
அந்த சிவப்பு பறவை அவள் பக்கத்தில் அமர்ந்து, தன் பாஷையில் என்னவோ சொல்லியது. அம்மன் கோயில் இருக்கையில் இருந்த அவள், தன் போக்கில், கையில் புத்தகத்துடன், தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தாள்.மனநிலை பிறழ்ந்த, அவளைச் சுற்றி ஜனங்கள் கூட்டமாகக் கூடியிருந்தனர். ஜனங்களின் பார்வையில் எள்ளல், பேச்சில் கிண்டல், கண்களில் பச்சாதாபம், வார்த்தைகளில் விஷமம், அதரத்தில் நமுட்டு சிரிப்பு; வார்த்தைகளில் அருவருப்பு; மனத்தில் பதைப்பு:;சிலர் கண்களில் இரக்கம்.
ஆனாலும், ஒருத்தருக்கும் அவள் பக்கத்தில் செல்ல துணிவில்லை.
பறவை போட்ட கூச்சலில் எழுந்து நின்ற அவளை, அது கருவறைக்கு இட்டுச் சென்றது.அம்மனின் புடவையை அலகால் கொத்தி ஏதோ சொல்லியதும்; அவளுக்குப் புரிந்தது. சன்னதியில் தான் வீசி எறிந்த தாவணியின் ஞாபகம் வர, அதைத் தேட
ஆரம்பித்தாள். பறவை, அதைக் கதவின் மூலையிலிருந்து அலகால் கொத்தி அவள் கண் முன்னர் நகர்த்தியது. தாவணியை உடுத்தினவள், பறவைக்கு நன்றி சொல்லி, குளிர்ச்சியான முகத்துடன் வெளியேறினாள், பறவை அம்மன் தோளில் அமர்ந்ததும்; அது கிளியாக மாறிய அற்புதத்தை, மக்கள் பார்த்து, அதிசயத்தினர்.
கூட்டத்தில் ஒருத்தி உரத்துச் சொன்னாள்; ” அந்தப் பறவைதான் சாமி! அவளுடைய மானம் காத்த சாமி. “
(125)
