தமிழ்ச்செல்வன் ரத்ன பாண்டியன்/ பழங் கோவில்

டில்லி, பம்பாய், கல்கத்தா என வேலை பார்த்துவிட்டு, பணி ஓய்வில் 15 வருட வாசம் சென்னையில். சொந்த கிராமம் கச்சனா விளை, வன திருப்பதி பக்கம். முப்பது வருடங்கள் முன்பு பெற்றோர் சொந்தக் கிராம வீட்டிலேயே தங்கள் இறுதி மூச்சை விட்டனர். தங்கை அமெரிக்க வாசி. கிராம வாழ்க்கை ஒத்து வராதவள். என்னை ஊரிலுள்ளவர்கள் அங்கேயே நிரந்தரமாகத் தங்குவதற்குக் கூப்பிட்டுக் கொண்டேயிருக்கின்றனர். வருடாவருடம் கோவில் வரிகளைக் கட்டி, கொடை நேரம் ஒரு நாள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து போவது மட்டுமே எங்க வழக்கமாப்போச்சு.
வீட்டை இடிச்சு புதுசா கட்டி கிராமத்திலேயே தங்கு இல்லைன்னா நல்ல விலை வாங்கித் தாரேன் வித்துடுன்னு சொந்தங்கள் நெருக்கின. ‘முடியாது’ என ஒற்றை வார்த்தையில் கூறி விட்டேன். பணம் பெரிசில்லை. தாத்தா, அப்பா என மூதாதையர் வாழ்ந்த, நடமாடிய வீட்டை இடிப்பது உயிருள்ள வீட்டைக் கொல்வதாகத் தோன்றியது.
வயசாகித் தானாக இயற்கையாக வெயிலிலும் மழையிலும் நனைந்து, சுவர்கள் சிதைந்து மண்ணாகப் போகிற வீட்டை, நாமாக இடிப்பது, வயசாச்சுன்னு, கோமாவில் வாழுற மனுஷனைச் செயற்கையாகக் கொலை பண்ணுவது போலத்தான். எனக்கு அந்த வீடு, மூதாதையர்களின் பழங்கோவில்!

122

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன