நாபா.மீரா/கடைசிக் கடிதம்

பூட்டியிருக்கும் அந்தப் பழைய வீட்டின் கதவுகளைச் சாவி பொருத்தித் திறக்கும்போது அன்று ஏனோ பூபதிக்கு மனம் கனத்துப்பேனது.
உள்ளிருந்து இருமலும், முனகலும் விரவிய சத்தம்.
வாசல் பிறையில் இருந்த தபால் பெட்டியை வெறித்தான்.
கண்கள் யதேச்சையாகக் கையில் இருந்த தந்தியையும், அதிலிருந்த வாசகங்களையும் தொட்டு மீண்டது.
“பூபதியா, வாப்பா, உனக்காகத்தான் காத்திருக்கேன்”. முழுமையாகப் பேசவிடாமல் இருமல் தடுத்தது.
“ஆகாஷ் என்னப்பா எழுதியிருக்கான். வழக்கம் போல உங்க உடம்பை கவனிச்சுக்குங்க, இராணுவத்தில் விடுப்பு கிடைக்கறச்ச வர்றேன்னுதானே?”
தயங்கியபடியே, “ஆமாங்க ஐயா!” என்றான் பூபதி.
” காசநோய் முத்தின நிலையில் நா இங்க நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன்.”
“அநேகமாக, இது எங்களோட கடைசிக் கடிதப்பரிமாற்றமா இருக்கும். அடுத்தமுறை என் மகனோட கடிதத்தைப் படிக்க நா உயிரோட இருப்பேனோ என்னவோ”..
“அவன் பூரண ஆயுசோட நல்லா இருந்தா அதுவே இந்த அப்பனுக்குப் போதும்”.
“பூபதி கொஞ்சம் தண்ணீர்…நாக்கு வறட்டுது ஒரே தாகமா இருக்குப்பா.”
அவன் உள்ளிருந்து தண்ணீர் எடுத்து வர, அங்கே அவர் உயிர் பிரிந்திருந்தது.
பூபதி “ஐயா”, என்று வெடித்து அழுததில், இராணுவத்தில் நடந்த போரில் ஆகாஷ் இறந்ததைத் தாங்கி வந்திருந்த தந்தி வாசகங்கள், அவன் கண்ணீர்த் துளிகள் தெறித்து மங்கலாகத் தெரிந்தன.

128

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன