
புத்தகத்தை படிக்க விடாமல் ஏதோ அதன் பாஷையில் கூறிக் கொண்டே இருந்தது அந்த சிகப்புப் பறவை.
சித்ராவுக்கு கோபமோ எரிச்சலோ வரவில்லை. இருந்தாலும் புத்தகம் வாசிப்பதில் சற்றுத் தொந்தரவாக இருந்தது.
மெல்ல திரும்பி “என்ன பறவையே, உனக்கு என்ன வேண்டும்? பசிக்குதா? பழங்கள் வேண்டுமா?” என்று கேட்டாள்.
அந்தப்பறவை இடது வலதாகத் தலையை ஆட்டியது. “பின்ன என்னதான் வேணும்?”
பறந்து வந்து அந்தப் புத்தகத்தின் மேல் அமர்ந்தது. அதன் எழுத்தாளர் பெயரை தன் அலகால் குத்திக் காண்பித்தது.
பிறகு அவள் பாவாடையைப் பிடித்து இழுத்தது. அவளும் அதனை மெல்லத் தடவி மடியில் வைத்துக் கொண்டாள்.
அது மீண்டும் இழுக்கவே எழுந்து அதனுடன் சென்றாள். இவளுக்காக அது மெல்ல மெல்லப் பறந்து இரண்டு தெருக்கள் தாண்டி ஒரு வீட்டினுள் நுழைந்தது.
அங்கு அவள் கண்டது எழுத்தாளர் ஏகோபித்தனை. படுக்கையில் இருந்தார். சித்ராவுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்.
பரபரப்பாக செயல்பட்டாள்.
ஊடகமெல்லாம் வந்து பேட்டி எடுத்ததும், அவர் உடல் நிலை தேறியதும், இந்த சிவப்புப் பறவை அவர் மனைவி இருக்கும்போது மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்ததும் என்பதெல்லாம் மின்னல் வேகத்தில் செய்திகளாயின.
121
