லலிதா சங்கர்/கோணங்கள்

“ஏங்க!”
“என்னங்க?”
“நான்..! நான்..! நானும் நாளைக்கு கல்யாணத்துக்கு வரணுமா? ஏன்? நீங்க மட்டும் போயிட்டு வாங்களேன்!”
“அபினவ் உன்னையும்தானே வரச்சொன்னான்? அண்ணி! அண்ணின்னு எவ்வளவு ஆசையா கூப்பிட்டான்? நீ வராம எப்படி?”
‘அபினவ்..! அவனுக்காக மட்டுமா இந்தக்கல்யாணத்துக்குப்போறோம்? லட்சுமி! நீ எப்படி இருக்க? உன்னைக்கடைசியா உன் கல்யாணத்துக்கு முன்னாடி பார்த்தது. நீ நல்லாயிருக்கயா? நல்லாயிருக்கணும். அதுதான் என்னோட ஆசையும்.’
ரேவதிக்கு பரம திருப்தி. ‘இவர் நான் வரவேணாம்னு நினைக்கல. வரணும்னு நினைக்கறார். நாமதான் அவரைத் தப்பா புரிஞ்சு வெச்சுருக்கோம் போல. அவர் மனசு பூரா நான்தான் இருக்கேன். என் புருஷன் சொக்கத்தங்கம்தான் இனிமே குழம்பக்கூடாது.’
‘அந்த லட்சுமி எப்படி இருப்பா? இடுப்புக்கு கீழ தலைமுடி தொங்கும்னு இவர் சொல்லிருக்காரே! இப்ப அப்படித்தான் இருக்குமா? அதே அடர்த்தியும் நீளமுமா அவ முடி இருக்குமா?’ ரேவதி முதுகு வரை தொங்கும் தன் முடியைத் தொட்டுப்பார்த்துக்கொண்டாள். ப்ச்!
மறுநாள், வழக்கத்தைவிட ரேவதி தன்னைப்பார்த்துப்பார்த்து அலங்கரித்துக்கொண்டாள். அழகான மெஜந்தா கலர் புடவை, அதற்கு மேட்சாக வளையல், தோடு, நெருக்கமாகத் தொடுத்த மல்லிகை சரம் கூந்தலில், மையிட்ட கண்ணோடு புதிதாகப்பறித்த ஆப்பிள் பழம் போல அவள் இருப்பதை அவளே உணர்ந்தாள். ‘அவர் மனசுல நாம மட்டும்தானே இருக்கோம்?’ அவள் குரங்கு மனது மறுபடியும் மரத்தில் ஏறிக்கொண்டது.
அன்று..! அந்த மால்மருகன் கோவில் வாசலில்,

சுந்தரின் நெற்றியில் குங்குமப்பொட்டு வைத்தபடி,
“வெற்றியோடு திரும்பி வாங்க.”
“லட்சுமி! உன்னை விட்டுட்டு அவ்வளவு தூரம் போறதை நினைச்சாத்தான் மனசுக்குக்கஷ்டமா இருக்கு. என்னால உன்னை விட்டுட்டு எப்படி இருக்க முடியும்?”
“சூ! நீங்க என்ன பச்சைக்குழந்தையா? காலேஜ் முடிச்சாச்சு. அடுத்து வேலைக்குப்போனாத்தானே கல்யாணத்தைப்பத்தி நம்ம வீட்டுல பேச முடியும்? நீங்க போய் ஜெயிச்சிட்டு வாங்க.”
“லட்சுமி நீ இல்லாம நான் இல்ல. இந்த கம்ப்யூட்டர் படிப்பை நீ இல்லேன்னா நான் முடிச்சிருக்க மாட்டேன். என்னோட வாழ்க்கையில் நான் ஜெயிக்கணும்னா அதுக்கு நீ இருக்கணும்.”
“கண்டிப்பா நான் இருப்பேன். வாராவாரம் உங்களுக்கு லெட்டர் போடுவேன். நீங்க சமத்தா அழாம கிளம்புவீங்களாம் சரியா?”
“சரிங்க டீச்சர்.”
ஆறு குழந்தைகளுக்கு அக்காவான அந்த பொறுப்பான ஆசிரியை அன்று பொறுப்பான ஒரு காதலியாகவும் இருந்தாள். படிப்பு, வேலை என்று எந்த விதத்திலும் இலக்கு, லட்சியம் எதுவுமில்லாத சுந்தரை ஒரு இலட்சியத்தை நோக்கி ஓட வைத்தாள். “நீ ஆட்டோ ஓட்டத்தான் லாயக்கு” என்று சொன்ன சொந்தங்களுக்கு முன் ஒரு கம்ப்யூட்டர் என்ஜினீயராக அவனை நிறுத்தியது அந்தக்காதல் தான். திக்கற்ற திசையில் திரிந்த சுந்தரின் மனதை நேர் வழியில் செலுத்திய அந்தக்காதல்..!
வெள்ளை நிற குர்தா, நீல நிற ஜீன்ஸில் – சுந்தரும் சமீபத்தில் பார்த்த திரைப்படத்தில் வரும் கதாநாயகன் போல, அந்த சுருள் முடி அவன் நெற்றியில் விழுந்து, எப்பவும் அவனின் அழகைப்பெருமையுடன் ரசிக்கும் ரேவதிக்கு அன்று அவனின் அந்த சுருள்முடி அழகு பீதியைக்கிளப்பியது.
‘சுந்தரை அவள் நம்மிடமிருந்து பிடிங்கிடுவாளோ!’ மறுபடியும் அந்தக் குரங்கு மனம் ஆட்டுவிக்க, அவள் அவனின் கைகளை இறுகப்பற்றிக்கொண்டாள்.
“ஏய்! ரேவதி! என்ன இது? இப்படித்தான் கை வலிக்க, வலிக்க பிடிச்சுப்பியா?” சிரித்துக்கொண்டே அவன் கேட்கவும்,

“அச்சச்சோ! கொள்ளை அழகா இருக்காரே! நீங்க எனக்கே எனக்கு மட்டும்தானே! நம்மை யாரும் பிரிச்சிட மாட்டாங்க தானே? காத்து கூட நமக்கு இடையில வரக்கூடாதுங்க. அவள் மனம் இறைஞ்சியது.”
இங்கு சுந்தரின் மனம் அந்த நாளை நினைத்து..!
“நல்லா இருக்கே! ஆறு மாசம் மூத்த பெரிய பொண்ணை எப்படி உங்க பையனுக்கு கொடுக்க முடியும்?”
“கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர் கூட தன்னைவிட வயசுல பெரிய பெண்ணைத்தான் கட்டியிருக்காப்புல. “
“சரி கல்யாணம் பண்ணித்தரேன்னே வெச்சுக்குவோம். எனக்கு இப்பவே என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும். இவளுக்கு அடுத்து மத்தவங்களுக்கும் வரிசையா கல்யாணம் பண்ண வேண்டாமா?”
“இல்ல. கொஞ்ச நாள் பொறுங்க. இவனுக்கு பெரியவ என் பொண்ணு இருக்கா. அவளுக்கு முடிச்சுட்டுத்தான் இவனுக்குப்பண்ண முடியும். மேலும் இருந்திருந்து அவனுக்கு இப்போத்தான் இருபத்தொரு வயசாகுது.”
“அப்படின்னா இந்தக்கல்யாணம் நடக்காது. என் தம்பி எங்க லட்சுமியைக்கல்யாணம் செஞ்சுக்க காத்துக்கிட்டிருக்கான் அவனுக்கே அவளை முடிச்சு வெச்சுடறேன். இனி நீங்க இந்தக்கல்யாணப்பேச்சை எடுக்காதீங்க.”
பொசுக்கென்று அந்தக்காதல் முடிந்து போனது. அது சுந்தருக்கு லட்சுமியின் திருமணம் வரை தெரியாமல் போனது அவனின் துரதிர்ஷ்டமில்லாமல் வேறென்ன?
லட்சுமியிடமிருந்து கடைசி கடிதம் வரும்போது அவளின் தாய்மாமன் கட்டிய தாலி அவளின் கழுத்தில் ஏறியிருந்தது.
வழிநெடுக ஒரு பெரும்பீதி அவளை ஆக்கிரமித்துக்கொண்டது. ‘இந்தக்கல்யாணத்துக்கு போகணும்னு நாம நினைச்சிருக்கவே கூடாது. பெரிய “சில்லுன்னு ஒரு காதல்” படத்துல வர்ற ஜோதிகான்னு நினைப்பு. நாம ஒண்ணும் ஜோதிகாவும் இல்ல ஒரு மண்ணும் இல்ல. நாம நாமதான். அவ அவதான். ஏன்? அந்த ஜோதிகா சினிமாக்காக புருஷனை ஒருநாள் காதலியோடு இருக்க அனுமதிச்சா. நிஜத்துல தன்னோட புருஷன் சூர்யாவை இப்படி விட்டுக்கொடுப்பாளா? மாட்டவே மாட்டா. நாமதான் என்னமோ பெருசா பெருந்தன்மையா இருக்கோம்னு காமிச்சுக்கணுமாக்கும். அய்யய்யோ என் நிம்மதியே போச்சே. பேசாம இப்படியே திரும்பிப்போயிடலாமா? கடவுளே! வாந்தி வர்ற மாதிரி இருக்கே!’
“மண்டபம் வந்துடுச்சு. இறங்கு ரேவதி!”
அந்தத்திருமண மண்டபம் அவர்களை அன்புடன் வரவேற்றது.
ரேவதியின் கண்கள் அலைபாய்ந்தன. “அவள் எப்படி இருப்பா? என்னை விட அழகாய் இருப்பாளா?’
அவள் மட்டுமல்ல அவளின் குடும்பமே சுந்தரின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது, அங்கு நுழைந்தவுடன் அப்பட்டமாகத் தெரிந்தது.
லட்சுமி, சுந்தரின் முன்னாள் காதலி, சகஜமாக அவர்கள் இருவரையும் வரவேற்றாள்.
“சுந்தர்! இவங்கதான் உங்க சம்சாரமா? அம்சமா அழகா இருக்காங்க. நான்தான் லட்சுமி! அபினவ் சொல்லியிருப்பானே! நாங்களும் சுந்தர் வீடும் பக்கத்து பக்கத்து வீட்டுலதான் இருந்தோம். உங்க கல்யாணத்துக்கு என்னால அப்போ வரமுடியாத சூழ்நிலை. இப்போ உங்களைப் பாத்ததுல ரொம்ப சந்தோசம்.”
“சுந்தர்! உங்களுக்கு எத்தனை குழந்தைங்க?”
“ரெண்டு பொண்ணுங்க.”
“ஓ!”
“எனக்கு ஒரு பையனும், ஒரு பொண்ணும். “
அவளின் பதினான்கு வயது மகன், ஏழு வயது மகள் இருவரையும் சுந்தருக்கும் ரேவதிக்கும் அறிமுகம் செய்து வைத்தாள். “குழந்தைகளை அழைச்சுக்கிட்டு வந்துருக்கலாம்ல?” லட்சுமி ஆவலுடன் விசாரித்தாள்.
“இல்ல லட்சுமி! ரெண்டுத்துக்கும் நாளைக்கு பரீட்சை. அதைத்தவிர அவங்க இந்த கிளாஸ், அந்த கிளாஸ்னு சேந்ததுல பயங்கர பிசியா இருக்காங்க. அழைச்சுட்டு வர முடியறதில்லை. இன்னொரு நாள் கண்டிப்பா கூட்டிட்டு வரேன்.”
“அநியாயமாய் நம்மளைப்பிரிச்சு வெச்சுட்டாங்களே!”
ஒவ்வொரு முறையும் சுந்தரைப்பார்த்த அவளின் பார்வை சொல்லாமல் சொன்னது ரேவதிக்குத் தெளிவாகப்புரிந்தது.

லஷ்மியின் கணவன்? எங்கு தேடியும் அவனைக்காணவில்லை. மெல்ல விசாரித்ததில், அவனுக்கு மனநிலை சரியில்லை எனவும் அவன் தற்போது அசைலத்தில் இருப்பதாகவும் தெரிந்து, ரேவதிக்கு மனம் கனத்துப்போனது.
சொந்தத் தாய்மாமன்தான் அவன் நல்லவனாக இருக்கணும்னு அவசியம் இல்லையே! சொந்தத்தம்பி என்று விரும்பி பொண்ணைக்கொடுத்ததுக்கு யாரை நொந்து என்ன பண்ண? லட்சுமியின் பொறுமைக்கு தீனி போடுவது போல அமைந்த அந்த வாழ்க்கையையும் அவள் தாங்கினாள்.
எனக்கே கேட்டதும் இப்படி வேதனையா இருக்கே, அவருக்கு எப்படி இருக்கும்? ‘ஆசையாசையாய் காதலித்த தன் காதலியை இப்படி அவசர அவசரமாக அவரிடமிருந்து பிரித்து வேறொருவருக்கு கல்யாணம் செய்து என்ன ஆச்சு? இப்படித் தன் காதலி ஒத்தை மரமா தவிச்சு நிக்கறாளே’ன்னு அவர் மனம் தவிக்கும்தானே! அதுக்காக இப்போ நாம என்ன செய்ய முடியும்? ஏனோ தெரியலை. ரேவதி தன்னை அறியாமல் தன் கைகளை தன் கணவன் கைகளுடன் கோர்த்துக்கொண்டாள்.
தன் கணவனை அவளால் விட்டுக்கொடுக்க முடியாதுதான் ஆனாலும் லஷ்மியைப்பார்த்தும் பாவமாக இருந்தது. அவளுடைய வாழ்க்கையும் நன்றாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? ரேவதி லஷ்மியின் கைகளைப்பற்றி அவளிடம் ஆறுதலாக நாலு வார்த்தை பேசினாள்.
“தனியா இந்தக்குழந்தைகளை நீங்க வளர்க்கறது உண்மையில் உங்களைப்பார்த்தா பெருமையா இருக்கு.”
“உங்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கேன். நீங்க ரொம்ப பொறுமை சாலின்னு சொன்னாங்க. நேரில் பார்ப்பதற்கும் அப்படித்தான் இருக்கீங்க.”
ரேவதியும் லஷ்மியும் ஏதேதோ பேசியபடி இருந்தாலும் லஷ்மியின் பார்வை மட்டும் தன் கணவனைச்சுற்றியபடி இருந்ததை ரேவதி கவனிக்கத்தவறவில்லை.
இடையில் யாரோ சாப்பிட அழைத்தனர் “முதல்ல சாப்பிட்டுட்டு வந்துடுங்க. பந்திக்கு முந்து படைக்குப்பின்னதுன்னு சும்மாவா சொன்னாங்க.”
சாப்பிட்டு வந்தபின்னர்,
சுந்தர் லஷ்மியின் குழந்தைகளுடன் அன்பாக அளவளாவி, அவர்களின் படிப்பு பற்றி விசாரித்து, மற்றும் தன் பழைய நண்பர்களுடன் பேசிச்சிரித்தபடி இருந்தாலும், ரேவதிக்கு ‘கடவுளே! இந்த இரவை நல்லபடியாக கடத்திவிடு தெய்வமே!’
அவள் மனம் தத்தளித்தது.
ஒருவழியாக கிளம்பும் நேரம் வந்தது. தாம்பூலம் தரும்பொழுது லஷ்மியின் தாயார் பார்த்த பார்வை.
“என் மகள் வாழ்ந்திருக்க வேண்டிய வாழ்க்கை இது. அன்னிக்கு இதோட அருமை எனக்குத் தெரியாம போச்சு ரெண்டு பேரையும் தெரியாம பிரிச்சுட்டேன். ஆனா இன்னிக்கு! உன்னைப்பார்த்தா பொறாமையா இருக்குடி!” என்று சொல்லாமல் சொல்வது போல இருந்த அவளின் பார்வையை அவளால் ஒரு கணத்திற்குமேல் தாங்க முடியல.
வேகவேகமாக வெளியில் வந்தாள்.
கணவனுடன் காரில் ஏறினாள். நீண்ட ஒரு பெருமூச்சு வந்தது. தன் கணவனைக் கண்கள் கலங்கப்பார்த்தாள்.
“ரொம்ப நன்றிங்க.”
“ஏம்மா? எதுக்கு?”
“இல்ல..! மண்டபத்துக்குள் நுழைஞ்சதும் எனக்கே கஷ்டமாப்போச்சு. அந்தப்பொண்ணுக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைஞ்சுருக்க வேண்டாம். இந்தப்பக்கம் நானும், நீங்களும் இத்தனை சந்தோஷமா இருக்கும்போது அங்க அவங்க தனிமரமா குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினது தெரிஞ்சு சுருக்குன்னு இருந்துச்சு, இருந்தாலும் நீங்க இன்னிக்கு பொழுதை நான் எதிர்பார்த்தமாதிரி எந்த ஒரு உறுத்தலும் இல்லாம கடந்து வந்துட்டீங்க. எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியலை. மனசுலேர்ந்து ஏதோ பெரிய பாரம் இறங்கின மாதிரி இருக்குங்க.”
அவள் பேசப்பேச, சுந்தர் அவளின் தலையை மெல்ல வருடினான். ஒரு வார்த்தை பேசவில்லை ஆனால் அவன் மனம் கதறியது.
‘ரேவதி! உனக்குத்தெரியுமா? லஷ்மியைப்பார்த்ததும் என் நெஞ்சே வெடிச்சுப்போச்சு. எப்படி இருந்த பொண்ணு! நான் அன்னிக்கு என்னோட வாழ்க்கையில முன்னேற்றப்பாதையில் அடி எடுத்துவைக்க காரணமா இருந்தவ. அவ இன்னிக்கு ஒண்ணுமில்லாம இருக்கா, ஆனால் நான் கையைக்கட்டிக்கிட்டு இருக்கணும். இதைவிடக்கொடுமை வேற என்ன வேணும்?’
“நீ மட்டுமில்ல ரேவதி! உன்னைப்போலவே அவளின் மகனும் அங்கு மனதால் தத்தளித்தான்? என் கைகளை அவன் பிடித்தபடி பேசியபோது அவன் கண்களால் என்னிடம் கெஞ்சிக்கேட்டது என்ன தெரியுமா? “எங்க அம்மா! எங்க அம்மா, நாங்க இருக்கும் குடும்பத்துக்குள்ள வந்துடாதீங்க ப்ளீஸ்!” அவன் என்னை வழியனுப்பும் வரையிலும் பரிதவிச்சு நின்னது எனக்குத் தெளிவா புரிஞ்சது. எனக்கும் லஷ்மிக்கும் இடையில் அரணா அவன் இருந்தான், அவளுக்கு முன் நீ, எனக்கு முன் அவன்.”
‘என்னை விட புத்திசாலியான லக்ஷ்மிக்கு எதுவும் சொல்லிப்புரியவேண்டியது இல்லையே! கைகழுவும்போது நீ இல்லாத அந்த நேரம், அன்று என் ஒவ்வொரு அசைவுக்கும், சங்கடங்களுக்கும் சந்தோஷங்களும் ஆறுதலுடன் ஆலோசனை சொன்ன அதே காதலி இன்றும், “சுந்தர்! போதும். நீ என்னைப்பரிதாபமா பாக்காத! இனிமே என்னைப்பாக்கணும்னு நினைக்காத. என் வாழ்க்கை இப்படித்தான் இருக்கணும்னு விதி. அதை யாராலும் மாத்த முடியாது. ஆனால் நீ ரொம்ப நல்லா இருக்கன்னு தெரிஞ்சு எனக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா? உன் மேல உயிரையே வெச்சுருக்கற அருமையான பொண்டாட்டி உனக்கு கிடைச்சுருக்கா. உன்னோட சந்தோஷமான வாழ்க்கை இப்படியே தொடரணும். அதுதான் அன்னிக்கும் எனக்கு லட்சியமா இருந்தது. கண்ணை தொடச்சுட்டு சகஜமா இரு. உனக்கு எந்தக்குத்த உணர்ச்சியும் வேணாம். என் வாழ்க்கை, அதை நல்லா அமைச்சுக்கற சக்தி என்கிட்டே இருக்கு புரிஞ்சுதா?”
‘சொல்லும் அவளுக்கு நான் என்ன பதில் சொல்ல? எப்பவும் அவ சொல்லுக்கு மறுபேச்சு பேசாமலே இருந்து பழகியவன்தானே! இன்னிக்கும் அப்படியே இருந்துட்டேன். ஒண்ணே ஒண்ணு மட்டும் தோணிச்சு ரேவதி! இந்தநாள் நம்ம வாழ்க்கையில் வராமலே போயிருந்திருக்கலாம்.’
‘சிலசமயம் கடவுள் நம்மை கையாலாகாமல் பண்ணிடுவார். ஒவ்வொருத்தருக்கும் அவங்கவங்க வாழ்க்கையில் அப்படி ஓரொரு சந்தர்ப்பம் வரும். இன்னிக்கு நான் கையாலாகாமல் நிக்கணும்னு விதி. சுயநலமா என்னோட வாழ்க்கையைப்பத்தி மட்டும் யோசிக்கணும்கறதுதான் இன்னிக்கு எனக்குத் தரப்பட்ட சவால். அதையும் கடந்து வந்துட்டேன் வேற வழி? வண்டி ஓடும் ஓட்டத்தில் தெறித்து விழுந்த கண்ணீரை ரேவதிக்குத் தெரியாமல் அவன் சுண்டிவிட்டான்.’

லலிதா சங்கர்


2019 லிருந்து எழுத ஆரம்பித்து இதுவரை 20 புத்தகங்களை எழுதியுள்ளேன். சுஜாதா நினைவு சிறுகதைப்போட்டி, மங்கையர் மலர் ஜெயஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதைப்போட்டி, அனந்த நாராயணன் நினைவு சிறுகதைப் போட்டி, எழுதுகிறேன் ஒரு கடிதம், கோமதியம்மாள் நினைவு சிறுகதைப்போட்டி, Writer’s Cafe நடத்திய சிறுகதைப்போட்டி போன்ற பல போட்டிகளில் பரிசு பெற்ற அனுபவமும் எழுத்துலகில் மென்மேலும் பரிமளிக்க பேரார்வமும் கொண்டவள். சரியான வாய்ப்புக்களுக்காக காத்திருக்கிறேன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன