
பேரன்பின் சுகந்தம்
(முதல் தொகுப்பு)
WriterSCafe – எழுத்தாளர் சங்கமம் – குழுமம் எழுத்தாளர்கள் எழுதிய இருபது சிறுகதைகளின் தொகுப்பு
எதிர்பாராதது
(கஸ்தூரி குருசாமி)
“நான் இரவு என் நண்பர்களோடு சினிமா போகிறேன்.”
“டேய், நாம மதியத்திற்கு மேல் கிராமத்துக்குப் போறோம்.”
“பரவாயில்லை. நான் இங்கே இருக்கிறேன். ஐயோ அது சுத்தப் பட்டிக்காடு. வைஃபை கிடைக்காது. ஒரு நல்ல தியேட்டர் கிடையாது. நல்ல ஹோட்டல், பிசா ஹட் எதுவுமில்லை.”
“டேய் அப்பா கோபப்படுவார். வருடத்திற்கு ஒருமுறையாவது தாத்தா பாட்டியை போய் பார்க்க வேண்டாமா? அவர்களால் பயணம் செய்து வரமுடியாதல்லவா? இரண்டு நாள்தானே கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா.”
“என்னால வர முடியாது.” 15 வயது மகனின் பிடிவாதம் அம்மாவை கலங்கடித்தது.
கணவனிடம் சொன்னால் கோபப்படுவாரே. என்ன செய்வது? இங்க இருந்தா சாப்பாட்டுக்கு என்ன செய்வான்? வீட்டு சாவியை கொடுத்துச் சென்றால் பத்திரமாக பார்த்துக் கொள்வானா? வெற்றிமாறன் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்ததும் “மகன் ஊருக்கு வரவில்லை” என்றாள்.
”ஏன் துரைக்கு சென்னை தான் பிடிக்குமோ? கழுதைக்கு தெரியுமா? கற்பூர வாசனை. இங்கிருந்தால் சாப்பாட்டுக்கு என்ன செய்வான்? ஒரு காப்பி கூட போட தெரியாது,” என்று கூறியபடியே.அறைக்குச் சென்றார்.
பெற்ற வயிறு கேட்கவில்லை. 3 மணிக்கு.புறப்பட்டால் தான் 9 மணிக்கு அங்கே போய் சேர முடியும். இப்போது மணி ஒன்று. அவசர அவசரமாக கொஞ்சம் இட்லி அவித்து, புளியோதரையும் செய்து வைத்தாள்.
“அப்பா எனக்கு சயன்ஸ் நிறைய படிக்க வேண்டியிருக்கு. அதனால தான் நான் வரவில்லை,” என விளக்கம் கொடுத்தான்.
“ஏன், அங்கிருந்து படிக்க வேண்டியது தானே?”
“ஞாயிறு இரவு வருவோம். ரொம்ப களைப்பா இருக்கும். அடுத்த முறை கண்டிப்பாக வருகிறேன்,” என்றான். சரி பையன் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது தான் என வெற்றிமாறன் மனைவி, மகள் மூவரும் கிராமத்திற்கு சென்றனர்.
தாத்தா பாட்டிக்கு ரொம்ப மகிழ்ச்சி. மூவரையும் கட்டித்தழுவி உச்சி முகர்ந்தாள். தள்ளாத வயதிலும் பாட்டி பொரிவிளங்காய் உருண்டை, உழுந்தம்கஞ்சி, பால்கொழுக்கட்டை என கிராமத்து சத்துள்ள உணவுகளை செய்து கொடுத்தார். இரவு வெகு நேரமாய் பாட்டி மடியில் படுத்து பேத்தி கெளரி கதை கேட்டாள். அப்பாவின் சிறுவயது சேட்டைகள், விருப்பம், நண்பர்கள் என விடிய விடிய கதை கேட்டுவிட்டு நடு இரவுதான் பாட்டியும் பேத்தியும் தூங்கினார்கள்.
காலை சிற்றுண்டி முடிந்ததும், பேத்தியை அழைத்துக்கொண்டு பக்கத்து வீட்டில் இருக்கும் சம வயதுள்ள பெண்களோடு பாண்டி, பல்லாங்குழி, தாயம் என விளையாட வைத்தாள். கௌரிக்கு தெரியாத விளையாட்டுக்கள் இவை. இரண்டு நாட்கள் போனதே தெரியவில்லை. ஞாயிறு 4 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு சென்னை வந்து சேர்ந்தனர்.
வீட்டில் மகன் கௌசிக்கை காணவில்லை. வீடு பூட்டியிருந்தது. கைபேசியில் அழைத்தால் பதில் இல்லை. பயந்து போன வெற்றிமாறன் பக்கத்து வீட்டாரிடமும், உறவினரிடமும் விசாரிக்கத் தொடங்கினார். ஒருவருக்கும் தெரியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் இரவு முழுவதும் கார் ஷெட்டில் இருந்தனர். அவனைப் பற்றிய கவலையில் தாய் அழுது கொண்டே இருந்தாள்.
காலையில் வெற்றிமாறன் காவல் நிலையத்திற்கு போய் புகார் கொடுத்து விட்டு, வீட்டுக்கதவை திறக்க ஒருவரை அழைத்து வந்தார். அவர் கொண்டுவந்த சாவிகள் ஒன்றுமே பூட்டை திறக்கவில்லை. மர ஆசாரியை அழைத்து வந்து பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். மகன் எப்போது காணாமல் போயிருப்பான் என அறிவதற்காக. அம்மா சமையல் கட்டில் போய் பார்த்தால், அங்கே இட்லி, புளியோதரை எல்லாம் சாப்பிட்டு அப்படி அப்படியே போட்டு வைத்திருக்கிறான்.
படுக்கை அறையில் சிகரெட் துண்டுகள், சிறு சிறு பிளாஸ்டிக் பொட்டலங்கள் இருப்பதை பார்த்ததும் வெற்றிமாறனுக்கு தூக்கி வாரிப்போட்டது. “ஓ, இதனால் தான் நான் வரமாட்டேன், என்று சொன்னானோ? என்று யோசித்தார். ஆனால் உண்மையில் அவனுக்கு எந்த பழக்கமும் இல்லை என்பது அம்மாவுக்கு தெரியும். காவல் நிலையத்திற்கு போன் செய்து வீட்டில் கண்ட ஒவ்வொன்றையும் கூற, காவலர்கள் வீட்டுக்கு விரைந்தனர்.
சயன்ஸ் படிக்க வேண்டும் என்று தானே சொன்னான்? ஒரு வேளை Combined ஸ்டடி போட்டு இருப்பானோ என்று நினைத்து அவன் நண்பர்கள் வீட்டிற்கு சென்று கேட்டால், அங்கேயும் போகவில்லை. கௌஷிக் பற்றி நண்பர்களிடம் கேட்டதற்கு அவனைப் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை.
மனைவி தினமும் வேலை முடிந்து வீட்டுக்கு வர 6 மணி ஆகும். கௌரி பெண்குழந்தை என்பதால் வீட்டில் தனியாக உட்கார வேண்டாம் என்று பள்ளியின் அருகில் உள்ள ஒரு டியூஷன் சென்டரில் சேர்த்திருந்தனர். வெற்றிமாறன் வரும்போது அவளை அழைத்து வருவார். கௌஷிக் ஆண்பிள்ளைதானே என்று அலட்சியமாக இருந்தனர்.
எங்கு தேடியும் கௌஷிக்கை காணவில்லை. காவல்துறையும் தேடி அலைந்தனர். ஏதாவது சின்ன தடையம் கிடைத்தால் கூட கண்டுபிடிக்கலாம். என்ன செய்வது எனத் தெரியவில்லை. பெற்றோர்கள் கவலைப்பட்டனர். கௌரி திடீரென, ”அப்பா, அண்ணன் ஸ்கூல் பேக் இங்க இருக்கிறது,” என்றதும், அதில் பார்த்தால் ஏதாவது தடயம் கிடைக்கும் என நினைத்தனர். அவன் பள்ளிக்கு கொண்டு போகும் புத்தகங்களை வெளியே எடுக்கவில்லை. என்ன நடந்தது என குழம்பினர். இதற்குள் பக்கத்து வீட்டார், உறவினர் என எல்லோருக்கும் செய்தி போய்விட்டது. மாற்றி மாற்றி கைபேசியின் ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது.
கெளஷிக்காக அம்மா எல்லா கோயிலுக்கும் வேண்டிக் கொண்டாள். அந்த ரோட்டில் ஒருவர் விடாமல் எல்லோரிடமும் கௌஷிக்கை எங்காவது பார்த்தீர்களா என கேட்கத் தொடங்கினார். எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை.
ரெண்டாவது நாள் வேலைக்காரி மாடியில் துணி காயப் போட போனபோது எங்கோ முனகல் சத்தம் கேட்கறது என்று கூறவே, வெற்றிமாறன் மொட்டை மாடிக்கு விரைந்தார். டேங்கில் இறங்கி இருப்பானோ எனப் பார்த்தபோது அதில் தண்ணீர் நிறைய இருந்தது. கௌஷிக்கை காணவில்லை. டாங்கின் வெளிப்புறம் ஒரு திண்டு போலிருந்த இடத்தில் இருந்து முனகல் சத்தம் கேட்கவே அங்கு பார்த்தபோது அவன் சுருண்டு கிடந்தான். உடனே அவனை தோளில் போட்டுக்கொண்டு படி இறங்கி வந்தார். டாக்டர் வந்து பார்த்தார். அவன் சுயநினைவில்லாது இருந்தான்.
டிரிப்ஸ் ஏற்றி ஊசி போட்டு விட்டு, “அவனிடம் ஒன்றும் கேட்காதீர்கள். அவன் சுயநினைவு வந்து நார்மல் ஆன பின்பு விசாரிக்கலாம். அவனோடு அன்பாக பேசுங்கள்,” என்று கூறிச்சென்றதால் பெற்றோரும் அவனை ஒன் றும் கேட் க வில்லை.
வெற்றிமாறன் காவல்நிலையத்தில் அவன் கிடைத்து விட்ட தகவலை கூறினார். 2 மணி நேரத்திற்கு பின்பு அவன் கண் விழித்தான். அம்மாவை கட்டிப்பிடித்து கொண்டு அழுதான்.
“அம்மா நான் ஒன்றும் செய்யவில்லை,” எனக் கூறியபடியே இருந்தான். அப்பாவை பார்த்ததும், நடுங்கிக்கொண்டே, அம்மாவை கட்டிப்பிடித்து அழுதான். அவனுக்கு சாப்பாடு ஊட்டிவிட்ட பின்பு, ”ஏன் பயப்படுகிறாய்?” எனக் கேட்க.
“அம்மா, நரேன் நம் வீட்டு சாவியை எடுத்துக்கொண்டு போய்விட்டான்.”
“அவன் ஏன் எடுத்துக்கொண்டு போய்விட்டான்?”
“நீங்க போனதும், சினிமாவுக்கு, நானும், நண்பர்களும் போனோம். திரும்பி வரும்போது நீங்கள் ஊருக்கு போன செய்தியைக் கூறவும், எல்லோரும் இன்று உங்கள் வீட்டில் ஜாலியாக இருப்போம் என்று வீட்டுக்கு வந்தனர். இரவு, நீங்கள் செய்த இட்லி புளியோதரை சாப்பிட்டுட்டு பெட்ரூம்க்கு வரவும், ஒருவன் சிகரெட்டை பற்ற வைத்தான். எங்க அப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்காது என்றேன். என்னையும் வற்புறுத்தினான். முடியாது என்றதும் சரி, உனக்கு ஸ்வீட் கொடுக்கிறேன் என்றான். ஸ்வீட் தானே என சாப்பிட்டேன். பின் தூங்கி விட்டேன். மறுநாள் காலை, “ஸ்வீட் வேண்டுமா?” என்றான்.
அதை சாப்பிட்டதும் என்னுள்ளே ஏதோ செய்தது. என்னிடம், ”நீ பலே ஆள்டா! சிகரெட் பிடிக்க மாட்டேன் என்கிறாய். ஆனால் டிரக்ஸ் மாத்திரம் பிடிக்குது.” என்றதும் நான் அவனுடன் சண்டை போட்டேன். என் வாயில் மீண்டும் திணிக்க வந்தான். வாசலுக்கு ஓடினேன். அவன் என்னைப் பிடிக்க தொடர்ந்து வரவும் அவனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக முற்றத்திலுள்ள தோட்டத்தில் இருந்து மண்ணை அள்ளி அவன் கண்களில் போட்டு விட்டு மாடிக்கு ஓடினேன். என்னை அவன் பார்க்கக்கூடாது என்பதால் டேங்கின் பின்புறம் படுத்து விட்டேன். வெகு நேரமாகியும் அவன் வீட்டை சுற்றி நான் இருக்கிறேனா எனப் பார்த்தான். என்னை கண்டுபிடிக்க முடியல என் பதால், ”எப்படி வீட்டுக்குள் போவாய் என்று பார்க்கிறேன்,” என்று வீட்டை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு போய்விட்டான். “சத்தியமாக நான் தப்பு செய்ய வில்ல, அம்மா,” என பெருங்குரல் எடுத்து அழுதான்.
ஏற்கனவே காவல்துறையில் புகார் கொடுத்திருந்ததாலும் வீட்டில் போதைப்பொருள் கிடைத்ததாலும் அவனை விசாரித்தாக வேண்டும் என்றும் காவல் நிலையம் அழைத்துப் போக வேண்டும் என்றும் காவலர் கூறினார. மேலும், “இப்போது விட்டுவிட்டால், எதிர்காலத்தில் உங்கள் பையன் உங்களுக்கு இல்லாமல் போய்விடுவான். தயவு செய்து ஒத்துழையுங்கள்,” என்றார்.
வெற்றிமாறன் கௌஷிக்கை அழைத்துக் கொண்டு காவல் நிலையம் போய் நடந்ததை கூறி, நரேனின் முகவரியையும் கூறினார். காவலர்கள் நரேன் வீட்டுக்கு போய் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து மிரட்டி விசாரிக்கவும் பல உண்மைகள் வெளிவந்தன.
நரேன் பள்ளிக்கு பேருந்தில் செல்லும்போது ஒருவன் “ஏன் காலையிலேயே டல்லா இருக்கிறாய்? படிப்பில் எப்படி கவனம்வரும்? இந்த சாக்லேட் சாப்பிடு,“ என கொடுத்திருக்கிறார். சாக்லேட் பிடிச்சிருந்தது. மறுநாளும் இது தொடர்ந்தது. ஐந்து நாட்களுக்கு பின் சாக்லேட் தருவதை நிறுத்தி விட்டார். அந்த சாக்லேட் வேண்டும் போலிருந்தது. அடுத்த நாள் கேட்டதற்கு ஓசி சாக்லேட் எத்தனை நாள் தருவேன்? இது விலை கூடியது. ₹200 கொண்டு வா ரெண்டு சாக்லேட் தருகிறேன் எனக் கூறவும். வீட்டில் திருடி ₹100 கொடுத்து சாக்லேட் வாங்கிக் கொண்டான். இப்போது அது இல்லாமல் இருக்க முடியவில்லை. மேலும் நண்பர்களிடம் விற்றுத் தந்தால் இலவசமாக 10 சாக்லேட் தினம் தருகிறேன் என்றார்.
இப்போது கௌஷிக்கை இந்த வலையில் விழ வைக்க, அவனை பணிய வைக்க நடந்த சம்பவம் தான் மேற்கூறியது. காவலர் அவன் வழியே சென்று அந்த போதைக் கும்பலை கையோடு பிடித்தனர். கெளஷிக் அங்கிருந்தால் பயப்படுவான் என்று கூறிஅவனை வீட்டுக்கு அழைத்து வந்தார்.ஆனால் விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் வர வேண்டும் என்று கூறி அனுப்பினர்.
மறுநாள் கௌசிக் பள்ளிக்கூடம் போக வேண்டாம் என பெற்றோர் கூற நான் கட்டாயம் போவேன் என்று பிடிவாதம் பிடித்துச் சென்றது வெற்றிமாறனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
உண்மையில் அவன் போதை சாக்லேட் சாப்பிடவில்லை என்றால் ஏன் போக வேண்டும்? அவனை பள்ளிக்கு அனுப்பி விட்டு அவனைப் பின் தொடர்ந்தார். அவன் நேராக பள்ளி முதல்வரை சென்று பார்த்து நடந்ததை ஒன்று விடாமல் கூறினான்.
“இங்க எந்த மாணவர்களுக்கு இந்த போதை கலந்த சாக்லேட் கொடுத்திருக்கிறான்,” என்று அவர் கேட்கவே எனக்குத் தெரியாது. ஆனால் அவன் பள்ளிக்கூடம் வந்ததும், சிலர் அவனோடு செல்வதைப் பார்த்திருக்கிறேன் என்றான்.
“சரி, நீ ஒன்று செய். நான் கடையிலிருந்து கொஞ்சம் சாக்லேட் வாங்கித் தருகிறேன். நரேன், இந்த சாக்லேட்டை கேட்பவர்களுக்கு கொடு என்று கூறினான்.” எனக் கூறிஅவர்களிடம் கொடுக்கும் போது, அவர்கள் எல்லோரையும் பிடித்து விடலாம் என்று கூறி அதன்படியே செய்து அந்த மாணவர்களை பிடித்து, அவர்கள் பெற்றோர்களை வரவழைத்து விஷயத்தை சொன்னார்.
பெற்றோர்கள் ரொம்பவும் அதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால் தலைமை ஆசிரியர், ‘தெரியாமல் குழந்தைகள் செய்த தவறுக்கு தண்டனை கிடையாது. மேலும் செய்தி வெளியில் பரவாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இனி உங்கள் குழந்தைகளை தயவுசெய்து கண்காணியுங்கள்,” என்றார்.
மேலும், “இதுபோல் ஏதாவது தவறு செய்தால் காவலர்களிடம் குழந்தைகளைப் பிடித்துக் கொடுப்பேன்” என்றார். தங்கள் குழந்தைகளை காப்பாற்றிக் கொடுத்த கௌஷிக்கை பாராட்டி பரிசு கொடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியரிடம் அந்த பெற்றோர்கள் கூறினார்கள். அதன்படியே அவரும் செய்தார்.
மாணவர்கள் மனது வைத்தால் போதைப் பொருட்களை அடி யோடு அழித்துவிடலாம்.
போதை பொருட்களை பயன்படுத்த மாட்டோம். அப்படி பயன்படுத்துவதை கண்டால் உடனே தகவல் கொடுப்போம் என சத்தியம் செய்யுமாறு கூறினார். அனைத்து மாணவர்களும் சத்தியம் செய்து கொடுத்தார்கள். மாணவர்கள் நினைத்தால் நடக்காததும் உண்டோ?
கெளஷிக் போதைப்பொருட்களை தடுக்க என்னால் ஆன உதவியை இந்த அரசாங்கத்திற்கு செய்து கொடுக்க வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டான்.
அனுபவங்கள் தானே பாடங்கள்.
கஸ்தூரி குருசாமி
திருமதி கஸ்தூரி குருசாமி சிறுகதைகள், நாவல்கள் மற்றும் கட்டுரைகள் எழுதுவதில் அதிக ஆர்வம் உள்ளவர். பல சிறுகதைகள் எழுதியுள்ள இவர், பாவைப்பாடல்கள், முதுமையில் இனிமை, அன்றும் இன்றும், சிறகடிக்க ஆசை மற்றும் மலர்வனம் என்ற ஐந்து புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். தற்போது சில புத்தகங்கள் எழுதியும் வருகிறார்.
