வசந்தா கோவிந்தராஜன்/ஊமத்தம்பூ

இத்தனை நாள் இந்தப் பூங்கா அருகில் வரத் தயங்கும் சினேகா இன்று ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறாள். புத்தகம் படிப்பதுபோல் பாவனை செய்தாலும் ஓரக்கண்களால் சுற்றிலுமுள்ள ஆண்களை நோட்டமிட்டது. வேலை போய் ஐந்து மாதங்களாயிற்று. எந்த நிறுவனத்திலிருந்தும் அழைப்புகூட வரவில்லை. தங்கும் விடுதிக்கு ஒரு மாத வாடகை பாக்கி. ‘ஊர் முழுக்கக் கடன் வாங்கிட்டேன், நாளை முதல் வீட்டு வேலைக்குப் போகப்போகிறேன்’னு அம்மா சொல்லிடா.
அறைத்தோழி தான் இந்த ஐடியா சொன்ன. கவர்ச்சியான உடையுடன் இந்தப் பூங்காவில் உட்கார்ந்தால் போதும். கனத்த பர்சுடன் அணுகும் ஒரு பெரிய மனிதருக்குக் கம்பெனி கொடுத்தால் ஒரு மாசச் சம்பளத்தை ஒரே நாளில் அள்ளிடலாம் என்றாள்.
‘இது கேவலமில்லையா?’ உள்மனம் குத்தினாலும் வயிற்றின் ஓலம் பெரிதானது. தோழி சிவப்பு வண்ணம் ஒரு சமிக்ஞை என்றாள். சுற்றிலும் பார்வைகள் இவள் துகிலை உரித்தன. கூசியது. சிவப்பு பறவை பெஞ்சுக்கு அருகே ஒரு பூவைக் கொண்டு போட்டுவிட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தது.
அந்தப்பூவைப் பார்த்தாள். பகிரென்றது. ஊமத்தம்பூ. சீட்டுக்கம்பெனி நடத்தி ஏமாந்து போன அப்பா, பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாமல் ஊமத்தம்பூவை அரைத்துக் குடித்து இறந்து போனார். ஊமத்தம்பூ, மானத்துக்கு அஞ்சி இறந்துபோன அப்பாவை நினைவுபடுத்தியது. சே, பெண்மைக்கு விலை பேசுவதைவிடச் செத்துப் போகலாம்! இல்லை, நான் அப்பா மாதிரி கோழையல்ல! அம்மா சொன்னதுபோல் வீட்டு வேலைகூட செய்து பிழைக்கலாம்! அருகில் இருந்த துப்பட்டாவால் உடலை மூடிக்கொண்டாள். சிவப்புப் பறவைக்கு நன்றி சொன்னாள்.

மொத்த வார்த்தைகள் 155

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன