கே.சரண்யா /வீராயி

“அடியே வீராயி, வீட்டை உன்னை நம்பி விட்டுட்டு போறோம்.‌வர்றதுக்கு பத்து நாளைக்கு மேல் ஆகும் என்று அந்த பங்களா வீட்டு முதலாளி அம்மா சொல்லிட்டு பேரன் கல்யாணத்துக்காக டவுனுக்கு போயிருக்கு.
நாற்பது வயசைத் தாண்டி இருந்தாலும் இன்னும் கல்யாணம் கட்டாம ஒத்த ஆளா சுத்திக்கிட்டு திரியறேன். என் வாய் சவடால் பார்த்து எல்லாரும் பயப்படுறாக.கொல்லைப்பக்க வேலை அம்புடும் முடிச்சு வாசலுக்கு வந்தேன். திண்ணையில் கிடந்த நாற்காலியை எடுத்துப் போட்டு உட்கார்ந்தேன். அப்போ ஏதோ நடமாட்டம் சத்தம் கேட்டுச்சு.
யாருலே?
பதில் வரலை. மறுபடியும் சர்ரென்று சத்தம் கேட்டுச்சு.இரண்டு பேரு வந்து இருப்பாங்க போல.
பக்கத்திலிருந்த அரிவாளை வீசி எறிந்தேன். அது காம்பவுண்ட் தாண்டிப் போய் நெத்து குத்தாக விழுந்துச்சு.
கருப்பா உனக்கு வேலை வந்துருச்சுனு நினைக்கேன். களவாணி பசங்க கேட்டை தாண்டினாக்க ஓடிப் போய் பாய்ஞ்சுடு.ஒரு எலும்பு உடம்புல இருக்கக்கூடாது என்று இரண்டு தெரு கேட்கிறாப்பலே சத்தமாகக் கத்தினேன். தடதடவென ஓடும் காலடி சத்தம் கேட்டது.
“உனக்கு கருப்பான்னு பேரு வச்சுது எம்புட்டு வசதியான போச்சு என் தங்கமே.உன் பேரைக் கேட்டதும் ஓடிட்டாக”என்று கொஞ்சினேன் என் காலடியில் கிடந்த கறுப்பு பூனையை.
124

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன