அப்புசிவா/மனப்பூட்டு


“சாவியெல்லாம் தரமுடியாது. அவனை முதல்ல என் கண்முன்னால இருந்து போகச்சொல்லு”

இந்த ஆண்டும் அப்பா கத்துவதும், சித்தப்பா வாசலில் சோகமாக உட்கார்ந்திருப்பதும் வழக்கமான வகையில் நடந்துவிட்டது.

கிராமத்தில் பாட்டி எல்லோருக்கும் சமமாகத்தான் சொத்தை பிரித்துக்கொடுத்தாராம். அவர் இருந்த இருநூறு சதுரஅடி வீடு மட்டும் பொது. பாட்டி இறந்தபோது ஏதோ மரியாதை குறைவாக சித்தி பேசிவிட்டதாக அப்பாவின் குற்றச்சாட்டு. வீட்டை பூட்டி சாவியுடன் வந்துவிட்டார்.
அப்பாவுக்கோ சித்தப்பாவுக்கோ சொத்தில் எப்போதும் ஆசை இல்லைதான்.

“சித்தப்பா, நீங்களாவது விட்டுக்கொடுக்கலாமில்ல? இப்போ எதுக்கு அந்த சாவி?” என்றேன்.

“என் பழைய டிரங்கு பெட்டி அங்கே இருக்குபா. அதை எடுத்துட்டு சாவியை திரும்ப தந்திடுறேன். அதான் பத்து வருஷமா கெஞ்சறேன்”

பாவமாக இருந்தது. அப்பாவின் ஈகோ கடைசிவரை மாறப்போவதில்லை. சித்தப்பாவுடன் கிராமத்துக்கு நானும் போனேன்.

நாய் படுத்துக்கிடந்தது. துருப்பிடித்த பூட்டு. ஒரே அடியில் உடையலாம்.

கல்லைத்தேடி வீட்டைச்சுற்றி வந்தபோது திடுக்கிட்டேன். பக்க சுவர்கள் எல்லாம் விழுந்து ஆடுகள் வீட்டுக்குள் போய்வந்தன.

“சித்தப்பா… இப்படி போயி உங்க பெட்டியை எடுக்கலாமில்ல?”

“வாசல் வழியாதான் போவேன் தம்பி” என்றார் பாவமாக.

இவர் தலையிலும் ரெண்டு போட்டால் என்ன என்று தோன்றுமா இல்லையா.

(122 words)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன