
மணப்பாறை சந்தையில் புதுப் பானை வாங்கியதில் கோவிந்தனுக்கும் செல்லம்மாளுக்கும் வாக்குவாதம் மூண்டது.
“உன் வண்டியே வேணாம்!” எனச் சினந்த செல்லம்மாள், பானையைத் தலையிலேந்தியபடி மாட்டு வண்டியின் அருகிலேயே விறுவிறுவென நடந்து வந்தாள். வண்டியில் அப்பாவும் மகளும் அமர்ந்திருக்க, அம்மா பிடிவாதமாகப் பக்கத்திலேயே பத்து மைலும் நடந்தாள்.
கிராமத்து எல்லை வந்ததும் வண்டி நின்றது. கோவிந்தன் குற்றவுணர்ச்சியுடன், “ஏ புள்ள, வண்டியில பொண்ணுகிட்டயாவது குடுத்திருக்கலாமே… வழி நெடுக தலையிலேயே சுமந்துட்டு வந்தியே!” என்றான் பரிவோடு.
செல்லம்மாள் பானையை இறக்கித் திறந்தாள். உள்ளே சந்தையில் மகள் ஆசையாய்க் கேட்டும் கோவிந்தன் மறுத்த அழகிய கண்ணாடி வளையல்கள் பத்திரமாய் இருந்தன.
“வண்டியில வச்சா புள்ள கண்ணுல பட்டு அப்பவே போடுவேன்னு அடம் பிடிக்கும்.
வீட்டுக்குப் போய் திருஷ்டி சுத்தி கையில மாட்டிவிட்டு அசத்தலாம்னுதான் தலையில் சுமந்துட்டு வந்தேன்…” என்றவள், கோவிந்தனை முறைத்துப் பார்த்து,
“ஆனா… இருந்தாலும் உன் மேல எனக்குக் கோபம் தான்!” என்று தலையைச் சிலிர்த்துக் கொள்ள, கோவிந்தன் சிரித்துக்கொண்டே வாயடைத்துப் போனான்.
107
