
சங்கர்/பூட்டிய காதல்
ஊரில் கால் வைத்தவுடனே உடல் பரபரத்தது. வாய் “ கோமு..கோமு” என்று அரற்றியது. மனதுக்குள் கோமுவின் உருவம் வியாபித்தது. வாசற்படியில் குறுக்காக ஒரு நிலைப்படியில் முதுகைப் பதித்து, இரண்டு கால்களையும் சற்றே முழங்காலை, கவிழ்த்து வைத்த V போல் வளைத்து, எதிர் நிலைப்படியில் பால்வண்ண பாதங்களை ஊன்றி தனது கரிய நீண்ட பின்னலை முன்பக்கம் இழுத்து நுனியைப் பிரித்தும் பின்னிக்கொண்டும் ஒரு ரவி வர்மா ஓவியம்போல் அமர்ந்திருப்பவளைத் தினமும் கல்லூரி போகும்போது பார்த்துப் பார்த்து ஏக்க பெருமூச்சு விட்டிருக்கிறேன். அந்த காட்சி என் நெஞ்சில் நிரந்தரமாக ஆழப்பதிந்து பல இரவு தூக்கங்களைக் குலைத்தது.
அவள் பெயர் கோமதி என்றும் வீட்டில் அவளை கோமு என்று கூப்பிடுவார்கள் என்றும் அவள் வீட்டருகே செல்லும்போது காதில் விழுந்து தெரிந்து கொண்ட செய்திகளே தவிர அவளிடம் பேசியதில்லை. எத்தனையோ நாள் அவளிடம் பேச முயன்று அவளை நெருங்குவதற்குள் உடல் முழுவதும் தொப்பலாய் வியர்த்து முழங்காலுக்குக் கீழ்க் கால்களே இல்லாத மாதிரி தோய்ந்து வாய் உலர்ந்து பயந்து திரும்பி எதிர்த்திசையில் ஓடியிருக்கிறேன். ஆனால் அவளை மறக்கமுடியாமல் என் நினைவிலும் கனவிலும் அவள் என்னை விடாமல் ஆக்கிரமித்தாள்.
இந்த மோகமுள்ளேன் உபத்திரவம் இனிமேலும் தாங்க முடியாமல் இதோ இன்று அவளைத் தேடி வந்து விட்டேன். இன்று கண்டிப்பாக என் எண்ணங்களைப் பயமில்லாமல் சொல்ல வேண்டுமென்று. இந்த தெரு கடைசியில் திரும்பினால் கோமுவின் தெரு வந்துவிடும். இதோ திரும்பி கோமுவின் தெருவுக்குள் நுழைந்து விட்டேன். தெருவில் கால் வைத்ததுமே ஆயிரம் வாட் மின்சாரம் பாய்ந்ததுபோல் ஒரு உணர்வு. ஆள் நடமாட்டமில்லாமல் அமைதியாக இருந்தது.
கோமு வீட்டை நெருங்கினேன்.
ஓ இதென்ன வீடு பூட்டியிருக்கே? சுற்றும் முற்றும் பார்த்தேன். பக்கத்து வீடு திறந்திருந்தது. அங்குப் போய் எட்டிப்பார்த்த போது “ யாரு” என்றவாரே ஒரு இளம்பெண் வெளிவந்தாள்.
“ பக்கத்து வீட்ல கோமதின்னு..” என்று தயங்கினேன்..
“ கோமதியா?” என்று ஒரு கணம் யோசித்து “ ஓ.. கோமு பாட்டியா? அவாள்ளாம் வெளியூர் போயிருக்கா” என்றாள்.
கோமு பாட்டி என்றதும் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து விடுபடும்முன்பே
“ நீங்க யாரு தாத்தா? ” என்று இன்னொரு அதிர்ச்சியைத் தந்தாள்.
“ நீங்க கோமு பாட்டிக்கு என்ன உறவு ?”
அந்த பெண்ணின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது? திஜாவின் மோகமுள்ளையும் லாசராவின் அபிதாவையும் சமீபத்தில் படித்து அந்த கதாநாயகர்கள் தங்கள் யமுனாவையும் அபிதாவையும் அடைந்தார்போல் நான் என் கோமுவையும் அடைவேன் என்ற நப்பாசையில் இத்தனை வருடங்களுக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து என் கிராமத்துக்கு வந்த அசடு என்று சொல்லவா முடியும்?
