வி.கே.லக்ஷ்மி நாராயணன்/அம்மா

இருபது வருடம் முன்னால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய அம்மா, தனசேகர் ஞாபகத்தில் வந்தாள். பெண்டாட்டி பேச்சைக் கேட்டு ஏசி உதாசீனம் செய்யப்பட்டதால் அம்மா இப்படிச் செய்தது தனசேகர் அறியாதது இல்லை. பெண்டாட்டி மாரடைப்பில் சமீபத்தில் காலமாகிவிட இப்போது அம்மாவின் நினைப்பு அவனை வாட்டியது. காரை எடுத்துக்கொண்டு ஊர் ஊராகச்சென்று தேடினான். கடைசியில் ஒரு சிற்றூர் டீக் கடை ஒன்றில் மாலை சூட்டப்பட்டு சுவரில் தொங்கிக்கொண்டி ருக்கும் அம்மா படத்தைப் பார்த்ததும் பீரிட்டு எழுந்த அழுகையைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான். “ ஐயா என்னாச்சு அந்த அம்மாவுக்கு?” படத்தைச் சுட்டிக்காட்டியபடி தனசேகர் கேட்க, “ ஹூம் புண்ணியவதி ஒருநாள் அடிச்ச காய்ச்சல்ல போய் சேர்ந்துட்டாங்க .எதிர்வீட்டில் இருந்துக்கிட்டுதான் இட்லி வியாபாரம் செய்தாங்க. எங்களுக்கு எத்தன தடவ ப்ரீயா இட்லி கொடுத்திருக்காங்க தெரியுமா? “ தன் கண்களைத் துடைத்துக்கொண்டார் டீக்ககடைக்காரர். அவர் காட்டிய வீடு ஆஸ்பெஸ்டாஸ் கூரையால் வேயப்பட்டுப் பூட்டப் பட்டிருந்தது . வாசலில் தபால்பெட்டி .
எழுந்து கொண்ட தனசேகர் டீக் கடைக்காரரிடம் சொல்லிக்கொண்டு புறப்படும்போது அவன் மனம் அம்மாவை நினைத்து பெருமைப் பட்டுக்கொண்டது.

119

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன