பார்வதி/பிரார்த்தனை

திருமணம் ஆகி முப்பத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், ஒரு திருமணத்திற்காகப் பிறந்த ஊர்ப்பக்கம் செல்ல வேண்டியிருந்தது.
திருமணம் முடிந்து, பிறந்த வீட்டுக் குல தெய்வத்தைத் தரிசித்து வரலாம் எனப் புறப்பட்டேன்.
அந்தத் தெருவில் நான் பிறந்து வளர்ந்த வீட்டைத் தாண்டித் தான் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.
வீட்டைப் பார்த்த மாத்திரத்தில், ஓராயிரம் எண்ணங்கள் என்னுள் அலை மோதின. கண்களில் நீர் முட்டி, கன்னங்களில் வழிந்தது.
கம்பீரமாக நின்ற வீடு, எப்பொழுதும் பூட்டியே கிடக்கின்றது. மழையில் நனைந்து, வெய்யிலில் காய்ந்து, சுவர்கள் இடிந்து, தரை பிளவுபட்டு, சிமெண்ட் பெயர்ந்த பழமையான தோற்றம். அப்பா வழக்கமாக உட்கார்ந்திருக்கும் பழைய ஸ்டூல் கால்கள் ஒடிந்து பிளவுபட்ட நிலையில் காட்சியளித்தது. அறுந்து போன ஒயர்கள், மனதின் ஆழத்தில் புதைந்திருந்த பழைய நினைவுகளை மீட்டெடுத்தன.
அந்த வீடு, தனக்கு எப்பொழுது நல்ல காலம் வரும் என்று ஏங்கிக் கிடக்கின்றது.
என்னைச் சேர்த்து உடன் பிறப்புக்கள் ஐவரிடத்திலும் பணம் கொட்டிக்கிடக்கிறது.
பரந்த மனமும், தாராள குணமும் இல்லையே!
கண்ணீர் பாதையை மறைக்க, தட்டுத் தடுமாறி கோவிலுக்குச் சென்றேன்.
பெற்றவர்களோடும், உடன் பிறந்தவர்களோடும் கூடி இன்பமாக இருந்த அந்த வீடு, ஆனந்த நிலையமாக மாற வேண்டுதல் வைத்தேன்.

127

One Comment on “பார்வதி/பிரார்த்தனை”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன