லீலா ராமசாமி/கார்டினல் விடு தூது

​”நாம வழக்கமா உட்கார்ற அந்த சிமெண்ட் பெஞ்சில காத்திரு. நான் வந்துட்டே இருக்கேன்” ஃபோனில் பேசிய சூர்யா அரைமணி நேரமாகியும் வரவில்லை. மூன்று மாதப் பிரிவுக்குப்பின் பார்க்கப் போகிறார்கள்.
சூர்யாவுக்குப் பிடித்த சிவப்பு உடை, வளையல், பூவுடன் நிலா.
“க்விக்…க்விக்”
பார்த்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடிவிட்டு சத்தம் வந்த திசையில் பார்த்தாள் நிலா.
அந்தச் சிவப்புக் கார்டினல் பறவை அவளையே பார்த்துக்கொண்டிருந்தது.
‘தமிழ் இலக்கியங்களில் தங்களின் காதலையும் பிரிவுத்துயரையும் கூறப் பறவைகளைத் தூது விட்டார்கள்.
நளன், தமயந்திக்கிடையே காதல் தூதாக அன்னப் பறவையையும்,
அசோக வனச் சீதை இராமனுக்குக் காக்கையையும்,
புறநானூற்றுப் புலவர் தன் மனைவிக்கு நாரையையும்,
சிற்றிலக்கியங்களில் தலைவி கிளி, குயில், புறா போன்ற பறவைகளையும் தூதாக அனுப்பினார்களே’
“கார்டினல் பறவையே! நீ எனக்காகச் சூர்யாவிடம் தூது போவாயா?”
“சூர்யாதான் என்னை உன்னிடம் தூது அனுப்பினார் நிலா!”
“நீ பேசுவாயா?”
“நிலா! இந்த மடக் கார்டினல் உன் சிவப்பு உடையழகைப் பார்த்துப் பேச்சற்று நிற்கிறது. என் வீட்டில் நம் திருமணத்திற்குச் சம்மதம் கூறிவிட்டார்கள்.” என்றபடி வந்தான் சூர்யா.
“மடக்காதலர்களா! கையில ஸ்மார்ட் போன வச்சிக்கிட்டு என்னைத் தூது அனுப்புறீங்களே!” சிரித்தது கார்டினல்.

127

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன