நாகேந்திர பாரதி வாசித்த கவிதைகள்

இன்றைய சொல் புதிது நிகழ்வில் வாசித்த எனது கவிதைகள்

1
கூலி விரல்கள்

தீக்குச்சிகளாய்
சில விரல்கள்
பீச்சு சுண்டலாய்
சில விரல்கள்
பால் பாக்கெட்டாய்
சில விரல்கள்
காபி டீயாய்
சில விரல்கள்
கடைப் பொட்டலமாய்
சில விரல்கள்
சேற்று வயலாய்
சில விரல்கள்
சேலை மடிப்பாய்
சில விரல்கள்
பேப்பர் பத்திரிக்கையாய்
சில விரல்கள்
பிச்சைப் பாத்திரமாய்
சில விரல்கள்
கூலி விரல்கள்
குழந்தை விரல்கள்

2
கருவாயன் கல்யாணம்

கண்மாயின் மீன் குஞ்சு
காலிடுக்கைக் கடிக்கும்
கருவமரத் தேன்கூடு
இனிப்போடு கொட்டும்
புளியமரம் பார்த்தாலே
நாக்கு பொத்துப் போகும்
பொங்கலிடும் போதெல்லாம்
புகை மூட்டம் மூடும்
பஞ்சாயத்து ரேடியோ
பகலெல்லாம் பாடும்
பருவத்துக் கிளர்ச்சிகளை
சினிமாவும் கூட்டும்
ஊர்கூடி குலவையிட
நாதசுரம் ஊதும்
உன்மத்த இளவட்டம்
கம்பெடுத்து சுத்தும்
கருவாடும் கறிமீனும்
கார சார மாகும்
கருவாயன் கருவாச்சி
கல்யாணம் கூடும்

நல்ல நேரம்

காதல் இதயம்

அடிக்கடி மூச்சு
வாங்குகிறதா
அலைஅலையாய்
உள்ளே ஓடுகிறதா
மேல்கீழ் ஏறி
இறங்குகிறதா
மேனியில் வேர்வை
ஊறுகிறதா
பஞ்சாய் கண்கள்
அடைக்கிறதா
பயமும் பொங்கி
வருகிறதா
இரத்த வெப்பம்
உணர்கிறதா
ஏதோ மாதிரி
இருக்கிறதா
வயதில் வந்தால்
காதல் நோய்
வயதாகி வந்தால்
இதய நோய்

4.

திரும்பிய உயிர்

இடிச் சத்தம்
காதைப் பிளந்தது
தலை எங்கோ
போய் இடித்தது
வாயில் ஊறிய
எச்சில் கசந்தது
இருட்டு ரோட்டில்
எங்கோ பயணம்
திடீர் வெளிச்சம்
தின்று முடித்தது
அதல பாதாளத்தில்
விழுந்த அதிர்ச்சி
கருப்பு நிசப்தத்தில்
கரைவது போல
எங்கோ ஒரு
மின்மினிப் பூச்சி
கசகச வென்று
கண்கள் சுரந்தன
லேசான ஒளியில்
மனைவியின் முகம்-

வீட்டின் ஓசை

ஒவ்வொரு வீட்டிற்கும்
ஒரு ஓசை உண்டு
படுக்கையை சுருட்டும் போதும்
பாத்திரம் கழுவும் போதும்
கும்மித் துவைக்கும் போதும்
குளித்து முடிக்கும் போதும்
சட்டினி அரைக்கும் போதும்
இட்டிலி வேகும் போதும்
கார் கிளம்பும் போதும்
கதவைச் சாத்தும் போதும்
டிவி அலறும் போதும்
குழந்தை அழும் போதும்
பிரார்த்தனை செய்யும் போதும்
பெரியவர் பாடும் போதும்
இரவுச் சிரிப்பின் போதும்
இன்பப் பேச்சின் போதும்
உள் வாங்கிய சத்தத்தை
ஒத்திகை பார்த்திருக்கும்
ஒவ்வொரு வீட்டிற்கும்
ஒரு ஓசை உண்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன