
முதல் கதையின் உணர்வுகளைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டுதான் அடுத்த கதை சொல்ல வேண்டும்.
இது விஜி சம்பத் அவர்களின் ‘பெரிதினும் பெரிது கேள்’ சிறுகதை
உயர்ந்த லட்சியங்களோடு வாழவேண்டும் என்று உணர்த்தும் பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி வரிகள் . அதறகு உதாரணமாக இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வாழ்க்கை நிகழ்வுகள் இந்தக் கதையில் இந்தியாவில் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்ற விருப்பத்தில் கனடா வாழ்க்கை விட்டு தாய் மண்ணுக்குத் திரும்பி இருக்கும் தம்பதியர், கடற்கரையில் மாங்காய் சுண்டல் வாங்கி சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் இருக்கும் தருணத்தில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி, அந்த மனைவி தமயந்தியின் மனதை மாற்றுகிறது . பெரிதினும் பெரிது கேட்க வைக்கிறது .
அந்த சுண்டல் விற்கும் இளைஞன் கால் தடுமாறி ஒரு நாகரிக வாலிபன் மேல் விழ, அவனின் விலை உயர்ந்த உடை இந்த எண்ணைச் சுண்டலால் அழுக்காகக் கோபித்து ‘ இந்த டிரஸ் எவ்வளவு காஸ்ட்லின்னு தெரியுமா , படிக்காத உனக்கு என்ன தெரியும் ‘ என்று கண்டபடி திட்டியபடி ,அவனை அடிக்க வெறிபிடித்தபடி பாயும் நாகரிக வாலிபனின் கைகளைத் தடுத்து , ஆங்கிலத்தில் பொரிந்து தள்ளுகிறான் அந்த சுண்டல்கார இளைஞன்.
‘ யாரு படிக்காதவன், நானா , நான் பி எல் ரெண்டாவது வருடம் படிக்கிறேன் . என் படிப்பு செலவுக்கு சுண்டல் விக்கிறேன், உன்னை மாதிரி பெத்தவங்க காசுலே சொகுசா வாழுற தண்டச்சோறு நானில்லை. நீ பணக்காரனா இருக்கலாம். ஆனா ஏழைகளை ஏளனம் செய்யற உரிமை உனக்கில்லை. இங்கே இருக்கிறவங்க எங்க ஆளுங்க , வம்பு பண்ணினே , கடலிலே தூக்கிப் போட்டுட்டு போய்க்கிட்டே இருப்பாங்க. ஒழுங்கா வீடு போய்ச் சேரு ‘ என்றதும் அந்தப் பணக்கார இளைஞனும் அவனுடன் வந்தவர்களும் ஓடிப் போகிறார்கள்.
‘நூறு ரூபா சுண்டல் வீணாய்ப் போச்சு ‘ என்று வருத்தப்படும் அவனிடம் ஐநூறு ரூபாய் நோட்டை அலட்சியமாய் நீட்டி ‘ வச்சுக்கோ ‘ என்கிறாள் தமயந்தி.
‘வேணங்கா , உழைக்காம கிடைக்கிற காசு ஒட்டாது .நான் அவன் கிட்டே மன்னிப்பு கேட்கலாம்னுதான் நினைச்சேன். அதற்குள்ள என்னென்னமோ பேசிட்டான் . மனுஷனா மனுஷ நேயம் இருக்கணும் , ஏழ்மையை ஏளனம் செய்யக் கூடாது ‘ என்று அவன் சொல்லிச் செல்ல, இவள் நினைக்கிறாள், ‘ சொற்களா அவை, கற்கள் , அவளுக்குள் நிறைந்திருந்த செல்வச் சீமாட்டி என்ற செருக்கைத் தகர்த்த கற்கள் ‘ என்று நினைக்கிறாள்.
அது அவள் ‘ பெரிதினும் பெரிது கேட்ட ‘ தருணம் என்று நமக்கும் தோன்றுகிறது .
அவளது எண்ணம் பின்னோக்கிச் சென்று அவள் பள்ளிப் பருவ வாழ்க்கையில் உடன் படித்த ஏழைப் பெண் ரம்யாவை அவள் படுத்திய பாடு ஞாபகம் வருகிறது . உடன் படித்த ரம்யாவும் வேதாவும் நெருங்கிய தோழிகள். வேதா பணக்காரி , ரம்யா ஏழை. ஆனால் படிப்பில் கெட்டிக்காரி. அவர்கள் இருவரும் தான் வகுப்பில் முதல் இரண்டு ரேங்குகளில் வருவார்கள். ரம்யாவுக்கான மதிய உணவைக் கூட வேதா தான் கொண்டு வருவாள் .
‘ஒருவேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படுபவளுக்கு எதற்கு தனியார் பள்ளி’ என்றெல்லாம் எரிச்சல் படுவாள் தமயந்தி அப்போது .
‘இவளை மாதிரி இருக்கிறவங்களுக்குத்தான் அரசுப் பள்ளி இருக்கே , அங்கே மதிய உணவு கூட கிடைக்கும் ‘ என்றெல்லாம் அவள் காதுபடப் பேசி கிண்டல் செய்தாலும் , ரம்யா வின் புன்னகை முகம் மாறாது. அவளை அழ வைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இவளுக்குள் .
ஒரு முறை பள்ளிக்காகத் திரட்டிய நிதியை வகுப்பில் ஆசிரியையின் மேஜை டிராயரில் வைத்து விட்டுச் சென்றிருந்தாள் தமயந்தி , திரும்பி வந்தபோது அங்கே பணம் இல்லை. அங்கே அமர்ந்திருந்தவள் ரம்யா மட்டும்தான் . அவளிடம் ‘ ஏன் திருடினே ‘ என்று பழி சுமத்தி கத்தியபோது வந்த ஆசிரியை ‘ நான் தான் எடுத்து ஆபீஸ்லே கொடுத்துட்டேன்’ ஏன் ரம்யா மேலே பழி சுமத்துறே’ என்று திட்டியது அவள் மேல் காழ்ப்புணர்ச்சியை அதிகம் ஆக்கியது.
காலம் ஓடியது. அவர்கள் பிரிந்தார்கள். இப்போது கனடாவில் இருந்து வந்திருக்கும் தமயந்தி , வியாபார லோனுக்காக ஒரு வங்கிக்கு சென்ற போது அங்கே உயர் அதிகாரியாய் இருந்தவள் வேதா, அவர்களின் பள்ளித்தோழி.
அவளிடம் ரம்யா பற்றி விசாரிக்கிறாள் தமயந்தி.’ இப்போது ரம்யாவைப் பார்க்க விருப்பம் ‘என்று சொல்ல அவள் ஒரு போட்டாவை எடுத்து காண்பிக்கிறாள் . அதில் ‘ரம்யா ஐ ஏ எஸ்’ என்ற பெயர்ப்பலகை மேஜையில் .பின்னால் சிரித்த முகத்துடன் சுழல் நாற்காலியில் ரம்யா.
‘ நீங்கள்லாம் அன்னக்காவடி என்று பள்ளியில் கிண்டல் செய்வீர்களே , அதே ரம்யா ‘ என்றதும் , கடற்கரைச் சம்பவத்தை சொல்லி தான் மாறிவிட்டதைச் சொல்கிறாள் தமயந்தி.
ரம்யாவின் வாழ்க்கையை விவரிக்கிறாள் வேதா . வேதா வீட்டில் கார் ட்ரைவராய் இருந்தவர் ரம்யாவின் அப்பா. பாரதியார் கவிதைகள் சொல்லி இவர்களை வளர்ந்தவர் அவர். அவர் இறந்ததும் வேதாவின் அப்பாதான் ரம்யாவுக்குரிய செலவுகள் செய்து படிக்க வைத்தார். கல்லூரிப் படிப்பு முடிந்ததும் ஆசிரியர் வேலையில் சேர்ந்து , ஐ ஏ எஸ் தேர்வுக்குப் படித்து இன்று நீலகிரி மாவட்ட கலெக்டர். ரம்யா. வேதா அப்பா தனக்குச் செய்த அத்தனை செலவுகளையும் திருப்பியும் கொடுத்து விட்டாள். வாழ்க்கையில் முன்னேறும் வைராக்கியமும் துடிப்பும் அவளுக்கு உண்டு, இன்று அந்த மாவட்ட ஏழை மக்களை உயர வைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறாள் ‘ சிங்கப் பெண் விருது கூட வாங்கி உள்ளாள் . என்று சொல்லச் சொல்ல அவளிடம் பேச வேண்டும் என்றவளிடம் போன் போட்டுக் கொடுத்தாள் வேதா .
தமயந்தி நா தழுதழுக்க அவளிடம் மன்னிப்பு கேட்க ரம்யாவின் பதில் . ‘ நீங்க என்னை அவமானப்படுத்தியதுதான் எனக்கு உத்வேகத்தை தூண்டியது . என் லட்சிய வேகத்தை அதிகப்படுத்தி ‘ பெரிதினும் பெரிது கேள் ‘ என்று என் அப்பா அடிக்கடி சொல்லும் ‘ பாரதியார் வாக்கை நினைவுபடுத்தியது , ’லெட்ஸ் மீட் சூன்’ ‘ என்று சொல்லி முடிக்க , ‘சிறுகதை நிறைவுறுகிறது .
நம் மனதிலும் ‘ பெரிதினும் பெரிது கேள் ‘ என்ற பாரதியார் வாக்கு உயர்ந்த லட்சியங்களை நம் மனதில் தூண்டி விட்டு ஒலிக்கிறது.. தூண்டி விட்டது பாரதியார் மட்டும் அல்ல. அந்த வாக்கியத்தின் விளக்கத்தை ஒரு கதையாக்கி நம் மனதில் பதிய வைத்த ஆசிரியை விஜி சம்பத் அவர்களும் தான் .
