ஆர்.வெங்கடேஷ்/நீரிழிவுக்கு உண்மையான மருந்து


நான் பல ஆண்டுகால நீரிழிவு குறைபாடு உள்ளவன் என்பதை என் கட்டுரைகளைப் படித்துவருபவர்கள் ஏற்கெனவே தெரிந்துகொண்டு இருப்பீர்கள். பல சமயங்களில் இதைப் பற்றி எழுதியிருக்கிறேன். கடந்த ஞாயிறன்று, மீண்டும் எச்.பி.ஏ1சி, வெறும் வயிறு மற்றும் சாப்பாட்டுக்குப் பின்னான நீரிழிவு அளவுகளை பரிசோதனை செய்துகொண்டேன்.
இதுநாள் வரை காணாத அதிசயமாக, என்னுடைய வெறும் வயிற்று சர்க்கரை அளவு 109, சாப்பாட்டுக்குப் பின்னான சர்க்கரை 182 என்று வந்தது. எச்.பி.ஏ1சியின் அளவு 7.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எடுத்த பரிசோதனையில் வெறும் வயிற்றுச் சர்க்கரை 185, சாப்பாட்டுக்குப் பின்னான சர்க்கரை 250, எச்.பி.ஏ1சி 8.7 என்று இருந்தது.
மருத்துவரிடம் ஆலோசனைக்குப் போனேன். “என்ன பண்ணீங்க? எப்படி இப்படிக் குறைஞ்சுது?” என்று கேட்டார்.
பரிசோதனை முடிவுகள் வந்தது முதல் நானே கேட்டுக்கொண்ட கேள்விகள் இவைதான். எனது 33 ஆண்டுகால நீரிழிவு குறைபாட்டில் ஏறக்குறைய இந்த இயல்பான நிலையை நான் அடைந்தது இல்லை. அதுவும் நீரிழிவின் தன்மைகளைப் பற்றி விரிவாக பல்வேறு ஆங்கில மருத்துவர்கள் மற்றும் மாற்று மருத்துவர்கள் வாயிலாகத் தெரிந்துகொண்டு, ஏராளமாக வாசித்து, பல்வேறு முடிவுகளை எடுத்துச் செயல்படுத்தி வந்தேன்.
அதில் ஒன்று ‘டைபடீஸ் ரிவர்சல்’ என்ற ‘நீரிழிவை குறைபாட்டைக் களைதல்.’ பலரும் பேலியோ, ஒரு நாளைக்கு ஒருமுறை உணவு, இன்டர்மிட்டன்ட் பாஸ்டிங், ஜி.எம்.டயட் என்றெல்லாம் பல உத்திகளைச் சொல்லித் தந்தனர். பெரும்பாலானவற்றை முயன்றிருக்கிறேன்.
இந்த டயட் வகையறா இம்சையில் உள்ள மிகப் பெரிய சிக்கல், அதன் நீடித்த தன்மை. அதாவது sustainability. முதலில் பயங்கர வைராக்கியத்தோடு ஆரம்பிப்பேன். ஒருசில மாதங்கள் நகரும். ஊர் உலகமே வேறாக வாழும் போது, நாம் மட்டும் ஏன் தாவரப்பட்சினி போலவோ, கஞ்ச மகாப்பிரபு போலவோ வாழ வேண்டும் என்று கேள்வி எழும். அதைவிட ஆபத்தானவை, இருத்தலியல் கேள்விகள். இப்படி வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி, அப்படியென்ன ஒரு வாழ்க்கை தேவை? திடீரென்று எல்லாவற்றின் மீதும் வெறுப்பு வந்துவிடும். உணவு உற்பத்தி, அதில் போடப்படும் பல்வேறு பூச்சிக்கொல்லிகள், தெளிப்பான்கள், சந்தையின் பேராசை என்றெல்லாம் உலக உணவு உற்பத்தியில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் வரை மனம் அல்லாடத் தொடங்கும்.
ஒன்றுமில்லை… என்ன செய்தாலும், காலையில் எடுக்கப்படும் வெறும் வயிற்று சர்க்கரை ரீடிங் 200க்குக் கீழே குறையவே குறையாது. தோளை விட்டு இறங்க மறுக்கும் குழந்தை மாதிரி அது அப்படியே அடம் பிடிக்கும். இத்தனை மாதங்களாக நடந்த நடை, செய்த உடற்பயிற்சிகள், பிராணாயாமம் எல்லாவற்றுக்கும் ‘பெப்பே’ காட்டும் அந்த ரீடிங். அதைவிட மனச்சோர்வு அளிக்கும் விஷயம் வேறொன்றுமில்லை.
இன்னொரு கிறுக்குத்தனமும் சேர்ந்துகொள்ளும். மருந்து மாஃபியா. அவர்கள் தான் இந்த சர்க்கரை அளவு வரையறைகளைக் கட்டுப்படுத்துகிறார்கள். அவர்கள் குறிப்பிடும் ரீடிங் இலக்கை எட்ட வேண்டும் என்பது உளவியல் ரீதியாக மேற்கொள்ளப்படும் வன்முறை, சித்ரவதை. அதை நம்பக் கூடாது. அந்தக் காலத்தில் வெறும் வயிற்றுச் சர்க்கரை அளவு 90 – 110 என்று இல்லை. 140 வரை இருந்தது. இப்போது படிப்படியாக அவர்கள் இந்த அளவைக் குறைத்து, மேன்மேலும் நோயாளிகளை உருவாக்குகிறார்கள்.
இதில் கொடுமை என்னவென்றால், இணையத்தில் தேடினால், மேலே சொன்ன அத்தனை விதமான கோணங்களுக்கும் பார்வைகளுக்கும் ஆதரவாக யாரேனும் ஒரு பெரிய மருத்துவர் ஆய்வு முடிவை வெளியிட்டிருப்பார். மனம் உடனே இளகிவிடும். “சே… நாம் ஒன்றும் தப்பு செய்யவில்லை. இதில் ரீடிங்கே தவறு. அளவெடுக்கும் மெஷினில் குளறுபடி. அளவுகோலே தவறு. அது வெளிநாட்டுக்காக செய்யப்பட்ட வரையறை. தமிழகத்தில் வாழ்பவருக்காகச் செய்யப்பட்டது அல்ல. நம்முடைய அரிசி உணவு, உடல் வாகு ஆகியவற்றுக்கு இது பொருத்தமான அளவுகோல் இல்லை.”
சமாதானம், சால்ஜாப்பு, மனத்தைத் தேற்றிக்கொள்ளுதல்… இது தான் குற்றம் சொல்லும் மனத்திடம் இருந்து தப்பித்துக்கொள்ளும் ஒரே வழிமுறை.
ஒரு கட்டத்தில் நானே என்னை ஏமாற்றிக்கொள்கிறேன் என்பது எனக்கே புரியும். உலகமே நீரிழிவு தொடர்பான ஆய்வுகளில் மிகப் பெரிய முன்னேற்றங்களைக் கண்டுவரும் வேளையில், அதை மறுக்கும் விதமாக யோசிப்பது, என்னை நானே ஏமாற்றிக்கொள்வது தானே?
கடந்த ஆறு மாதங்கள் என்ன நடைபெற்றது என்று தீவிரமாக யோசித்துப் பார்த்தேன். நீரிழிவு குறைபாட்டுக்கான மருத்துவத்தில் நான்கு தூண்கள் உண்டு. அவை, மருந்து, உடற்பயிற்சி, உணவு, உள்ளம். இதில் முதல் மூன்றையும் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டேன்.
இத்தனை ஆண்டுகளாக எனக்கு போக்குக் காட்டிக்கொண்டு இருந்த ‘உள்ளம்’ என்பதைத் தான் கடந்த ஆறு மாதங்களில் சீர்படுத்தியிருக்கிறேன். அது எப்படி அமைந்தது என்று தெரியவில்லை. எந்தவிதமான பதற்றத்துக்கும் (anxiety) ஆட்படவில்லை. எது நடந்தாலும் அது பெருமாள் சித்தம் என்று விட்டுவிட்டேன்.
வேளுக்குடி கிருஷ்ணன், சுதா சேஷய்யன் உபந்யாசங்கள், சஞ்சய் சுப்பிரமணியன், மகாராஜபுரம் சந்தானம் பாடல்கள் ஆகியவை தான் கடந்த ஆறு மாதங்களில் கூட வந்தவை. காலை, மதியம் வாக்கிங் போகும் போது இவர்கள் தான் என் காதுவழி மனத்துக்குள் புகுந்தவர்கள்.
எந்த வேலை வந்தாலும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்துவிடலாம். அதேநேரம் அதில் ஏற்படக்கூடிய இடர்கள், பிழைகள், குளறுபடிகள் ஆகியவை என் மனத்தை அண்டாமல் பார்த்துக்கொண்டேன்.
ஒருமுறை ‘அவரவர் கைமணல்’, ‘காலடியில் ஆகாயம்,’ ‘இரண்டு சிகரங்களுகுக் கீழ்’, ‘சுற்றுவழிப்பாதை’ உள்ளிட்ட படைப்புகளைத் தந்த கவிஞர் ஆனந்த் உடன் பேசும்போது, ஒரு விஷயத்தைச் சொன்னார். “காயம் (Hurt) என்பது வெளியில் இருந்து வருவதில்லை. அதாவது மற்றவர்களால் உங்களைக் காயப்படுத்த முடியாது. நீங்கள் தான் காயத்தை உங்களுக்குள் அனுமதிக்கிறீர்கள். நீங்கள் வேறு காயம் வேறு என்று தனித்து பிரித்துப் பார்க்கக் கற்றுக்கொண்டுவிட்டீர்கள் என்றால், காயம் உங்களைப் பாதிக்காது,” என்றார். அவர் சொன்னபோது இது பெரிதாகப் புரியவில்லை. கடந்த ஆறு மாதங்களில் இதனை நன்கு உணர்ந்துகொண்டேன்.
எதிரே அமர்ந்திருந்த டாக்டர் தன் கேள்வியை வீசிவிட்டு, பதிலுக்காக இன்னும் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். சட்டென நினைவு வந்தவன், “தெரியலையே சார். நீங்க கொடுத்த மருந்துதான் காரணமா இருக்கும்” என்றேன்.
நான் சொன்ன பொய்யை ரசித்து சிரித்தபடி, அவர் அடுத்த மருந்துசீட்டை எழுதிக் கொடுக்க ஆரம்பித்தார்.


3 Comments on “ஆர்.வெங்கடேஷ்/நீரிழிவுக்கு உண்மையான மருந்து”

  1. உங்கள் அனுமானங்கள கேட்க நன்றாக உள்ளன. ஆனால் வழி தெரியாத பறவையாக அனைவரும் தவிக்கிறோம். எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலை! நீங்கள் குறிப்பிட்டதனையும் செய்து பார்தது விடலாமே!! 👏👏👏

  2. மீண்டும் ஒரு முறை வேறு லேப்பில் செக் செய்து பாருங்கள். சில சமயம் இப்படித்தான் நம்மை அறியாமலேயே கூடும் குறையும் இன்னொரு முறைசெக் செய்தால் வழக்கமான ரீடிங்க்ஸ் வரும்.

  3. சார், வருத்தமான விஷயம் சத்தான உணவு சாப்பிட்ட இந்தியர்களை மாற்றியதில் பெரும் பங்கு ஆங்கிலேயர்களுக்கு உண்டு. உதாரணமாக காலம் காலமாக சாப்பிட்டு வந்த வேர்க்கடலை சாப்பிட்டால் பித்தம் வரும் என்ற விஷயம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவன் நான். ஆம் என் மனைவி பாதிக்கப்பட்டு 19/3/26காலமானார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன