வவேசு/“பிரேக்கிங் நியூஸ்”

“பிரேக்கிங் நியூஸ் “

அண்டச் சிணுங்கலில்
ஒரு பின்னிரவுப் போதில்
உலக விலங்குகள் எல்லாம்
மௌனம் உடைந்து பேசத் தொடங்கின.

மொழியறிவும். படிப்பறிவும்
வாசகத் தன்மையும் வந்து சேர்ந்தன.

இதுவரை தம்மைப் பற்றி
மனிதர்கள் என்ன எழுதி உள்ளனர்
என்றெடுத்துப் படிக்கத் தொடங்கின.

சமநீதி பேசும் பகுத்தறிவாளர்கள்
நமெக்கென்ன நீதி
வழங்கி உள்ளார் என
வாதம் செய்ய ஆரம்பித்தன;

ஆடு மாடு பன்றி கோழிகள்
அனைத்தும் ஒருபுறம் கூடிப் பேசின.

“ உண்ணும் தட்டில் என்ன வைப்பது என்பதை
நான்தான் தீர்மானிக்க வேண்டும்
பிறர் அல்ல “

என்றொரு அறிவிலி பேசியிருக்கிறான்.
“ என்ன வேண்டுமானாலும் நீ வைத்துக் கொள்;
ஆனால்
என்னை வைப்பதற்கு உனக்கென்ன உரிமை?”
கடுங்கோபத்துடன்
கனத்த குரலில் காட்டெருமை கேட்டது.

ஆடு மாடு பன்றிகள் கோழிகள்
அனைத்தும் அதனை வழி மொழிந்தன.

நான் என்ன நய வஞ்சகனா ?
அப்படித்தானே எழுதிவைத்துள்ளீர்கள்;
நரி கேட்டது.

என் சிறகென்ன ? பொல்லாச் சிறகா ?
வந்து பதில் சொல் என்று
வான்கோழி கூவியது.

“எச்சில் பண்டத்தை எனக்கேன் வைக்கிறாய் ?
எதிர்ப்புக் குரலில் கேட்ட காக்கை
“எங்களுக்கும் சுயமரியாதை உண்டு”
என்று கரைந்தது.
எதிர்வீட்டுப் பெண்ணை ஏளனம் செய்தது.

கொம்பும் நகமும் கூரிய பற்களும்
வலிமையுமற்ற மனிதப் பதர்களை
விட்டு வைப்பது கூடாது என்று
சிங்கம் புலி கரடி வகைகள்
சீற்றம் கொண்டு உறுமித் தீர்த்தன.

ஏச்சும் பேச்சும் எதிரணிக் குரல்களும்
உலகம் எங்கும் எதிரொலி செய்து
புதியதோர் போருக்குக்
களம் புகலாயின.

சில கழுதைகளும் குரங்குகளும்
ஒன்றாய் இணைந்து
விலங்குகளுக்கான
புதிய கட்சி ஒன்றையும்
புதிய கொடி ஒன்றையும்
புதிய “சானல்” ஒன்றையும்
தொடங்க இருப்பதால்
மேலதிக அதிரடி விவரங்களை
இணைய வெளிகளில் தடையின்றித் தொடர்க.

சிந்தனையுடன்


02/10/2026

One Comment on “வவேசு/“பிரேக்கிங் நியூஸ்””

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன