பார்வதி/சீதாவும், சின்னுவும்

” பூனை சத்தம் போடுதே. சனியனை விரட்டியடி. கண்ட இடத்துக்கும் போயிட்டு வந்திருக்கப் போவுது. ” நோய்வாய்ப்பட்டிருந்த தன் வயதான அம்மா சுமதி கட்டளையிட, சீதா
அதைத் தேடிச்சென்று, வெளியில் விரட்டியடித்தாள்.
இரு தங்கைகள், இரு தம்பிகளுக்குத் திருமணம் ஆகி அவரவர் குடும்பம் என்று தனித்திருக்க, புகுந்த வீடு சரியில்லாமல் தன் வீட்டிற்கே திரும்பி விட்ட சீதாவுக்கு அம்மாவை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு ஏற்பட்டது.
மற்ற மகன்களும், பெண்களும் எப்போதாவது வந்து அம்மாவைப் பார்த்துச் செல்வர்.
அம்மாவும், பெண்ணும் யாரையும் மதிக்கமாட்டார்கள். யாரிடமும் மூஞ்சி கொடுத்துப் பேசமாட்டார்கள்.
ஒரு நாள் நள்ளிரவுத் தூக்கத்திலேயே அம்மாவின் உயிர் பிரிய, பெண்களும், பிள்ளைகளும் ஓடி வந்தார்கள்.
காரியங்கள் முடிந்தபின் யாராவது தன்னை அழைத்துச் செல்வார்கள் என்றெண்ணியிருந்த சீதாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அடிக்கடி வந்து பார்ப்பதாகக் கூறி ஒவ்வொருவராகப் புறப்பட்டனர்.
பெரிய வீட்டில் தனித்துவிடப்பட்ட சீதா அடிக்கடி திண்ணையில் அமர்ந்து எதையோ வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளை பார்த்து இரக்கப்பட்ட சின்னு மியாவ் என்று சப்தமிட்டு, அவளருகில் படுத்துக் கொண்டது.
இதுவாவது தன் காலைச் சுற்றிக் கொண்டு கிடக்கட்டும் என்று நினைத்தவள், எழுந்து சென்று ஒரு கிண்ணத்தில் பாலை ஊற்றி அதனருகில் வைத்தாள்.

128

One Comment on “பார்வதி/சீதாவும், சின்னுவும்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன