
நடக்கும் போதென் காலடியில்
நிலமும் நகர்ந்து செல்வதை நான்
உணர முடிகிறதா? – ஒன்றைக்
கடக்கும் போதே அதுவும் என்னைக்
கடந்து செல்வது தெரிகிறதா?
நினைக்கும் போதே இழையிழையாய்
வடிவம் நெய்து பார்க்கின்ற
கலையை நெஞ்சம் கற்றதெங்கே?
உனக்கும் எனக்கும் இடையினிலே
பாலம் அமைத்துச் செல்வதற்குப்
பழகச் சொல்லித் தந்தவர்யார்?
நீயார் எனக்குக் காதலியா – என்னை
வாசிக்கின்ற வாசகியா
நான்வணங்கும் தேவதையா!
பார்ப்பதெல்லாம் பிம்பங்களே!
வெட்டவெளியின் நடனங்களா?
அகத்திரையின் சலனங்களா?
கேட்பதெல்லாம் ஓசைகளே!
உள்ளத்தின் கீதங்களா
உலகத்தின் அதிர்வுகளா
யாரெழுதிய நாடகமோ – எனக்
கென்னென்ன வேடங்களோ!
தேர், தெய்வம், தரிசனம் என்ற
முப்பரிமாணச் சங்கமமோ?
விடைவேண்டுகின்றேனா
விடுதலை கேட்கின்றேனா – உன்
நமுட்டுச் சிரிப்பில் கரைந்து போவது
வானத்தின் நீலமா? வளர்கின்ற காலமா?
நம்
ஊடலும் கூடலும் வார்த்தைக்குள் அடங்குமா?
29-09-2026
