
லதா தன்னுடைய பட்டப் படிப்பை இன்னும் மூன்று மாதங்களில் முடிக்க இருக்கிறாள். அவளுடைய பெற்றோருக்கு அவள் ஒரே செல்ல மகள். அவளுடைய மாமன் மகன் சிவாவின் மீது இவளுக்கு ஒரு ஈர்ப்பு. அவனுக்கும் தான். இந்த நிலையில் சீக்கிரமாகத் திருமணத்தை முடிக்க வேண்டும் என்பது அவர்களுடைய பெற்றோர்களுடைய விருப்பம். ஆனால் லதாவுக்கு தன்னுடைய படிப்பை முடிக்காமல் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை. ‘அதிகம் படிக்க வேண்டும் .அதை வைத்துக்கொண்டு ஒரு வேலைக்குச் செல்ல வேண்டும். அதனால் கிடைக்கும் பணத்தால் தனக்குப் புகுந்த வீட்டில் மரியாதை கிடைக்கும்’ என்பது அவளுடைய நம்பிக்கை. இந்த நிலையில் கடந்த வாரம்தான் இரு வீட்டிற்கும் இடையில் திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. நிச்சயதார்த்தமும் நல்லபடியாக முடிந்தது .ஆனால் ஒரு நிபந்தனையை லதா தான் வைத்தாள்• “திருமணம் முடியும் வரை சிவா தன்னை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது” என்பதுதான் அது. ‘நேரில் பார்க்கக் கூடாது .கைப்பேசியில் அழைக்கக்கூடாது.’ என்பது இருவரும் ஒப்புக்கொண்ட நிபந்தனை. இந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் பரிச்சயமான இந்த கிளி இப்பொழுது ஒரு கடிதத்தை அவளுக்குக் கொண்டு வந்திருக்கிறது. அவள் தேர்வுக்கு இப்பொழுது மும்முரமாகப் படித்துக்கொண்டு இருக்கிறாள். எதிர்கால கனவுகள் எக்கச்சக்கம் அவள் மனதில். கடிதத்தை வாங்கலாமா? படிக்கலாமா ? என்ன எழுதி இருப்பான் சிவா? என்பதை அறிந்து கொள்ள அவளுக்கு அவாதான். தூது வந்த கிளி இடமிருந்து அந்த கடிதத்தை வாங்கி படிக்கச் சொல்லுகிறது அவளுடைய மனம். மூளையோ மறுக்கச் சொல்லுகிறது .என்ன செய்வது என்று அவளுக்கே புரியவில்லை. வெல்வது மூளையா? மனமா ?பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். தூது சென்ற கிளி லதாவின் முகத்தை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. அது இன்று மாலைக்குள் சிவாவுக்குப் பதில் சொல்லி ஆக வேண்டுமே?
189
