ஆர். வெங்கடேஷ்/தூசு!

உங்களில் எத்தனை பேர் இந்தப் பிரச்னையைக் கவனிக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஒவ்வொரு நாள் காலையும் என் எழுதுமேஜைக்கு வரும்போது, என் கண்ணை உறுத்துவது சன்னமான தூசு. மடிக்கணினியை இத்தனைக்கும் மூடித்தான் வைத்திருக்கிறேன். அதைத் திறந்து, விரல்களால் தட்டச்சு பலகையையும் அதன் ஓரங்களையும் தடவினால், கண்ணுக்கே தெரியாத தூசை கையால் உணர முடியும். மானிட்டரிலும் தூசு மிக மெல்லிதாக படர்ந்திருக்கும். மேஜையின் மேல் கை வைத்தாலும், தூசு தான்.
வாகனத்தை எடுக்கப் போனால், அதன் மீதும் தூசு திரை போட்டிருக்கும். வண்டியோட்டிக்கொண்டு அலுவலகம் சென்று, வண்டியை நிறுத்திய பிறகு, கால்சராயைப் பார்த்தால், தூசு தென்படும். அதுவும் நல்ல நீலநிற கால்சராயில், பழுப்பான தூசு நன்கு தெரியும்.
ஜன்னலைத் திறந்தால், அதன் ஓரங்களில் தூசு. கதவை திறக்க முயலும்போது கைப்பிடியில் முதலில் தட்டுப்படுவது தூசு. சாலையோர தள்ளுவண்டிகளில் விற்கப்படும் பழங்களின் மீது படர்ந்திருப்பது தூசு. மிகப் பெரிய புகழ்பெற்ற அங்காடிகளில் போய், அடுக்குகளில் மளிகை சாமான்களையோ, துணிகளையோ தேடினாலும், முதலில் துருத்திக்கொண்டு ‘நான் இருக்கிறேன்’ என்று ஆஜர் கொடுப்பது தூசு.
இந்தத் தூசுக்குப் பயந்தே, என் அறையின் இரண்டு ஜன்னல்களையும் அடைத்தே வைத்திருக்கிறேன். நான் வெளிச்ச மற்றும் காற்றுப் ப்ரியன். வீடு தேடும்போது, ஜன்னல்கள் நிறைந்த வீட்டையே தேடுவேன். காலையில் எழுந்தவுடன் செய்யும் முதல்வேலை வீட்டின் அத்தனை ஜன்னல்களையும் கதவுகளையும் திறப்பது தான். வெளிச்சமும் காற்றும் தான் வாழ்க்கைகான உயிர் என்பது என் திடமான நம்பிக்கை.
ஒரு நாள் வீட்டைக் கூட்டவில்லை என்றால், அடுத்த நாளே தூசு நிரம்பி, கால் நறநறக்கத் தொடங்கும். மூன்றாவது, நான்காவது நாளும் கூட்டாமல் விட்டால், தூசுக்கு சொந்தக்காரரான கேசமும் சேர்ந்துகொள்ளும். மூலைகள் தோறும் தூசும் அழுக்கும் கேசமும் கூடி கட்டித் தேங்க தொடங்கிவிடும்.
இதற்குப் பயந்தே ஜன்னல்களையும் வாயில்களையும் அடைத்துவிட்டு, மின்விசிறியிலும் ஏ.ஸி.யிலும் குடும்பம் நடத்துகிறேன். இப்படி இருந்தாலும், அண்ணாந்து பார்த்தால், மின்விசிறியின் ஓரங்களில் தூசு கூடுகட்டி குடும்பம் நடத்தும். ஏ.ஸி.யின் பில்டர்களை கழட்டினால், தூசு அட்டை போல் ஒட்டிக்கொண்டிருக்கும்.
இது இங்குதான் என்றில்லை. தண்டையார்ப்பேட்டை, குரோம்பேட்டை, திருவல்லிக்கேணி, விருகம்பாக்கம் என்று நான் வசித்த அத்தனை பகுதிகளிலும் இந்தத் துன்பத்தைப் பார்த்திருக்கிறேன். வெளியூர்கள் போனாலும், வேறு பகுதிகளில் வாழும் நண்பர்கள், உறவினர் வீடுகளுக்குப் போனால், என்னை முதலில் வரவேற்பது தூசு தான்.
தூசு, வீட்டின் தோற்றத்தைப் பொலிவிழக்கச் செய்துவிடும். கம்பீரத்தைக் குலைத்துவிடும். மகிமையை மங்கச் செய்துவிடும். ஒருகாலத்தில் ஆச்சரியமாக பார்த்த வீடுகள் உண்டு. அதன் பின்னே இருக்கும் எழிலும் பார்த்து பார்த்து பராமரிக்கும் அக்கறையும் நினைவில் நிற்கின்றன. ஆனால், காலவோட்டத்தில் எவ்வளவு தான் கவனித்துப் பராமரித்தாலும், ‘நான் விட்டேனா பார்’ என்று அசுர பாய்ச்சலோடு தன் கோரத் தாண்டவத்தை தூசு நடத்தியே தீரும். பொலிவு நிஜமல்ல, அழுக்குத் தான் நிஜம்; அக்கறை நிஜமல்ல, அலட்சியமே நிஜம், உன் பராமரிப்பு ஸ்திரமல்ல, கவனிப்பின்மையே ஸ்திரம் என்று தூசு சொல்லிக்கொண்டே இருக்கிறது.
மனிதர்களின் அழகுணர்வோடு ‘உனக்கா, எனக்கா’ என்று நடக்கும் துவந்த யுத்தத்தில், ஒவ்வொரு முறையும் தூசு தான் வெல்கிறது. எப்பேர்ப்பட்ட மிகப் பெரிய போட்டியில், மோதலில் கூட வெற்றிவாகை சூடிவிடலாம். ஆனால், மிகச் சிறிய தூசுவிடம் நமது வீரம் அனைத்தும் தோற்றுப் போய்விடுகிறது.
தூசுடன் வாழ்வதை நீரிழிவுடன் வாழ்வதுடன் ஒப்பிட்டுக்கொள்வேன். இரண்டுமே நகர நாகரிகம் தந்த கொடைகள். விட்டுப் போகமாட்டேன் என்று அடம் பிடிப்பவை. கவனிக்காமல் போனால் மேன்மேலும் துன்பத்தை விளைவித்துக்கொண்டே இருப்பவை. கடைசியில் வீட்டையே பழுதடையச் செய்பவை.
நாம் எதையும் கவனிக்காமல் அலட்சியமாக வாழ்கிறோம் என்பதற்கு நேரடி உதாரணம், தூசு. அதன் இருப்பை நாம் காணாமல் நகர்ந்துகொண்டே இருக்கிறோம். ஆனால், அது தன் இருப்பை மீண்டும் மீண்டும் திரை போட்டு காண்பித்துக்கொண்டே இருக்கிறது.
என்ன செய்வது இந்தத் தூசை?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன