
காலத்தின் தடங்கள் படிந்திருந்த அந்த பழைய வீட்டின் சாயம் உதிர்ந்த பச்சை நிறக் கதவு மட்டும் ஏனோ எப்போதும் பூட்டியே இருந்தது. சுவரில் மங்கியிருந்த பழைய தபால்பெட்டி விழுகவா வேண்டாமா என்று ஊசாலாடிக் கொண்டு இருந்தது. வாசலில் காவலாளியைப் போலப் படுத்திருக்கும் நாயின் வயிறு ஏறியிறங்குவதானால் மட்டுமே அது உயிரோடு இருக்கிறது என்று நம்பலாம்.
அந்த வழியாகப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பூட்டியே இருக்கும் அந்த வீட்டின் அருகில் செல்லாமல், பயத்துடன் சற்று தள்ளியே நடப்பார்கள்.
ஓவியா, தினமும் அந்த வீட்டைப் பார்த்தபடியே செல்வாள். “இந்த வீட்டில் யாருமே இல்லையா?” என்ற கேள்வி அவள் மனதில் நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
ஒருநாள் மாலை, நல்ல மழை. பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த ஓவியா, அந்த வீட்டின் கதவருகே ஒரு வயதான பாட்டி அமர்ந்திருப்பதைப் பார்த்தாள்.
“பாட்டி, நீங்கள் இங்கேதான் வசிக்கிறீர்களா?” என்று கேட்டாள்.
மெதுவாகச் சிரித்த பாட்டி “இது என் வீடு. தாத்தா இறந்த பிறகு, மகனுடன் செல்ல வேண்டிய கட்டாயமான சூழல். ஆனால் மனம் முழுக்க இங்கேதான். அதான் பார்த்து விட்டுப் போகலாம் என்று வந்தேன்” என்றார்.
“இப்பவும் கதவு ஏன் பூட்டியிருக்கிறது, திறக்கலாமே பாட்டி?” என்று ஓவியா கேட்கவும் பாட்டியின் கண்கள் கலங்கின.
“இந்தக் கதவைத் திறக்க வேண்டியவன் என் மகன். அவன் ஒருநாள் திறப்பான் என்று காத்திருக்கிறேன்” சொன்னபடியே புறப்பட்டு விட்டார் பாட்டி.
மறுநாள், ஓவியா அந்த வீட்டின் முன் ஒரு சிறிய கோலம் போட்டாள். மறுநாள் ஒரு பூ வைத்தாள். அவளது அன்பு அந்த வீட்டின் அமைதியை மெதுவாக மாற்றியது. குழந்தைகள் பயமின்றி வீட்டைக் கடந்து பள்ளிக்குச் சென்றனர்.
ஒரு மாலை, அந்த வீட்டின் முன் ஒரு கார் வந்து நின்றது.
காரிலிருந்து இறங்கியவர், ஆர்வமாகப் பார்த்த ஓவியாவிடம் “உன்னால் மட்டுமே இந்த வீடு அழகாக மாறியது” என்றபடியே
பல ஆண்டுகளாகப் பூட்டியிருந்த கதவைத் திறந்தார்.
அந்த வீட்டிற்குள் மெல்ல வெளிச்சம் பரவியது.
பட்டாபிராம், சென்னை – 600072

மனமார்ந்த நன்றிங்க ஐயா