பி.ஆர்.கிரிஜா/ஊடல்

மாடசாமி சத்திரப்பட்டியிலிருந்து பக்கத்துக் கிராமம் பாப்பம்பட்டிக்குத் தம்பியைப்  பார்க்க மனைவி வள்ளி, மகள் செல்வியோடு புறப்பட்டார். காலையில் கிளம்பும்போதே சண்டை ஆரம்பிச்சாச்சு. வள்ளிக்குப் பிடிவாதம் ஜாஸ்தி. ” நான் நடந்தே வரேன். நீயுமாச்சு, உன் வண்டியுமாச்சு” ” உன் திமிருக்கு அளவே இல்ல, அந்த மகமாயிதான் உனக்கு நல்ல புத்திய கொடுக்கணும்” பதிலுக்கு மாடசாமி. மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டு தலையில் சும்மாடு மேல அரிசி பானையை சுமந்துக்கிட்டு வீராப்பாய் நடக்கத் தொடங்கினாள்.

மகள் செல்விக்கு இது புதுசல்ல. அப்பனும், ஆத்தாளும் எப்பப் பார்த்தாலும்

 கரைச்சல்தான். முகத்தைத் திருப்பி வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். ” ஆனாலும் ஒரு பொம்பிளைக்கு இத்தனை பிடிவாதம் ஆகாது, ஆமா” மாடசாமி விடுவதாக இல்லை. ” அது என்ன , பொம்பள, ஆம்பிள, உங்களுக்கு என்ன ரெண்டு கொம்பா முளச்சிருக்கு? நானுந்தான்

கழனில நாள் முச்சூடும் வேல பாக்கறேன்” வள்ளி  விடுவதாய் இல்லை. “இதோ கொம்பு முளச்சு கூட வாயத் தொறக்காம, நம்ம கூட சிவனேன்னு வருது பாரு நம்ம ராஜா”  பதிலுக்கு மாடசாமி சொல்லிக் கொண்டே பாசத்தோடு தன் காளையைத் தடவிக் கொடுத்தான். சமய சந்தர்ப்பம் தெரியாமல் சிரித்துக் கொண்டே மாடசாமி சொன்னதும்,

 வள்ளிக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. ” போயா, உமக்கு எப்பவுமே தமாசுதான்”  சிரித்துக் கொண்டே காதலுடன், மாடசாமியின் கையைப் பிடித்தாள். அவனும் வண்டியை நிறுத்தி, பானையை வண்டியில் வைத்தான். அவளைத் தூக்கி வண்டியில் உட்கார வைத்தான். அவளும் நாணத்தில் ” போயா, செல்வி பாக்குதுல்ல” ” நல்ல தமாசு போ” சொல்லிக் கொண்டே செல்வி கல கலவென்று சிரித்தாள்.  இவர்கள் அடிக்கும் கூத்தைப் பார்த்து

ராஜாவும் தலையை ஆட்டிக் கொண்டே  ராஜ நடை போட ஆரம்பித்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன