
அனன்யாவின் மனமெல்லாம் பூரிப்பு. பள்ளிக்கூடத்தில் கொடுக்கப்பட்ட ‘செய்தித்தாள் பெயிண்டிங்’கில் தான் மட்டுமே மிகவும் அழகாக கட்டிங், பெயிண்டிங் செய்திருப்பதாக மிகவும் மகிழ்ச்சியில் இருந்தாள்.
இரவெல்லாம் தலையணைக்கருகிலேயே ஒரு பெரிய கவரில் கசங்காமல் வைத்துக் கொண்டாள்.
தூக்கத்தில் இவளது கிராஃப்ட்டுக்கு முதல் பரிசு கிடைத்ததாகவும் , தான் என்னவோ செய்தித்தாளிலேயே வடிவமைத்த கவுன் அணிந்திருப்பது போல் கனவு கண்டாள்.
நினைத்தது போல் முதல் பரிசு கிடைக்காவிட்டாலும் ஆறுதல் பரிசு கிடைத்தது. அனன்யா குட்டிக்கு சந்தோஷம்தான்.
ஆர்த்திக்கு மகளுக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது தெரிந்தது. ஆண்டுவிழாவில் பரிசும் சான்றிதழும் கிடைக்கும்.
இருந்தாலும் குழந்தைக்காக தத்தித் தத்திப் போகும் ஒரு முயல் குட்டி பொம்மை வாங்கி வைத்துக் காத்திருந்தாள்.
வீடு நெருங்க நெருங்க முதல் இரண்டாம் பரிசு கிடைக்காத வருத்தத்தில் இருந்த அனன்யா குட்டிம்மா ஆட்டோவிலிருந்து இறங்கும் போதே துக்கத்துடன் இறங்கினாள்.
அம்மாவிடம் கட்டிக் கொண்டு அழுதுவிட வேண்டும் என்று தோன்றியது. ஆனால் கைதட்டி, தத்தித் தத்தி நடந்து அனன்யாவை வரவேற்ற முயல் குட்டி பொம்மை அவளை ஆனந்தத்தில் மூழ்கடித்தது.
112
