நாகேந்திர பாரதி/விக்னேஷ் பரமசிவம் அவர்களின் ‘ நரம்பின் குரல் ‘

வித்தியாசமான கதைக்களம்.

கருணைக்கொலை செய்யப்படவிருக்கும் , மூளையின் முக்கிய பகுதி செயல் இழந்து, ஒரு வருடமாகக் கோமாவில் இருக்கும் இளைஞனின் கடைசி விருப்பத்தை அறிந்து நிறைவேற்றும், செயற்கை நுண்ணறிவின், AI யின் மொழியற்ற உரையாடல் அவனின் மூளையைத் தூண்டி. சரியான தலைப்பு ‘ நரம்பின் குரல் ‘ .. அதைத் தன் எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார் மென்பொருள் பொறியாளர், இப்போது திரைப்பட இயக்குனர் விக்னேஷ் அவர்கள் .
ஒரு நிகழ்ச்சியை மட்டும் எடுத்துக்கொண்டு அதற்கு ஒரு பிளாஷ் பேக் கொடுத்து திரும்பி வந்து , முடிவில் ஒரு உருக்கம் கொடுத்து முடிக்கும் இந்த யுக்தி இதை ஒரு நவீன குறும்படமாக நம் முன் காட்டுகிறது .
அவன் அசைவற்றுப் படுத்திருக்கும் அரசாங்க ஆஸ்பத்திரியில் ஆரம்பிக்கிறது முதல் சீன். ஒரு வருடத்திற்கு மேலாக கோமாவில் படுத்திருக்கும் அவனைக் கருணைக்கொலை செய்ய அனுமதிக்கும் விபரங்கள் , உச்ச நீதிமன்றம், மனித உரிமை ஆணையம் இவற்றின் பரிந்துரைகள் வேகமாக ஓடுகின்றன வெண்திரையில் .
அதன்படி , AI கருவி மூலம் அவனுக்கு அந்தத் தகவல் தெரிவிக்கப் பட வேண்டிய கடமை நிறைவேற்றப்படுகிறது. இப்போது அந்தக் கருவிகள் அவன் மூளையுடன் இணைக்கப்படும் காட்சிகள். மூளையின் நரம்புகளின் மின்சார ஓட்டம் தூண்டப்படும் காட்சி. இப்போது அவனுக்கும் அந்த செயற்கை அறிவுக்கும் நரம்புகள் மூலம் நடைபெறும் மொழி யில்லா உரையாடல் , நமக்கு மட்டும் மொழி பெயர்க்கப்பட்டு
‘என்னைக் கொல்லப் போகிறார்களா ‘ என்ற அவனின் முதல் கேள்வியிலேயே அவனின் உணர்வுகள் உள்ளே உயிரோடு ஓடிக் கொண்டு இருப்பது AI க்கும் புரிகிறது. ‘ ஆம், இனி உன்னைப் பிழைக்க வைக்க முடியாது என்பது தெரிந்து விட்டதால், செயலில் உள்ள உன் உறுப்புகளை பிறர்க்குத் தானம் அளித்து உன்னைக் கருணைக் கொலை செய்ய எனக்கு உத்தரவு’ என்று சொல்ல ‘ அதுவும் சரிதான் , தன் சொத்தையே விற்றுஎன்னைப் பிழைக்க வைக்க முயன்று தோற்று இப்போது அரசாங்க ஆஸ்பத்திரியில் என்னை சேர்த்து இதற்கு அனுமதித்த என் அப்பாவின் முடிவு சரியானதுதான். என் உறுப்புகள் மற்றவர்க்குப் பயன்படட்டும். அதற்கு முன் உன்னிடம் சில விஷயங்கள் சொல்ல வேண்டும் ‘ என்று ஆரம்பிக்கும் அவனை ‘ சீக்கிரம், எனக்கு கொடுக்கப் பட்ட நேரம் முடிவதற்குள் ‘ என்கிறது AI .
இப்போது ஆரம்பிக்கிறது அவனின் போராட்ட வாழ்க்கையின் பிளாஷ் பேக் . பன்னிரண்டாவது வகுப்பில் மாவட்ட முதல் மாணவனாகத் தேர்வு. ஐ ஏ எஸ் ஆர்வத்தில், கலைக்கல்லூரி முடித்து யு பி எஸ் சி பரீட்சைக்குப் படித்துக்கொண்டு , செலவுக்கு, உணவு டெலிவரி செய்யும் வேலையோடு இருக்கும் காட்சிகள்.
ஒருநாள் மதுபோதையில் ஒரு பணக்காரப் பையனின் கார் மோதி , செயல் இழந்து விழ, அந்தப் பணக்காரர், வழக்கறிஞரின் வாதத்தால், தன் பையனைத் தப்பிக்க வைக்க இப்போது அந்தப் பணக்கார அப்பா மீதும் அந்த வழக்கறிஞரின் மீதும் நமக்கு கோபம் வருகிறது.
தொடர்வது இவன் ஆஸ்பத்திரியில் போராடும் காட்சிகள். தன் சொத்தை விற்று இவனைப் பிழைக்க வைக்க இவன் தந்தை தனியார் ஆஸ்பத்திரிகளில் தவம் இருக்கும் காட்சிகள். பையன் கலெக்டர் ஆவான் என்ற ஆசையுடன் தந்தை காத்துக் கிடக்கும் காட்சிகள், முடிவில் வேறு வழியின்றி இங்கே சேர்த்து அழுகையுடன் , இவன் கை பற்றி சொல்லும் வார்த்தைகள் . ‘ வேற வயித்திலே பிறந்து வந்து , கலெக்டரா ஆவே நீ ‘ என்று கண்ணீருடன் சொல்லி விடை பெறும் காட்சி.
இந்த இடம் நம்மை உலுக்கி எடுக்கிறது. அந்தத் தந்தையின் பாசமும் பரிதவிப்பும் நம்மைக் கலங்க வைக்கின்றன. அவனுக்கும் உள்ளுக்குள் அதை உணர்ந்து , நினைத்து ஊறுகிறது கண்ணீர் , அவன் செயலிழந்த கண்களில் இருந்து . பிளாஷ் பேக் முடிகிறது
‘கடைசி ஆசை ஒன்று’ என்று கேட்கிறான் நரம்புகளின் குரலால் . செயற்கை அறிவுக் கருவி ‘ சீக்கிரம் ‘ என்கிறது .
‘இந்த வருஷ UPSC தேர்வு எனக்கு வைக்கிறாயா ‘,. தயக்கத்துடன் சம்மதித்து கேள்விகளை சேகரித்து கேட்கிறது. அவன் பதில்கள் முடிந்ததும் . ‘ரிசல்ட்’ என்கிறான். முதல் ரவுண்டில் அதிக மதிப்பெண். அடுத்த ரவுண்டில் நீ ஆல் இந்தியா ரேங்க் வர வாய்ப்பு உண்டு ‘
‘எனக்கு வாழணும்னு ஆசையா இருக்கு ‘ என்கிறான். இந்த இடமும் நம்மை உலுக்கி எடுக்கிறது. எந்தத் தவறும் செய்யாத ஒரு இளைஞன் , அப்பா மேல் பாசமும், தன் உழைப்பின் மேல் நம்பிக்கையும் கொண்ட ஒரு இளைஞன் கருணைக்கொலை செய்ய ஒத்துக்கொள்ளும் நேரம், அந்த தேர்வு ரிசல்ட் தெரிந்து வாழ ஆசைப்படுகிறான்,
அது தன்னால் முடியாது என்று தெரிந்த AI சிறிது நேரம் அமைதி காக்கிறது அது முடியாது என்று புரிந்து சொல்கிறான் அவன் ‘ எக்ஸாம் எழுதி இருந்தா , நான் கலெக்டர் ஆயிருப்பேன் , அப்பா கிட்டே சொல்லிடு ‘ . அவன் இதய ஓட்டம் 78 , 60 , 36
என்று குறைந்து தன் ஓட்டத்தை நிறுத்திக்கொண்டது. திரை விழுகிறது. நம் கண்களிலும் கண்ணீர்த் திரை .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன