பி. ஆர். கிரிஜா/எதிர்பாராதது

பாண்டியனுக்கு வேலை போய் விட்டது. இந்த ஐம்பது வயதில் இன்னொரு வேலை கிடைப்பது அத்தனை எளிதல்ல. தனிக்கட்டை. ஊரில் இருக்கும் அம்மாவிற்கு மாதாமாதம் கொஞ்சம் பணம் அனுப்புவான். இந்த மாதம் அம்மாவிற்கு எப்படி பணம் அனுப்பப் போகிறோம் என்ற கவலை மனதை அரிக்கத் தொடங்கியது.

சேமித்து வைத்திருந்த பணம் ஒரு மாதத்திற்குத்தான் வரும். கவலையில் தலையில் கை வைத்தபடி

உட் கார்ந்தவன் அப்படியே கண்ணயர்ந்து விட்டான்.

 தான் திடீரென்று ஒரு கம்பனிக்கு முதலாளி ஆகி விட்ட மாதிரி கனவு. பெரிய வீடு, கார், பங்களா, கனவு விரிந்து கொண்டே போனது. சட்டென்று சேரிலிருந்து விழப் போனவன் சுதாரித்துக் கொண்டான்.  அத்தனையும் கனவா என்று நொந்து போனான்.

 அப்போது வாசல் கதவு தட்டும் சத்தம்.  கதவைத் திறந்தான் பாண்டியன்.

” சார் , இங்க பாண்டியன் இருக்காரா?”

” யார் நீங்க? அவர ஏன் தேடறீங்க ?

” அவர் இருக்காரா, இல்லையா? முதல்ல அத சொல்லுங்க”.

” நாந்தான் பாண்டியன், என்ன சொல்லுங்க.” வந்தவர் நம்பாமல் பாண்டியனை மேலும் கீழும் பார்த்தார். ” சொல்லுங்க சார், என்ன விஷயம்? “

“உங்களுக்கு ஒரு கூரியர் வந்துருக்கு சார். உங்க ஆதார் அட்டைய காட்டுங்க, அப்பதான் நான் தருவேன்” என்றார் வந்தவர் கறாராக.

பாண்டியன் அரை மனதோடு தன் ஆதார் அட்டையைக் காண்பித்தான்.

வந்தவர் கவரைக் கொடுத்து கையெழுத்து வாங்கிய பின் வேகமாக சென்று விட்டார்.

கவரைப் பிரித்தான்

பாண்டியன். உள்ளே ஒரு கடிதம்.

கற்பகம், கேர்  ஆஃப் பாண்டியன் என்று தொடங்கி

 இருந்தது.  அவன் அப்பாவின் மறைவிற்குப் பிறகு அவன் அம்மாவிற்கு சேர வேண்டிய பணம் பத்து லட்ச ரூபாய்  அவன் அம்மாவின் பெயருக்குக் காசோலையாக இணைக்கப் பட்டிருந்தது.  அவனுக்கு இன்ப அதிர்ச்சியில் மயக்கமே வந்து விட்டது. அவன் உடனே  கைப்பேசியில் அம்மாவைக் கூப்பிட்டான்.” அம்மா, நான்தாம்மா, அடுத்த பஸ்ல கிளம்பி ரெண்டு மணி நேரத்துல அங்க வரேன். உன் துணிமணிய எடுத்து வெச்சுக்க. நான் நேர்ல வந்து மத்த விபரம் சொல்றேன்” சுருக்கமாகப் பேசி முடித்தான். இது என்ன அதிசயம், கடவுளையே ரொம்ப நினைக்காதவனுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா? அப்ப கடவுள்னு ஒருத்தர் இருக்கார் போல, மனதில் மகிழ்ச்சி வெள்ளம்.  அம்மாவைக் கூட்டி வந்து ஒரு சின்ன இட்லி கடையாவது போட்டு சந்தோஷமா வெச்சுக்கணும்னு முடிவெடுத்தான். மனதில் உற்சாகம்  பொங்க  வேகமாக எழுந்து ஊருக்குக் கிளம்ப ஆயத்தமானான் பாண்டியன்.

257

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன