
தெருவின் ஒதுக்குப்புறத்தில் இருந்தது அந்த வீடு. ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற ராமசாமி வசித்து வந்த வீடு.
ஒரு கால் ஊனமுற்ற போதிலும், அவர் சாய்வு நாற்காலியில் அமர்ந்து இருக்க, அருகில் ஒரு முக்காலியில் ஒரு சொம்பில் தண்ணீர், இரண்டு மணிக்கு ஒரு முறை சுட சுட தேநீர் என்று தந்து அவருடைய மனைவி மஞ்சுளா நன்றாக கவனித்துக்கொண்டார்.
காலையில் இருந்து இரவு வரை, குறைந்தது ஆறு நபர்கள் தரையில் விரிக்கப்பட்ட ஜமுக்காளங்கள் போன்றவற்றில் அமர்ந்து கதைகள் கேட்டுக்கொண்டு இருப்பார்கள். சுற்று வட்ட நான்கு கிராமங்களின் பிரதிநிதியாய் இந்திய ராணுவத்தில் வேலை பார்த்து பெருமை சேர்த்தவர் ராமசாமி. மணாலி, ஜம்மு, லே, லடாக், அசாம், டார்ஜிலிங், போன்ற இடங்களுக்கு அவர் சென்று வந்த கதைகள் அவர்களுக்கு வந்து சேரும்.
அவர்களோடு கதைகளை கேட்டு வந்தவன் – கார்த்தி. ராமசாமி வளர்த்து வந்த நாய். கொடுப்பதை உண்டு, வீட்டு வாசலில் காவல் காத்த விசுவாச ஊழியன் அவன்.
ராமசாமி இறந்து பன்னிரண்டு மாதங்கள் ஆகின்றன.
மனித கூட்டங்கள் நின்று போயின. ராமசாமி வருவார் என்று கார்த்தி நம்புகிறான். சுவற்றில் மாட்டியிருந்த தபால் பெட்டியையும் கவனிக்க அவன் தவறுவதில்லை.
(125 Words)
