(முதல் தொகுப்பு)
WriterSCafe – எழுத்தாளர் சங்கமம் – குழுமம் எழுத்தாளர்கள் எழுதிய இருபது சிறுகதைகளின் தொகுப்பு
01

அது ஒரு சிறிய கிராமம். கல்வராயன் மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்திருந்தது.
மாலை சூரியன் மறையத் தொடங்கி விட்டான். இன்னும் சற்று நேரத்திற்கெல்லாம் இருட்டி விடும் போலிருந்தது.
அஞ்சலை காட்டில் சேகரித்த விறகுகளை அடுக்கி, தலையில் புடவை முந்தாணையை சும்மாடாக்கி, சிரமப்பட்டு எடுத்து வைத்துக் கொண்டு, சிரமத்துடன் மலையில் இருந்து தடம் பார்த்து கவனமாக இறங்கி, ஊருக்குள் நுழைந்தாள்.
ஊரே பரபரப்பாக இருந்தது.
அங்குமிங்கும் வாகனச் சத்தம். 108 ஆம்புலன்ஸ் ஒன்று சைரனுடன் அலறியவாறு சிகப்பு விளக்கை எரிய விட்டு புழுதி கிளப்பிப் பறந்து சென்றது.
‘என்ன?’, என்று புரியாமல் குழப்பமாக நடந்தாள்.
எதிரே நாச்சியப்பன் அண்ணன் வந்து கொண்டு இருந்ததை கவனித்து அஞ்சலை கேட்டாள்.
“அண்ணே! என்ன ஆம்புலன்ஸ் வண்டி வந்து போகுது?”
“என்னம்மா உனக்கு விஷயம் தெரியாதா?”
“இப்ப தான் விறகு பொறுக்கிட்டு வர்றேன்.”
நாச்சியப்பன் முதலில் தயங்கினார்.
“என்னண்ணே தயக்கம்?”
“அது வந்துமா, ஆத்தங்கரையில சாராயம் வாங்கி குடிச்ச பத்து பதினைந்து பேரு நுரை தள்ளி மயங்கி விழுந்திட்டாங்க. என்ன ஆச்சுன்னு தெரியலை. ஊரே அங்கதான் திரண்டு போயிருக்கு,” என்று சொல்லிய நாச்சியப்பன் நகர்ந்தார்.
அவர் சொன்னதை கேட்டதும் அஞ்சலைக்கு தூக்கி வாரிப்போட்டது.
வீட்டுக்காரன் அமரேசன் தான் ஞாபகத்துக்கு வந்தான். இருபத்தி நான்கு மணி நேரமும், சாராய நெடியுடன் தான் இருப்பான். அதுவும் ஆற்றங்கரை கள்ளச்சாராயக் கடையில்.
காசு தீர்ந்தால் தான் வீட்டுப் பக்கம் எட்டிப் பார்ப்பான். மற்ற நேரங்களில் அவன் பெற்றெடுத்த அபாயக்கியவதிகள் மூன்று பெட்டைப் பிள்ளைகள் அவனைத்தேடிப்பிடித்து இழுத்து வருவார்கள்.
ஏதோ அரக்க பறக்க சாப்பிட்டு விட்டு வேலைக்கு போவது போல் சாராயக் கடைக்கு போய் உட்கார்ந்து விடுவான் அமரேசன்.
யாராவது கிடைத்தால் ஒரு பாக்கெட் “மூலைக் கடித்தான் சாராயம்” வாங்கி ஊத்திக் கொள்வான். பாக்கெட் சாராயத்திற்கு மூலை கடிச்சான்னு குடிமகன்கள் சூட்டிய பெயர். சாராய பாக்கெட் நூல் சுற்றி வைத்திருப்பார்கள். ஆனால் அதை பிரிக்க சோம்பல் பட்டுக் கொண்டு சாராயப் பாக்கெட்டில் மூலையை சிறு பகுதி கடித்து துப்பி விட்டு அப்படியே குடித்து விடுவார்கள்.
அது அந்த ஊரிலேயே காய்ச்சும் பட்டை சாராயம். நல்ல போதை தரும். குடித்து போதை தலைக்கேறி விட்டால், ஏதேனும் ஒரு சுவற்றை பிடித்துக் கொண்டு தான் நிற்பார்கள்.
ஏறக்குறைய சுவற்றை தள்ளுபவர்கள் போல் நிற்பார்கள்.
தலைமீதிருந்த விறகு கட்டைகளை ரோட்டோரம் இறக்கி வைத்து விட்டு, ஆற்றங்கரை வரை ஓட்டமாக ஓடினாள் அஞ்சலை.
வியர்வை ஏற்கனவே அவள் ஜாக்கெட்டை நனைத்திருந்தது. பதற்றம் சேர்ந்ததால் மேலும் வியர்த்தது. செருப்பில்லாத கால்களால், முடிந்த மட்டும் ஓடினாள். வழி நெடுக மக்கள் நடமாட்டம் இருந்தது.
தட்டுத் தடுமாறி கல், முள் என்று பார்க்காமல் ஓடினாள்.
போலீஸ் வண்டி ஒன்று வேகமாக அவளைக்கடந்து ஆற்றங்கரை நோக்கிப் போனது.
இவள் ஆற்றங்கரையை அடையும் போது கூட்டம் அதிகமாகத்தான் இருந்தது.
போலீஸ் இரண்டு, மூன்று நபர்களை ஜீப்பில் ஏற்றியது.
கூட்டத்தில் பெண்கள் கூச்சல் அமைதியை குலைத்தது.
அவள் கூட்டத்தை நெருங்கவும், ஆம்புலன்ஸ் ஒன்று வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
நாலைந்து பேர் சேர்ந்து, “நகருங்க; ஒதுங்கி போங்க, சீக்கிரம் போகணும்,” என்று சொல்லி கூச்சலிட்டனர்.
ஆறேழு பேரை அள்ளிப் போட்டுக் கொண்டு புறப்பட்டது அந்த 108 ஆம்புலன்ஸ்.
“டேய் ஆதவா, மாமாவை பார்த்த?”
“அத்தை நான் பாக்கல. இதோட மூன்று நடை வண்டி வந்து ஆளுங்களை அள்ளி போட்டுக்கிட்டு டவுன் ஆஸ்பத்திரி போயிட்டு வருது. யாரு என்னென்னு பாக்க முடியல. 108 வண்டி டிரைவர் சொன்னாரு. மொத டிரிப் போனவங்கள்ல நாலு பேரு செத்துட்டாங்களாம். எல்லாம் நம்ம ஊரு ஆளுங்க தான்,”என்று சொல்லி விட்டு கும்பலில் கலந்து விட்டான்.
“அய்யய்யோ…பாவி மனுசன் என்ன ஆனானோ தெரியலையே,” என்று புலம்பிக் கொண்டு கூட்டத்தை நோக்கி முன்னேறினாள்.
எதிரே அழுதபடி வந்த பெண்களில் வசந்தா தெரிந்தாள்.
வாய் பொத்தி அழுதவாறு வந்தாள்.
“என்னடி என்னாச்சு?”
“அக்கா,”ஓவென கதறி அழுதாள்.
“இப்ப தான் கேள்வி பட்டு வந்தேன்…என் வூட்டுகாரரு செத்துட்டாராம். என் மவன் இப்பதான் போன் பண்ணி சொன்னான்.”
“அழாத வசந்தா, நாம போன ஜென்மத்தில பண்ண பாவம்,”என்றவள் பயத்தை வெளிக்காட்டவில்லை.
வசந்தா வீட்டுக்காரனுடன் தான் இருப்பான் அமரேசன்.
அஞ்சலை அமரேசனும் இறந்து போயிருப்பான் என்று முடிவுப் பண்ணிக் கொண்டாள்.
அமரேசன் இருந்தும் புண்ணியமில்லை தான். தாய் மாமன் என்பதால் அம்மா வலுக்கட்டாயமாக தாலி கட்ட வைத்து விட்டாள்.
அஞ்சலை அப்பா குடிப்பார். அதனால் அமரேசன் குடிப்பது பெரிய விஷயமாக திருமணம் ஆன புதிதில் தெரியவில்லை.
வெள்ளை அடிக்கப் போவான். கூலியில் பாதி காசுக்கு சாராயம் குடித்து விட்டு வருவான்.
மூன்று பெண் பிள்ளைகள் அடுத்தடுத்து பிறந்த பிறகு அவன் கொஞ்சம் கொஞ்சமாக வேலைக்கு போகாமல் முழு நேரக் குடிகாரனாகி விட்டான்.
அஞ்சலை ஏதோ ஒரு கூலி வேலைக்கு சென்று கூழோ, கஞ்சியோ ஊற்றி பிள்ளைகளை படிக்க வைத்தாள்.
பத்தாவது வரை ரெண்டு பிள்ளைகள் படித்துவிட்டு, டவுன் கடையில் வேலைக்கு போய் மாசம் ஆளுக்கு மூவாயிரம் வீட்டு செலவிற்கு தருகிறார்கள்.
சின்னவள் ப்ளஸ் டூ நன்றாக படிக்கிறாள்.
“அம்மா நாங்கதான் ஒழுங்கா படிக்கல. தங்கச்சியை எப்படியாவது காலேஜ் படிக்க வெச்சிடணும்!” என்று பெரியவள் சொல்ல, நடுவளவள் “ஆமாக்கா, அவ படிக்கிற வரைக்கும் நாம செலவு பண்ணுவோம்.,”என்றாள்.
மகள்களின் வருமானம் கொஞ்சம் உதவியாகதான் அஞ்சலைக்கு இருந்தது.
ஆனால் அமரேசனால் வீட்டிற்கு பத்து பைசா பிரயோசனம் இல்லை.
அஞ்சலையிடம் குடிக்க காசு கேட்டு அடிப்பான்.
“இதோ…அம்மாவை அடிக்கிற வேலையை வெச்சுக்காதே,”சின்னவள் தைரியமாக அமரேசனை மிரட்டுவாள்.
“அக்கா! பத்து ரூபாய் எடுத்து கடாசு, பாவம் அம்மா.”
“ஏய், நாங்க காசுக்கு பார்த்தா குடிக்க வேணாம்ன்னு சொல்றோம். சாராயம் குடலை அரிச்சிடும். அதுக்கு தான் பார்க்கிறோம்,” என்பாள் பெரியவள்.
அஞ்சலை நினைவை கலைத்தது போலீஸ் ஜீப் ஹாரன் சத்தம்.
ஜீப் உள்ளேயிருந்து ஒரு கான்ஸ்டபிள் எட்டிப் பார்த்து “சங்கர் பொண்டாட்டி யாருமா?” என்று கேட்க, “நான் தாங்க,”அழுகையோடு சொன்னாள் வசந்தா.
“உன் வீட்டுக்காரர் செத்துட்டாருமா; பாடி போஸ்ட் மார்டம் பண்ண போயிருக்கு; சீக்கிரம் டவுன் ஆஸ்பத்திரி வந்திடு,” என்று போலீஸ்காரர் சொன்னதும் ஜீப் வேகம் பிடித்தது.
மகள்கள் டவுனில் வேலை செய்வதால் வீட்டுக்கு வந்து போன் பண்ணி கேட்கலாம் என்று நினைத்தவள் தன் முடிவை மாற்றிக் கொண்டு வசந்தாவுடன் டவுன் ஹாஸ்பிடல் போக முடிவு செய்து பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தாள்.
ஏழரை மணிக்கு இன்னும் ஐந்து நிமிடம் இருந்தது.
டவுன் பஸ் வரும் நேரம். சரியான நேரத்தில் பஸ் வந்து விட்டது.
பஸ்ஸிலிருந்து மாடசாமி இறங்கினான்.
“அக்கா…பதினைந்து பேரு செத்துட்டாங்களாம். யாரு செத்தாங்கன்னு தெரிஞ்சிக்க முடியல. இது பெரிய விஷயமாகி டிவியில் எல்லாம் செய்தி ஓடுது.”
“என் வீட்டுக்காரரை பார்த்தியா?”
“அக்கா; ஹாஸ்பிடல் வாசல்ல போலீஸ் குவிச்சுட்டாங்க; யாராவது செத்திட்டா மட்டும் தான் மைக்ல சொல்றாங்க,” என்று அவன் தகவல் சொல்லி முடிக்கவும், பஸ் புறப்படவும் சரியாக இருந்தது.
பஸ்ஸில் வந்தவர்கள் கள்ளச்சாராயம் மரணத்தை பற்றி தான் பேசிக் கொண்டு வந்தார்கள்.
எல்லா கடவுள்களையும் வேண்டிக் கொண்டே வந்தாள். பக்கத்தில் அவ்வப்போது வசந்தாவின் விசும்பல் கேட்டபடியே இருந்தது.
“பெரியவளுக்கு கல்யாணம் பண்ணி இருந்தா, அந்த ஆளும் ஒரு பேரப்பிள்ளையாவது பார்த்திட்டு செத்து இருப்பான்”, என்று மனதில் நினைத்துக் கொண்டாள், அஞ்சலை.
டவுனை நெருங்க, நெருங்க உடம்பெல்லாம் உதறல் எடுத்துக் கொண்டது.
ஹாஸ்பிடல் வாசலில் பஸ் நிற்க, ஓட்டமும் நடையுமாக ஹாஸ்பிடல் கேட்டை அடைய போலீஸ் பாதுகாப்பு பலமாக இருந்தது.
பல செய்தி சேனல்கள் படம் பிடித்து பேட்டி எடுத்துக் கொண்டு இருந்தார்கள்.
“என்னம்மா வேணும்?” என்று ஒரு போலீஸ்காரர் மிரட்ட,”ஐயா, என் வூட்டுகாரர் செத்துப் போயிட்டாரு.
போலீஸ்காரர் தான் உடம்பை வாங்கிட்டு போகச் சொல்லி சொன்னாங்க,” என்று சொல்லி துக்கம் தாளாமல் அழுதாள் வசந்தா.
“நீ மட்டும் போம்மா.”
“ஐயா, என் வீட்டுக்காரரும் குடிப்பாருங்க; அவரும் இங்க இருக்கறான்னு தெரியல.”
“இதோமா, அமைச்சர் வர்ற நேரம் ஓரமா ஒதுங்கி இரு; செத்தவங்க பேர் படிப்பாங்க, அப்ப உள்ள அனுப்பறேன்,” என்று போலீஸ்காரர் விறைப்பாகச் சொல்ல ஒரு ஓரம் ஒதுங்கி நின்று கொண்டாள் அஞ்சலை.
போலீஸ்காரர்கள் மீது பயங்கர கோபம் வந்தது.
எத்தனை முறை இன்ஸ்பெக்டரிடம் வந்து சொல்லி விட்டு போயிருப்பாள்.
“அய்யா, எங்க ஊர்ல சாராயம் காய்ச்சறாங்க; தயவு செய்து அதை தடுங்க; பல குடும்பங்கள் நடுத் தெருவுக்கு வந்திடும்; போனவாரம் ஒரு கைக்குழந்தையை விட்டுட்டு ஒரு சின்ன பையன் செத்திட்டான். எங்க கிராமத்தில காய்ச்சற சாராயத்தை சுத்தி இருக்கிற கிராமத்தில இருக்கிறவங்க வந்து குடிச்சு சாகறாங்க.”
இன்ஸ்பெக்டர் யோசித்தார்.
அஞ்சலை தலைமையில் பத்து பெண்கள் உடன் இருந்ததால் அமைதியாக, “சரிமா; உடனடியா நடவடிக்கை எடுக்கறேன்; கிளம்பி போங்க,” என்று சொன்னார்.
தனியாக அஞ்சலை போயிருந்தால் மிரட்டி அனுப்பி இருப்பார் இன்ஸ்பெக்டர். ஆனால் பத்து பேராக சென்று இருந்தாள். தன்மையாக பேசி அனுப்பி விட்டார் இன்ஸ்பெக்டர்.
அக்கம் பக்கம் வீட்டு பெண்களை கெஞ்சி கூத்தாடி அழைத்துச் செல்வதற்குள் அவள் படாதபாடு பட்டுவிட்டாள்.
அன்று மாலையே போலீஸ் பேருக்கு நாலு பேரை கைது பண்ணியது.
“அக்கா, நீ கூப்பிட்டியேன்னு போலீஸ் ஸ்டேஷன் வந்தது வேஸ்டாயிடுச்சு.”
“என்னடி?”
“போலீஸ் சாராயம் காய்ச்சரவங்களை விட்டுட்டு யாரோ நாலு பேரை கைது பண்ணி கூப்பிட்டு கிட்டு போறாங்க; சாராயம் காய்ச்சும் சுப்பிரமணிய விட்டுட்டாங்க,” என்று கலா சொல்ல, அங்கிருந்த அமரேசன் பலமாக சிரித்தான்.
“ஏன் மாமா சிரிக்கிற?”
“சுப்பிரமணிய போலீஸ்லாம் பிடிக்காது; அவன் மாமூல் ஒழுங்கா கொடுத்திடறான். பேருக்கு நாலு பேரை கைது பண்ணி கூப்பிட்டு போவாங்க; அப்புறம் ரெண்டு நாள்ல விட்டுடுவாங்க; சுப்பிரமணி மேல அவ்வளவு சீக்கிரம் கை வெக்க முடியாது; அவன் கட்சிக்காரன். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவனை ஒன்னும் பண்ண முடியாது!” என்று சொல்லி நக்கலாக சிரித்தான்.
போலீஸ் அன்று ஒழுங்காக நடவடிக்கை எடுத்திருந்தால், இன்னைக்கு பதினைந்து உயிர்கள் போயிருக்காது – என்று நினைத்து ஆவேசமாக செய்தி சேகரித்த பெண்ணிடம் எல்லா விஷயங்களையும் சொன்னாள்.
செய்தி சேகரிப்பவர்கள் மொத்தமாக அஞ்சலை பக்கம் திரும்பி நேரலை பேட்டி எடுக்க தொடங்கினர்.
“இந்த கள்ளச்சாராயம் விபத்திற்கு முக்கிய காரணம் அரசு மட்டும் தான்னு எப்படி சொல்றீங்க,” என்று கேட்டாள் ஒரு ஜீன்ஸ் போட்டிருந்த நிருபர்.
“போலீஸ்காரங்க உண்மையா நடவடிக்கை எடுக்க முடியாம எம்.எல்.ஏ. எம்.பி தடுக்கிறாங்க; ஆளாளுக்கு தப்பு செய்யறவங்களுக்கு உதவியா இருக்காங்க; துணிஞ்சு நடவடிக்கை எடுக்க பயப்படறாங்க; நடவடிக்கை எடுத்தா தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்றல் பண்ணிடறாங்க,” என்று வெளிப்படையாக பேசினாள் அஞ்சலை.
“உங்க வீட்ல யாராவது பாதிக்கப்பட்டு இருக்காங்களா?”
“எங்க வீடுன்னு இல்லை; ஒரு உயிர் போனா கண்டிப்பா நடுத்தெருவுக்கு அந்த குடும்பம் வந்திடும். அந்த ஆதரவற்ற குடும்ப பொண்ணு காசுக்காக மானத்தை கூட விக்க வேண்டி வரும்…குழந்தைகளும் கண்காணிப்பு இல்லாமல் கெட்டு, காசுக்காக சமூதாயத்தில திருடனா, பொறுக்கியா வளர்ந்து சமுகத்திற்கு பெரிய பிரச்சனையா உருவாகி நிற்பாங்க.”
“இதற்கு தீர்வு என்னன்னு நினைக்கிறீங்க?”
“இதுல நேரடியா ஒரு பெண் தான் பாதிக்கப்படறா; பெண்கள் சேர்ந்தா இந்தப் பிரச்சனைய தீர்த்து வைக்க முடியும்.”
“எப்படி?”
“வர்ற உள்ளாட்சி எலெக்ஷன்ல பெண்கள் ஒரு தலைவிய தேர்ந்தெடுக்கணும்; அந்த தலைவி குடி இல்லாத கிராமத்தை உருவாக்கணும். அதே போல் எல்லா கிராமங்களிலும் செய்திட்டா கள்ளச்சாராயத்தை ஒழிச்சிடலாம்!”
“கள்ளச்சாராயத்தை ஒழிச்சிடலாம். டாஸ்மாக் கடை இருக்கே?” என்று மற்றொரு நிருபர் கேட்க,”ஒரு பெண் நினைச்சா குடியை ஒழிக்க முடியும்.”
“அது எப்படி முடியும்?”
“ஒரு குடும்பத்தில் இருக்கிற உறவுகள் தான் குடிக்குது. ஒரு அப்பனோ, ஒரு மகனோ குடிச்சா பெண்கள் மனசை கல்லாக்கி கிட்டு வீட்டிலேயே சேர்க்கக் கூடாது. பத்து நாள் திமிரா பேசுவான்; நடந்துப்பான்; வருமானம் இல்லாம அவனால் எவ்வளவு காலம் ஓட்ட முடியும்? ஒரு நாள் கண்டிப்பா திருந்தி தான் ஆகணும்; ஏதோ பத்தில் ஒன்னு திருந்தாம தான் போகப் போகுது; நாளடைவில் அடுத்த தலைமுறையாவது உருப்படியா வளரும். வியாபாரம் ஆகலைன்னா சாராய கடைகளை அரசே மூடிட்டு போகுது,” என்று ஆவேசமாக பேசி முடித்தாள் அஞ்சலை.
தெரிந்தோ, தெரியாமலோ, அவளுக்கு பெற்றோர் அஞ்சலை என்று பெயரிட்டது சரிதான் என்று அவளின் பேட்டியை கண்டவர்கள் பலர் நினைத்து இருப்பார்கள் நிச்சயம்.
*****
ச.மணிவண்ணன்
திரு மணிவண்ணன் அரசு பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். சிறுகதைகள், குறுநாவல்கள் மற்றும் நாவல்கள் எழுதுவதில் அதிக ஆர்வம் உள்ளவர். கௌரா பதிப்பகம் நடத்திய நாவல் போட்டியில் இவருக்கு முதல் பரிசு கிடைத்தது. மேலும் பொதிகை சாரல் நடத்திய சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு மற்றும் கௌரா பதிப்பகம் நடத்திய சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ள இவரின் பல சிறுகதைகள், தினமணி கதிர், கல்கி, குமுதம், குங்குமம் போன்ற பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.
இவருடைய நான்கு நாவல்கள் பிரதிலிபி தளத்தில் வெளி வந்துள்ளன. சீசன் ஒன்பதில் பரிசும் பெற்றுள்ளார்.
