
ஆற்றங்கரை மணலில் கால்கள் பதிய, கொலுசுகள் குலுங்க, தூரத்தில் நிற்கும் பின்ன மரம் நோக்கி விரைகின்றாள் ராதா. தேமதுரப் புல்லாங்குழல் இசை அவளை இழுக்கின்றது.
‘கண்ணா’
குவிந்த உதடுகளின் ஓசை காற்றில் கரைய, மேகலை துவள, மேலாடை நழுவ, காற்றில் மிதப்பதுபோலச் சென்றவள், கண்ணனின் அகன்ற மார்பில் துவண்டாள்!
குழலை உதட்டிலிருந்து விடுவித்து, “ராதா” குழைகின்ற குரலுடன், மயக்கும் புன்னகையுடன், மூடிய அரைக்கண்களுடன், கருநீல நிறக் கண்ணன் அவளை அணைக்க, அவன் தோளில் நீல நிறப் பட்டு காற்றில் படபடத்தது.
சலசலக்கும் ஆற்று நீரும், வீசும் குளிர்த் தென்றலும் ஜதியுடன் ஓசையின்றி ஒலியெழுப்ப, அங்கே பேரமைதி. மூச்சுக்காற்று மட்டும் ராதாகிருஷ்ணனின் இடையில் சீராய் வெளிவர, மோன நிலையில் சங்கமம்!
“ஏய், யார்ரா அங்க, கதவைத் திறந்துட்டு ஓடி வந்துட்டா பாரு, புடிங்கடா” கையில் கயிறும் சங்கிலியுடனும் ஓடி வரும் பெருங்கூட்டம்.
திகைத்து நின்றனர் அருகில் வந்தவர்கள் – ராதா பின்னை மரத்தை அணைத்து நிற்க, அங்கே கண்ணனைக் காணவில்லை!
“மாயக் கண்ணன், உங்கள் கண்களுக்குத் தெரிய மாட்டான்” சிரித்தாள் ராதா.
‘பைத்தியக்காரப் புள்ள, அழைச்சிக்கிட்டுப் போங்கடா’ என்றான் கூட்டத்தில் ஒருவன்.
புல்லாங்குழலின் இசை ராதாவுக்கு மட்டும் கேட்கிறது!
