப்பாவின் அக்கா அவர். எங்களுடன்தான் இருந்தார். தம்பியை வளர்க்கும் பொருட்டு திருமணமும் செய்துகொள்ளவில்லை.
உடல்நலம் குன்றி சிகிச்சை பலனின்றி அவர் மறைந்ததும் அம்மா அப்பா இருவருமே ‘அப்பாடா’ எனப் பெருமூச்சுடன் விட்டார்கள்.
அப்படி ஒன்றும் அவர் யாருக்கும் சிரமமும் தரவில்லை. பாசமானவர்.
முடிந்தவரைத் தட்டுத்தடுமாறி அவரே சாப்பிடுவார். மெதுவாக நடந்து திண்ணையில் சற்று அமர்வார். திண்ணையுடன், சுவர்களுடன், பூனையுடன் பேசுவார். உள்ளே போய்விடுவார்.
நான் பள்ளி விட்டு வந்து சிறிது பேசுவேன். பின்னர் வீட்டுப்பாடத்தில் மூழ்கிவிடுவேன். நானாவது சிறிது நேரத்தை அவருக்கு ஒதுக்கியிருக்கலாம்.
பழைய வீடு. அவருக்குப்பின் அப்பாவுக்கு வருமாம். அதை இடித்துக் கட்டவேண்டும் என்பது அப்பாவின் திட்டம். அதற்கான வேலைகளிலும் இறங்கிவிட்டார்.
அத்தையில்லாத வெற்றிடத்தை வெறிக்க வெறிக்கப் பார்த்தேன்.
அந்தப் பூனையும் அதே திண்ணையை விட்டு நகரவில்லை.
கூப்பிட்டால் ஓடிவரும். சமீபமாய் நிமிர்ந்து பார்த்துவிட்டுத் தலைகுனிந்துகொள்கிறது.
ஒரு பெருமழையில்தான் அதைக் கண்டுபிடித்தேன்.
மழைநீர் ஒழுகிய அந்தச் சுவரில் ஒழுகாத இடமும் சேர்ந்து அத்தையின் உருவத்தைக் காட்டியது.
111
