
தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த கவிதா கண் கலங்கினாள்.அந்தக் கோர விபத்து மக்களை கொத்துக் கொத்தாய் மண்ணுக்குள் அமுக்கியது.
நேபாளத்தில் மண்ணை வாரி இறைத்து, சேற்றை அள்ளிக் கொண்டு வரிந்து கட்டிக் கொண்டு வந்த வேகத்தில் வாகனங்களை அடித்துச் சென்றது. கதிகலங்க வைத்தக் காட்சிகள்.
சுற்றுலா சென்றவர்கள் ஏராளமானோர் திரும்பவில்லை. கண்ணீருடன் உறவினர்கள்.
கவிதாவிற்கு இன்னமும் நன்றாக நினைவிருந்தது. 2004ல் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட பெற்றோர், சொந்த பந்தங்கள், இடிந்து விழுந்த வீடு.
இன்றளவும் இவளுக்கு அந்த வீட்டை சரிசெய்ய வசதியில்லை. பூட்டிய வீட்டைப் பார்த்தவாறே தினமும் வேலைக்குச் செல்வாள். அம்மா அப்பாவின் நினைவுச் சின்னம் அது அவளுக்கு.
அந்த வீட்டில் பெற்றோருடன், அப்பத்தாவுடன் தம்பியுடன் வாழ்ந்ததெல்லாம் மலர்ந்த நினைவுகளாக நெஞ்சில் தங்கியவை. அம்மா வளர்த்த நாய் மட்டும் அந்த பூட்டிய வீட்டிலேயே காத்திருக்கிறது பாவம்.
அந்த வீட்டை விற்கவும் மனமில்லாமல், இடித்துக் கட்டவும் வழியில்லாமல் இரண்டு தெரு தள்ளி கணவன் குழந்தைகளோடு வாழ்கிறாள்.
