
வேணுகோபாலன் கொஞ்சம் கண்டிப்பானவர்தான்.மனைவி வத்சலா,
மகள் பத்மலோசனி இருவருக்கும் அவரைக் கண்டாலே ஒரு நடுக்கம்தான்.
நேராகப் பாத்து பேச மாட்டார்கள்.
அம்மா வத்சலா,”பத்மா, உன் அப்பாவை உனக்கு நல்லா தெரியும்,அப்படியும் எப்படிடீ இந்த மாதிரி துணிச்சலா ஒரு காரியத்தை செஞ்சே”
சட்னு பூஜை அறையிலிருந்து வந்த வேணுகோபாலன்,”என்ன நடக்குது இந்த வீட்டுல”உறுமினார்.
“இல்லைங்க எதிர் வீட்டு பையன் கதிரோட அம்மா நம்ம பொண்ணை கேட்டு வரேன்றாங்க பிள்ளைங்க விரும்புதுங்களாம்.”
“அவ்வளவு தைரியம் இருக்குதா அந்த பயலுக்கு, என் கீழே ப்யூனா வேலை பாக்கற பய எனக்கு சம்பந்தியாக ஆசைப் படறானா?”
“இல்லைங்க குழந்தைங்கதான்.”
“தொலைச்சு தலை முழுகிடுவேன்”
மறுநாள் காலை வெந்நீர் விளாவி வைக்க மனைவியைக் காணோம்,பத்மானு சத்தம் கொடுத்தா அவளைக் காணோம்.
வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தார் எதிர்வீட்டு பச்சைக் கதவு மூடி இருந்தது.
சுவரில் தபால் பெட்டி சிரித்தது.அதில் ஒற்றை பேப்பர் தெரிந்தது.தெருவைத் தாண்டி அந்த பெட்டியிலிருந்த பேப்பரை எடுத்தார்,பிரித்தார் “போறோம்
தேடாதீங்க”அவ்வளவுதான்.
தினமும் வந்து எதிர் வீட்டை பாக்கறார்15 வருஷமா,மூடின கதவு திறக்கவே இல்லை.பத்மலோசனி வளத்த குட்டி நாயா அது?காத்திருக்கு அதுவும்.
