
ஆரா சிறுவயதிலேயே எந்த காகிதம் கிடைத்தாலும் அதில் மிக அருமையாக விதவிதமாக படம் போட்டு கலர் கொடுப்பாள். மகள் சேட்டை பண்ணாமல் ஒரு இடத்தில் இருந்து பொழுது போக்குகிறாளே என நினைத்தனர் பெற்றோர்.அவளும் வளர்ந்து கல்லூரி போகும் வயதாகி விட்டது. காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது. கல்லூரியில் இருந்து உல்லாசப் பயணம் போனார்கள்.வயநாடு செல்லும் போது வண்டியின் சக்கரம் கழன்று வண்டி நிலை தடுமாறிச் சாய்ந்து விட்டது. வண்டியில் இருந்த ஆராவும்,தோழிகள் சிலரும் ரோட்டிலும், பக்கத்தில் இருந்த பள்ளத்திலும் விழுந்து விட்டனர்.
உயிர்ச்சேதம் ஒன்றுமில்லை. ஆனால் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர், ஆரா அந்த அதிர்ச்சியில் இருந்து இனியும் வெளியே வரவில்லை. பெற்றோருக்கு மிகுந்த கவலை. அவரிடம் பேசி பழைய நிகழ்ச்சிகளை நினைவு படுத்தினர். எதற்கும் பலன் இல்லை.ஒரு நாள் புத்தக அலமாரியில் இருந்த இந்த படத்தை அவளிடம் அம்மா காட்டினார். இது அவள், அம்மாவுக்குப் பிறந்தநாள் பரிசாகக் கொடுத்தது. அப்போது அவளுக்கு ஐந்து வயது.ரொம்ப நேரம் அதையே உற்றுப் பார்த்தாள். முகத்தில் சிரிப்புடன் “அம்மா நான் வரையணும்” என்றாள்.அம்மாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி. பேப்பரும் கலரும் பிரஷ்ஷும் அவளிடம் கொடுத்தவுடன் இதே படத்தை அடர்ந்த சோலையில் அவள் வளர்ந்த பெண்ணாக ஒரு பறவையைப் பார்த்துக் கொண்டிருப்பது போல் வரைந்தாள். பெற்றோருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.இனிய நினைவுகள் என்றும் நம்மை விட்டுப் போவதில்லை.
145
