அனுராதா ஜெய்ஷங்க ர்/சுபாஷும் காந்தியும்

பேரன்பின் சுகந்தம் என்ற சிறுகதை தொகுப்பில் இருந்து ஆறாவது சிறுகதை – திருமதி அனுராதா ஜெய்சங்கர் எழுதிய சுபாசும் காந்தியும். –

“சுபாஷ், நான் ஒரு முடிவு செஞ்சிருக்கேன். நாம பிரேக் அப் பண்ணிக்கலாம்.”
சுபாஷ் அதிர்ச்சியுடன் நிலாவைப் பார்த்தான்.
” ஏய், என்னடி சொல்ற? நீ இல்லன்னா நான் செத்துருவேன்.”
“உன் கூட இருந்தா டென்ஷன்ல நான் செத்துடுவேன். எப்ப யாரை அடிச்சுட்டு வருவ, எந்தப் பஞ்சாயத்து, எந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷன்னு என்னால அலைய முடியாது.”
மதிய உணவு இடைவேளை. அடையாறில் அந்த உணவகத்தில் உள்ளே ஒரு மூலையில் வழக்கமாக உட்காரும் மேசையில் அமர்ந்து இருந்த சுபாஷூம் நிலாவும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தார்கள். சுபாஷ் உடற்பயிற்சி செய்து வலுவேறிய உடலும் வசீகரக் கண்களும் கொண்ட துடிப்பான இளைஞன். சொந்தமாக உடற்பயிற்சிக் கூடமும் நடனப் பள்ளியும் நடத்தி வந்தான். திரைப்படங்களில் நடன இயக்குனர்களுக்கு உதவியாளராகவும் பணியாற்றி வந்தான். தானே நடன இயக்குனர் ஆக முயற்சி செய்து கொண்டிருந்தான். அவனுடைய ஒரே பிரச்சினை அநீதியை, தவறுகளைக் கண்டால் அவன் வாய் பேசுவதற்கு முன் கை பேசி விடும். நிலா வங்கியில் வேலை பார்த்து வந்தாள். அதிர்ந்து பேசாத மென்மையான பெண். இருவருக்கும் பிடித்துப் போனதுதான் ஆச்சரியம்.
“தப்பு செய்றவன தட்டி கேக்கலைன்னா எப்படி திருந்துவான்? நேர்மையான விஷயத்துக்கு தானே எனக்கு கோவம் வருது? ஒவ்வொருத்தரும் எனக்கென்னான்னு போனா? “
“அதுக்கு சட்டம் இருக்கு. காவல் துறை இருக்கு. தேவையான இடங்களில் கூட உன்னோட கோவம் அறத்தோட வெளிப்படணும். ஆத்திரமா வெளிப்படக் கூடாது.”
“என்னது ? அரமா?”
“ஆமா, அதை எடுத்துட்டு வந்து என் தலையைச் சீவு. நான் சொல்றதையே உனக்குப் புரிஞ்சுக்க முடியல. என்ன விட்டுடு சுபாஷ்.”
“ நான் யார் கூடவும் சண்டைக்குப் போகக் கூடாது. அவ்வளவுதானே?”
“புரிஞ்சுக்கோ சுபாஷ், நல்ல விஷயத்தைச் சொன்னால் கூட எப்படி சொல்கிறோமென்பது முக்கியம். நீயானா அடிதடின்னு இருக்கே. நாளைக்கு யாராவது போலீசில புகார் கொடுத்துட்டா உன் எதிர்காலமே பாதிக்கக்கூடும். நான் சொல்லிச் சொல்லி களைச்சுப் போயிட்டேன். உன்னை விட்டு விலகிப் போகிறது எனக்கு வலியா இருந்தாலும் வேற வழியில்லை.”
” நிலா, ப்ளீஸ், எனக்கு ஒரு மாசம் டைம் கொடு. நான் எப்படியாவது மாற முயற்சி பண்றேன்.”
நிலா உள்ளுக்குள் அவனை மிகவும் நேசித்ததால் இல்லை என்று சொல்ல முடியாமல் மௌனமாகவே இருந்தாள். சுபாஷ் அதைச் சம்மதமாக எடுத்துக் கொண்டான். இருவரும் உணவகத்தில் இருந்து அதே கட்டிடத்தில் இருந்த தங்களது வேலை இடங்களுக்குக் கிளம்பினார்கள். நிலாவின் வங்கி முதல் தளத்தில். இரண்டாவது தளத்தில் சுபாஷ் தன்னுடைய உடற்பயிற்சிக் கூடத்தை நடத்தி வந்தான்.
அடையாறில் நிலா வேலை பார்த்த வங்கியின் வீட்டுக் கடன் பிரிவை மற்றொரு இடத்திற்கு மாற்றிய போது அவர்களுக்கு உபரியாக இருந்த இடத்தைத் தன்னுடைய நடனப் பயிற்சிக்காக சுபாஷ் வாடகைக்கு எடுத்துக் கொண்டான். இடையில் ஒரு தற்காலிகமான சுவரை எழுப்பி நடனப் பயிற்சிப் பள்ளியை அமைத்தான். அந்தச் சமயத்தில் தான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாகி இப்போது பிரேக்கப்பில் வந்து நின்று கொண்டிருந்தது.


சுபாஷால் நிலா இல்லாத வாழ்க்கையை யோசிக்கக் கூடமுடியவில்லை. எப்படியாவது தன் குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கோபத்தைச் சமாளித்துக் குறைப்பது எப்படி என்பதைத் தீவிரமாக இணையத்தில் தேடத் தொடங்கினான். ஒன்றிலிருந்து நூறு வரை எண்களை எண்ணுவது, குளிர்ந்த நீரைக் குடிப்பது, அந்த இடத்திலிருந்து விலகிச் செல்வது, வேறு உபயோகமான வழிகளில் கவனத்தைத் திருப்புவது, தியானப் பயிற்சி என்று ஏராளமான யோசனைகள் கொட்டிக் கிடந்தாலும் எதையும் அவனால் சரி வர செய்ய முடியவில்லை. சுணங்கிப் போய் திரிந்தவனை பார்த்துவிட்டு அவனது உதவியாளர் தினேஷ் ஒரு நாள் மெல்லக் கேட்டான்.
“என்ன சுபாஷ்ண்ணா, ஏன் கொஞ்ச நாளா இப்படி டோப்படிச்ச மாதிரியே ஒரு மார்க்கமா இருக்கே?”
சுபாஷ் தனக்கும் நிலாவுக்கும் ஆன பிரச்சினையை சொல்லி என்ன செய்வது என்று புரியாமல் இருப்பதைப் பகிர்ந்து கொண்டான்.
“ நிலா பிரேக்கப் செய்யலாம்ன்னு சொல்றாடா. மனசே சரியில்லை.”
“என்ன காரணம் ? சொல்லலாம்ன்னா சொல்லு.”
“என் கோபம்தான் காரணம். அதைக் குறைக்கச் சொல்றா. என்னால முடியலை;” அழுது விடுவான் போல இருந்தது.
“இவ்வளவுதானே, எங்க அக்காவோட தோழி ஒருத்தவங்க இதுக்கெல்லாம் தான் ஏதோ கிளாஸ் நடத்துறாங்க. நீ அவங்கள போய் பாரு. அவங்க பேரு ரியா.”
“முழு பெயரைச் சொல்லுடா. பாதிப் பேரு சொன்னா எப்படி கேட்கிறது?”
“அண்ணா, முழுப் பேரும் ரியா தான். அக்காட்ட சொல்லி அப்பாயின்ட்மெண்ட் வாங்கறேன். நீ ஒரு முறை போய் பாரு,” என்றபடி சந்திக்க நேரம் வாங்கிக் கொடுத்தான் தினேஷ்.
சுபாஷிற்கு ரியாவைப் போய் பார்ப்பதில் பெரிதாக ஆர்வம் இல்லை என்றாலும், கோபத்தைக் குறைக்க வகுப்புகள் என்பதிலும் நம்பிக்கை இல்லாவிட்டாலும் நிலாவைப் பிரிந்து விடக்கூடாது என்கிற எண்ணம் அவனைப் போக வைத்தது.
முதல் அரை மணி நேர பேச்சிலேயே ரியாவிற்கு ஓரளவிற்கு அவனுடைய குணமும் பிரச்சனையும் புரிந்து போனது.
“சுபாஷ், இப்ப நான் உங்களை ஒரு கேள்வி கேட்கப் போறேன். உங்களுடைய எஜமானன் யாருன்னு நீங்க நினைக்கிறீங்க?”
” நான்தான். என் டான்ஸ் ஸ்கூலும், ஜிம்மும் நான்தான் வச்சு நடத்திட்டு வரேன். “
“நான் அதைக் கேக்கல. உங்களோட எண்ணங்கள், செயல்கள் இதுக்கெல்லாம் எஜமானன் யாரு?”
சற்று யோசித்த சுபாஷ், “என்னோட மூளைதான்,” என்றான்.
“நல்ல பதில். நாம் அப்படி நினைச்சுக்குறோம். உண்மையில ஒவ்வொருத்தருக்கும் எஜமானன் யாருன்னா சப் கான்ஷியஸ் மைண்ட் என்று சொல்லப்படுகிற நம்மோட ஆழ் மனசுதான். சின்ன வயசுல இருந்தே நாம் பார்க்கிற, கேட்கிற, படிக்கிற, எதிர்கொள்கிற எல்லா சம்பவங்களும் நம்ம ஆழ் மனசுல படிஞ்சு ஒவ்வொரு விஷயத்துக்கும் இப்படிச் செய்யணும், இப்படிச் செய்யக்கூடாது என்கிற ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி வச்சிருக்கு. ஆழ்மனசுக்கும், மூளைக்குமான தொடர்பை நாம் உணர்றது இல்லை. ஆனா ஆழ்மனதின் பிரதிபலிப்பு தான் நம் மூளை. ஆழ்மனதின் கட்டளைகளைத்தான் மூளை புரிஞ்சுட்டு அதன்படி நம்மைச் செயல்பட வைக்குது.”
சுபாஷிற்கு அவள் சொன்னது புதிதாக இருந்தது. சற்று ஆர்வத்துடன் கேட்கத் தொடங்கினான்.


“அப்போ ஆழ்மனசு சொல்வதைத்தான் மூளை கேட்குது. மூளையின் கட்டளைப்படி நாம் நடக்கிறோம் என்று சொல்றீங்களா?”
“சரியாப் புரிஞ்சுகிட்டீங்க. ஆழ்மனதின் விசுவாசமான வேலையாள் மூளை. அது சொல்றதை எப்படி, முடியுமா என்றெல்லாம் எந்தக் கேள்வியும் கேட்காம, வழியை மட்டும் கண்டு பிடிச்சு நடத்தி வைக்கும் நம்ம மூளை.”
“நிஜமாதான் சொல்றீங்களா? என் அடிதடி குறைவதற்கு என்ன செய்யணும்?”
“இது அறிவியல் பூர்வமா, ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப் பட்டது. நமக்குள்ள எண்ணத்திலும், செயலிலும் ஒரு மாறுதல் வரணும்னா முதலில் ஆழ்மனதில் அந்த மாற்றம் நடக்கணும். பரிசோதனையா ஒரு விஷயம் முயற்சி செய்யலாம். அதற்கு உங்களுடைய முழு ஒத்துழைப்பு வேண்டும்.”
“செய்யறேன். என்ன செய்யணும்?”
“ அகிம்சை , சாந்தம் என்று நான் சொன்னா உங்களுக்கு முதலில் யார் முகம் நினைவுக்கு வரும்?”
“ ம்ம்.. மகாத்மா காந்தி, புத்தர்.”
“ வெரிகுட். நான் சொல்றதைக் கவனமா கேட்டுக்குங்க.”
சுபாஷ் சம்மதம் தெரிவிக்கவே ரியா அவன் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்து, ஒரு மாதம் கழித்து வரச் சொல்லி அனுப்பினாள்.
சுபாஷ் பயிற்சிக் கூடத்தை தனது உதவியாளர்களை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வீட்டிலேயே இருந்தான். ரியா சொன்ன மாதிரி மகாத்மா காந்தியின் முகம் போன்ற ஒரு முகமூடியை வாங்கி மாட்டிக் கொண்டான். கண்ணாடி முன் நின்று கொண்டு அவள் சொல்லி இருந்த நேர்மறை வாக்கியங்களை வாய் விட்டுச் சொல்ல ஆரம்பித்தான்.
கண்ணாடியைப் பார்க்கும் போதெல்லாம் காந்தியின் உருவம் கண்ணில் படப்பட மனதுக்குள் எப்போதுமே காந்தி என்றால் அகிம்சை என்கிற எண்ணம் வலுப்படத் தொடங்கியது. தன்னையும் அந்தப் பிம்பத்தோடு பொருத்திக்கொள்ளத் தொடங்கினான். அப்படியே அவள் சொல்லிய மற்ற விஷயங்களையும் ஆர்வத்துடன் பின்பற்றத் தொடங்கினான். இரண்டு வாரங்கள் சென்றிருக்கும். தினேஷ் ஒரு நாள் அலைபேசியில் கூப்பிட்டான்.
” என்னடா?”
“எங்களையெல்லாம் மறந்துட்டியாண்ணா, முதலில் டான்ஸ் ஃப்ளோருக்கு வா. டைரக்டர் சிவன் படத்துக்கு கொரியோகிராஃபி சான்ஸ் கன்ஃபார்ம் ஆயிடுச்சு. நீ ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு இருந்த வாய்ப்பு. பெரிய ஹீரோ. நீ வந்து செஞ்சா தான் சரியா வரும். நீ வீட்ல இருந்து காந்தியா மாறுனது எல்லாம் போதும். முதல்ல வேலைக்கு வா.”
சுபாஷிற்கு கேட்டத்தை நம்பவே முடியவில்லை. சந்தோஷம் பிய்த்துக் கொண்டு போனது. முதலில் நிலாவிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றியதை அடக்கிக் கொண்டான். உடனேயே வண்டியில் நடனப் பள்ளிக்கு விரைந்தான்.
உதவியாளர்கள் அனைவரும் ஏக மகிழ்ச்சியில் இருந்தார்கள். சுபாஷைப் பார்த்ததும் உற்சாகம் பீரிட்டது. ஆரம்ப ஆரவாரம் அடங்கியபின், தினேஷ் சுபாஷிடம் வேலை விவரங்களை விவரித்தான். அதற்கு மேலும் உட்கார முடியாத சுபாஷ் முதல் பாடலுக்கு நடனம் வடிவமைக்கத் தயாரானான்.
” மியூசிக் போடுடா. “
சுபாஷ் உற்சாகமாக ஆட, சுற்றி அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த உதவியாளர்கள் எவர் மூஞ்சியிலும் சிறிதும் சுரத்து இல்லை.
“என் ஸ்டெப்ஸ் நல்லா தானே இருக்கு? ஏண்டா மொபைலைத் தொலைச்சவன் மாதிரி இப்படி பாக்குறீங்க?”
” என்னத்த சொல்ல? ஹீரோ மார்க்கெட்ல வில்லனை அடிச்சு துவம்சம் பண்ணிட்டு வெற்றிக் களிப்போட ஒரு கடை கூரையில் இருந்து ரண்டு சாமர் சால்ட் அடிச்சு தரையில குதிச்சு மரண குத்தாட்டம் போடுறாரு. அதுக்கு ஸ்டெப்ஸ் போடணும். நீ மார்கழி மாசத்துல கைல ஜால்ரா கட்டையை வச்சிட்டு பஜனை பாட்டு பாடிட்டு போவாங்களே, அதுக்கு ஸ்டெப்ஸ் போட்டு ஆடிட்டு இருக்கே. ஒரு வேகமே இல்லாம என்னா டான்ஸ் இது? ரொம்ப காந்தியா ஆயிட்ட போல. முதல்ல அந்த முகமூடிய கழட்டிட்டு ஹீரோ போடற காஸ்ட்யூம் மாத்து. அப்படியாவது உனக்கு குத்த வருதா பார்ப்போம்.”
” முகமூடியைக் கழட்ட மாட்டேன். டிரெஸ்ஸைக் கொடுடா.”
சுபாஷ் கதாநாயகன் போடவேண்டிய உடையை அணிந்துகொண்டு உற்சாகமாக ஆட ஆரம்பித்தான். முதல் நான்கு வரிகளுக்கு ஒரு ஒத்திகை பார்த்து விட்டு குழுவினரை ஆட வைக்க த்ரீ, டூ என்று சொல்ல ஆரம்பித்தபோது அவனது அலைபேசியில் நிலாவிடமிருந்து குறுஞ்செய்தி.ஆர்வத்தோடு திறந்தான்.
“சுபாஷ், ஹெல்ப். நான் எங்க பேங்க் ரெஸ்ட் ரூம்ல இருக்கேன். வெளியே வர லேசா கதவைத் திறந்த போது வெளியில கையில துப்பாக்கியோட மேனேஜர் ரூம்ல ரெண்டு பேர் மிரட்டிட்டு நிக்கிறது தெரியுது .”
சுபாஷ் முழுதும் விளங்கிக் கொள்ளுமுன் அடுத்த குறுஞ்செய்தி.
“கொள்ளைக்காரங்க போல இருக்கு. ரெண்டு பேர். உன் டான்ஸ் புளோருக்கு வா. பேங்குக்கும் உன் இடத்துக்கும் நடுவுல இருக்குற பழைய பாத்ரூம் கதவைத் திறந்து விடுறேன். “
சுபாஷ் பாய்ந்தோடி நிலா திறந்து வைத்திருந்த பாத்ரூம் கதவின் வழியே பிரவேசித்த போது ஒருவன் வங்கிக்குள் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் எல்லாரையும் துப்பாக்கி முனையில் விரட்டி ஓரமாக நிற்க வைத்திருப்பதைப் பார்த்தான். ஒரு வினாடியில் பக்கத்தில் இருந்த மேசையில் ஏறி, அப்போதுதான் பயிற்சி செய்திருந்த சாமர் சால்ட் இரண்டை அடித்து கொள்ளைக்காரனின் மேல் குதித்தான். எதிர்பாராமல் பின் புறத்தில் இருந்து மேலே விழுந்ததால் கொள்ளைக்காரன் நிலை குலைய, அவன் கையில் இருந்த துப்பாக்கியையும் சாவிகளையும் ஒட்டுமொத்தமாக பிடுங்கிக் கொண்டான். ஒரு வினாடி யோசித்தவன் தலைதெறிக்க வந்த வழியே வெளியே ஓட ஆரம்பித்தான்.
கொள்ளையர்களில் ஒருவன் இந்தியில் “டேய், அவன் நம்ம வண்டி சாவியும் சேர்த்து எடுத்துட்டு ஓடுறான், பிடிங்கடா, நாம தப்பிக்கணும்.’’ என்று கத்த, சுபாஷ் படிகளில் தாவிக் குதித்து தெருவில் இறங்கி ஓடினான்.
எத்தனை நிமிடங்கள் ஓடி இருப்பான் என்று தெரியாது. அவனை ஒட்டியபடி ஒரு ஸ்கூட்டி வந்து நிற்க சுபாஷ் ஓட்டத்தை நிறுத்தினான். நிலா.
“நில்லு சுபாஷ். நீ வெளியே ஓடவுமே மேனேஜர் போலீசுக்கு போன் பண்ணி அவங்க உடனேயே வந்து உன் பின்னாடி ஓடிட்டு வந்தவங்களை விரட்டிப் பிடிச்சாச்சு. ரொம்ப தேங்க்ஸ் டா.”
சுபாஷிற்கு பதில் சொல்ல முடியாமல் மூச்சு வாங்கியது.
“காந்தி முகமூடியோட கையில அவங்கிட்டருந்து பிடுங்கின துப்பாக்கியோட மெயின் ரோடுல பட்டப் பகலில் ஓடி இருக்கே. கொள்ளையர்களைப் பிடிக்க உதவி செய்து இருக்கே. இன்னும் கொஞ்ச நாளைக்கு நீதான் சோஷியல் மீடியாவில் வைரல் ஆகப் போகிற.”
சுபாஷ் சற்று நிதானப்பட்டவனாக அவளைப் பார்த்து புன்னகைத்தான்.
“ஆமா, துப்பாக்கியைப் பிடுங்கி எப்பவும் போல அவனை போட்டு பிளக்காம, எதுக்காக தெருவில் இறங்கி வெளியில ஓடின?”
“தெரியல நிலா. அவனை அடிக்கணும்னு தோணல. அந்த நிமிஷம் போலீசை கூப்பிட உங்களுக்கு நேரத்தை ஏற்படுத்திக் கொடுக்கணும்னு தான் தோணுச்சு. அதான் வெளியில ஓடினேன். அது சரி, நீ ஏன் பாத்ரூமில் இருந்து போலீசுக்கு போன் பண்ணாம என்னை கூப்பிட்ட?”
“தெரியல சுபாஷ். ஒரு ஆபத்து என்கிற போது, பதட்டத்துல என் கை உடனேயே உன் நம்பரைத்தான் டயல் பண்ணுச்சு.”
” அப்போ உன் மனசுல நான் தானே இருக்கேன் நிலா?”
நிலா பதில் சொல்லாமல் புன்னகைத்தாள்.
“மிஸ்டர் சுபாஷ் காந்தி, தெருவுல ஓடிவந்து எங்க நின்னுட்டு இருக்கீங்கன்னு பின்னாடி திரும்பிப் பாருங்க.” சுபாஷ் பார்த்தான்.
காந்தி மண்டபம்.
சுபாஷ் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே தினேஷூம் மற்றவர்களும் மூன்று பைக்குகளில் வந்து இறங்கினார்கள்.
“சுபாஷ்ண்ணா, அஞ்சு நிமிஷத்துல ஆல் இந்தியா ஃபேமஸ் ஆயிட்டே. இங்கே பாரு,” என்றபடி மொபைலை நீட்டினான் தினேஷ்.
செய்திச் சானல்கள் ஒவ்வொன்றிலும் சுபாஷ் காந்தி முகமூடியுடன் கையில் துப்பாக்கியுடன் தெருவில் ஓடும் காணொளி. கூடவே விதம் விதமாய் தலைப்புகள்.
‘காந்தி தடுத்த வங்கிக் கொள்ளை.’
‘ஆயுதம் கிடைத்தும், அகிம்சையால் வென்ற இளைஞன்.’
‘நவீன காந்தி. ’
சுபாஷ் நம்ப முடியாமல் “என்னடா இதெல்லாம் ?” என்றான்.
“அப்படித்தான்ண்ணா.”
சுபாஷ் பாய்ந்து தினேஷைக் கட்டிக் கொண்டான்.
“உன்னால்தானடா தினேஷ், ரியா மேடம்க்கும் நன்றி சொல்லணும்டா.”
மற்றொரு நண்பன், “நிலா சிஸ்டருக்குதான் நன்றி சொல்லணும்” என்றான்.
“ சிஸ்டர் மேல நம்ம அண்ணன் வச்ச காதலுக்கு நன்றி. ஜோடியாக சேர்ந்து நில்லுங்க. முதல் போட்டோ நான் எடுக்கிறேன்.”
சுபாஷ் சற்று தயக்கத்துடன் நிலாவைப் பார்க்க அவள் நகர்ந்து அவன் பக்கத்தில் நின்றாள்.
“ இப்போவாவது காந்தி முகமூடியைக் கழட்டுண்ணா.”
சுபாஷ் தயங்கினான்.
“உன் மனசில் காந்தி வந்த பிறகு முகத்தில் எதுக்கு சுபாஷ்?” என்ற நிலா அவன் முகத்திலிருந்து காந்தி முகமூடியைக் கழற்றினாள்.
“வாழ வைக்கும் காதலுக்கு ஜே!” என்று தினேஷ் பாட மற்றவர்கள் சிரிப்புடன் கைத்தட்ட நிலாவுக்கு கீற்றாக வந்த நாணமும், சுபாஷ் முகத்தில் மின்னிய மகிழ்ச்சியும் அலைபேசியில் சிறைப்பட்டன.

அனுராதா ஜெய்ஷங்கர்


திருமதி அனுராதா ஜெய்ஷங்கர் டிஸ்லெக்ஸியா (dyslexia) எனப்படும் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான சிறப்பு ஆசிரியராக சென்னையில் பணிபுரிந்து வரும் பொறியியல் பட்டதாரி. குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவதினரின் மனநலன் மற்றும் கல்வியில் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது கதைகள் கலைமகள் நடத்திய கி. வா.ஜா நினைவுச் சிறுகதைப் போட்டி, அவள் விகடன் வெள்ளி விழா சிறுகதைப் போட்டி, குவிகம் குறும்புதினம் போட்டி, எழுத்தாளர் இராம. சுப்பையா நினைவுச் சிறுகதைப் போட்டி, எழுத்தாளர் இராஜகுரு நினைவுச் சிறுகதைப் போட்டி உள்ளிட்ட பல போட்டிகளில் பரிசுகள் பெற்று இருக்கின்றன. முகநூலில் இயங்கும் எழுத்துக் குழுமங்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
“புதுப்புனல்” மற்றும் “சபாஷ் சாரதா” என்கிற இரு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டு இருக்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன