எஸ் வி வேணுகோபாலன்/பேச்சற்றுப் போகும் தருணம்

உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்
தரையை
நான் உள்ளே நுழைகையில்

உறவினர் நிரம்பி இருந்தனர்

அவர் அருகே இருந்த
நாற்காலியில்
போய் அமர்ந்தேன்

என் கைகளை
இறுகப் பற்றிக் கொண்டது அவரது கரங்கள்

அகன்று விரிந்த கண்களால் வினவுகிறார்
யார் சொன்னது
எப்படி தெரியும்

தெரியும்
உங்களோடு
இந்தத் தருணத்தில் இருக்க வந்தேன் என்பதாகக் கரம் பற்றிக் கொள்கிறேன்

அவருடைய
அன்பு மகள்
நெருங்கி வந்து வினவுகிறார்
அப்பாவின் அலுவலக நண்பரா என்று

எப்படி விளக்குவது
எழுபதுகளின் இறுதியில்
இலக்கிய சிந்தனையில்
இன்னோரன்ன கூட்டங்களில்
சூடான விவாதங்களில்
இதமான தேநீர்க் கடைகளில்
ஜோல்னா பையர்களாக அலைந்த காலத்தை
இவர் எழுத்தைக் கொண்டாடியதை என்கிறேன்

வற்றி
ஒட்டிப் போன
கன்னங்களில்
வழிகிறது
சாமாவுக்கு
கண்ணீர்
தாரை தாரையாக

தொண்டையைக் காட்டுகிறார் ஒரு குறிப்பாக –
சொல்லப்பட்டு இருந்தது ஏற்கெனவே
பேச்சற்றுப் போய்விட்டது சில காலமாக

பனிப்பெட்டி திறக்கப் பட்டுக்
கீழிறக்கிக்
கிடத்தப்பட்டு இருக்கிறார்
நெடும் பயணம்
உடன் நடந்தவள்
தனது
தனிப் பயணத்திற்குத் தயாராக

உற்றுப் பார்த்துக்
கொண்டிருக்கிறார் தரையை, சாமா
பேச்சற்று…

5 Comments on “எஸ் வி வேணுகோபாலன்/பேச்சற்றுப் போகும் தருணம்”

  1. மிக மிக வருத்தமாக இருக்கிறது. துணை யை இழந்த சாமாவுக்கு ஆறுதலாக வார்த்தை ஏதும் வரவில்லை

  2. இணையரை இழந்த அய்யாவிற்கு ஆழ்ந்த இரங்கல் 😪”தாயின் வாழ்வு மறைந்து போனால் தந்தைக்கு என்று யாருமில்லை ” என்ற பார் மகளே பார் திரைப்படத் பாடல் நினைவிற்கு வருகிறது 🌹🙏

  3. இணையரை இழந்து வாடும் அய்யா சாமாவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் 😪
    “தாயின் வாழ்வு மறைந்து போனால் தந்தைக்கு என்று யாருமில்லை” என்ற பார்மகளே பார் திரைப்படப் பாடல் நினைவுக்கு வருகிறது 🌹🙏

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன