பாலசாண்டில்யன் /உயிலோடு விளையாடி

மழை நீர் உட்புகும் அந்த 450 சதுர அடி வீட்டில், கொசுக்களோடும் நோயோடும் கழிந்த 50 ஆண்டுக்கால வாழ்க்கைக்குப் பிறகு, ரத்தினமும் சாரதாவும் மருத்துவமனையில் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்தனர்.
வீட்டுப் பீரோவில் இருக்கும் உயிலை எடுக்க நினைத்த விஜி, அப்பா அரணாக் கயிற்றில் வைத்திருந்த பீரோ வெளிக்கதவு சாவியையும், அம்மா தாலிக் கொடியில் முடிந்துவைத்திருந்த பீரோவின் உள் ரகசிய லாக்கர் சாவியையும் திருட்டுத்தனமாக உருவினாள்.
பூட்டிய வீட்டைத் திறந்து, உள் லாக்கரைத் திறந்தாள். மஞ்சள் கவரில் உயிலும், கூடவே கடன் பத்திரங்களும் இருந்தன.
அதில் ரத்தினத்தின் கையெழுத்து: “மகளின் ஆடம்பரத் திருமணத்திற்கும், மகனின் வெளிநாட்டுப் படிப்புக்கும் இந்த வீட்டை அடைமானம் வைத்த கடன் இன்னும் முடியவில்லை. என் மறைவுக்குப் பின் வீட்டை விற்று கடனை அடைக்கவும். மிஞ்சினால் எங்களின் மருத்துவச் செலவுக்குப் போக மீதியை இரு பிள்ளைகளும் பகிர்ந்து கொள்ளவும்.”
சொத்து மிஞ்சும் என்ற ஆசையில் வந்த விஜிக்கு, கால் நழுவித் தரை சுழன்றது.

105

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன