சித்ரூபன்/ திருவாளர் வில்லங்கம்

இருபதாம் நூற்றாண்டு முடிவடையும் தறுவாயில் நீலகிரி மலையடிவாரத்திலுள்ள மேட்டுப்பாளையம் கிளையில் பணிபுரிந்து கொண்டிருந்த நான் என்னுடைய ஜென்ம பூமியான மெட்ராஸுக்கு மாற்றல் வேண்டி விண்ணப்பித்தேன். ‘சென்னைக்கு மிக அருகில்’ என்று ரியல் எஸ்டேட் பாணியில் நயவஞ்சகமாக ஏமாற்றி திருத்தணிக்குப் பக்கத்திலுள்ள ஒரு பிராஞ்சுக்கு என்னை டிரான்ஸ்ஃபர் செய்தது எங்கள் வங்கி நிர்வாகம். அது கிராமம் பாதி நகரம் பாதி சேர்ந்து செய்த கலவையான பகுதி.
தினமும் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பே என் அம்பத்தூர் வீட்டிலிருந்து கிளம்பி மொபெட், ரயில், பேருந்து, ஆட்டோ என்று நான்கு விதமான வாகனங்களில் பயணித்து அந்த இடத்தைச் சென்றடைவேன். ஒவ்வொரு நாளும் போக வர நூற்றைம்பது கிலோ மீட்டர் தூரம் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது. மாலையில் புறப்பட்டு அதே போல மூன்று சக்கர, ஆறு சக்கர, பல சக்கர, இரு சக்கர வண்டிகள் மூலமாக இரவில் வீடு திரும்புவேன். அதன் பிறகும் என் உடம்பு ஏதோவொரு வாகனத்தில் பயணிப்பது போன்ற உணர்விலேயே குலுங்கிக் கொண்டிருக்கும்.
அந்த ஊரகக் கிளையில் படிப்பறிவு இல்லாத வாடிக்கையாளர்கள் அதிகம். உழவர் திருநாள் விடுமுறைக்கு அடுத்த தினம் விவசாயி ஒருவர் தன் கணக்கிலிருந்து ஐநூறு ரூபாய் பணம் எடுப்பதற்காக வங்கிக்கு வந்தார். அவருக்கு ‘வித்டிராயல் ஸ்லிப்’ எழுதிக் கொடுத்தேன். தன்னுடைய வலதுகை கட்டைவிரல் சொர்ண ரேகையை அதில் பதித்து, காசாளரான என்னிடம் நீட்டினார். பணத்தின் மீது பற்று இல்லாத நான் அன்னாருடைய கணக்கில் பற்று வைத்துவிட்டு ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை அவருக்குக் கொடுத்தேன்.
அதைப் பெற்றுக் கொண்டவர், தன் வேட்டியை நாகரிக எல்லைக்கு மேல் தூக்கினார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. உள்ளே அணிந்திருந்த பட்டாபட்டி டிராயரில் கைவிட்டு ஓலைச்சுவடி மாதிரி நைந்து போன ஒரு துண்டுச்சீட்டை எடுத்தார். அதில் எழுதியிருந்த எண்களை இந்த பணத் தாள்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தார்.
“என்ன பெரியவரே..” என்றேன்.
“ஒரு மாசத்துக்கு முன்னாடி என் கணக்குல அய்நூறு ரூவா கட்டினேன்.. அந்த நோட்டுல இருந்த நம்பருங்க இது..” என்று கிழிந்த காகிதத்தைக் காட்டினார். யூரியா நெடி வீசிய அந்தத் தாளில் ஐந்து வெவ்வேறு எண்கள் இருந்தன
“அதை எதுக்கு எழுதி வெச்சிருக்கீங்க..”
“இன்னிக்கு பூச்சிக்கொல்லி மருந்து வாங்கறதுக்காக அந்தப் பணத்தைத் திரும்ப எடுக்கறேன்.. இப்ப நீங்க கொடுத்த நூறு ரூபா தாள்ல இருக்கற நம்பரும் இந்தச் சீட்டுல எழுதியிருக்கறதும் ஒண்ணு போல இல்லையே தம்பி..” என்றார் முண்டாசுத் தலையுடன்.
“அதே நோட்டு உங்களுக்குத் திரும்பி வராதுங்க.. அது வேற யாருக்காவது போயிருக்கும்.. இந்த நூறு ரூபா எல்லாம் இன்னொருத்தர் கட்டினது..”
“நான் அன்னிக்குக் கொடுத்த தாள் தான் எனக்கு வேணும்.. அடுத்தவங்க பணம் எனக்கெதுக்கு..”
அந்தக் குடியானவர் அறியாமையால் அப்படிப் பேசுகிறாரா, தெரியாதது போல நடிக்கிறாரா என்று கண்டுபிடிப்பது மிகவும் சிரமம்.
வேறொரு வாடிக்கையாளர் ‘டெபிட் கார்டை தேய்ச்சு நான் எதாவது செலவு பண்ணினா என் அக்கவுன்ட்ல டெபிட் பண்றீங்களே.. அதே மாதிரி கிரெடிட் கார்டுல பொருள் வாங்கினா எனக்கு கிரெடிட் தானே குடுக்கணும்’னு விதண்டாவாதம் செய்தது நினைவுக்கு வந்தது. அவருக்குப் புரிய வைப்பதற்குள் எனக்கு ஒரு வயது கூடிவிட்டது.
இப்போது விவசாயிக்கு என்ன பதில் சொல்வது என்று என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. இந்த மாதிரி ‘கஷ்டமர்’களைச் சமாளிக்க சரியான நபர் மேலாளர்தான். முள்ளை முள்ளால் எடுப்பார். விஷத்தை விஷத்தால் முறிப்பார். அவர் ஒரு சர்வ ரோக நிவாரணி. அப்போதைய Y2K பிரச்னைக்கே எளிமையான தீர்வு கண்டவர். வாடிக்கையாளரை அழைத்துக் கொண்டு மேனேஜர் அறைக்குச் சென்று விஷயத்தைச் சொன்னேன்.
“உட்காருங்க பெரிசு..” என்றார். “நீங்க எப்போ அந்த ஐநூறு ரூபா கட்டினீங்க.. தேதி ஞாபகமிருக்கா..”
“இந்தச் சீட்டுல அதையும் எழுதியிருக்கேன் பாருங்க..” என்று கந்தல் புராணத்தைக் காண்பித்தார்.
“அன்னிக்கு நீங்க என்ன சட்டை போட்டுட்டு பேங்குக்கு வந்தீங்க..” என்று கேட்டார் மேனேஜர்.
“ரோஸ் கலர் சொக்காய்ல வந்தேங்க.. நல்லா நினைவிருக்கு..”
“அந்தத் தேதியில நீங்க கட்டின பணம்.. அதாவது.. அதே நம்பர் உள்ள நூறு ரூபா தாள் உங்களுக்கு வேணும்.. அப்படித்தானே..”
“ஆமாங்க..”
“அதே நோட்டு உங்களுக்குக் கிடைக்கணும்னா.. அதே பஞ்சு மிட்டாய் சட்டையைப் போட்டுட்டு வரணும்.. அப்பதான் அதைக் கொடுக்க முடியும்..” என்றார் மேலாளர். “எங்க ஹெட் ஆபீஸ்ல அந்த மாதிரி ரூல் போட்டிருக்காங்க..”
நான் சிரிப்பை மறைப்பதற்காக கஷ்டப்பட்டு முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டேன். வாடிக்கையாளர் அந்த ஆடையை அணிந்து கொண்டு வந்து விட்டால் என்ன செய்வது என்ற பயமும் ஏற்பட்டது.
மேலாளரின் எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்து போன குடியானவர் “அந்த உடுப்பு இப்ப என்கிட்ட இல்லீங்களே..” என்றார்.
அத்தகைய பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தவர் போல மேனேஜர் கண்டிப்பான குரலில் சொன்னார். “அப்படின்னா.. பேசாம கேஷியர் கொடுத்த இந்த அஞ்சு நோட்டை வாங்கிட்டுப் போயிடுங்க..”
மேற்கொண்டு எதுவும் விவாதிக்க முடியாத விவசாயி அரை மனதுடன் பணத்தை எடுத்துக் கொண்டு கிளையை விட்டு வெளியேறினார்.
அவருடைய முண்டாசு மறைந்தவுடன் “சார்.. அருமையா சமாளிச்சீங்க.. எப்படி உங்களுக்குன்னு இந்த மாதிரி ஐடியால்லாம் தோணுதோ..” என்றேன்.
“அதனாலதான்யா நான் பிராஞ்ச் மேனேஜரா இருக்கேன்.. இதைவிட விவகாரமான ஆளுங்களை எல்லாம் என் சர்வீஸ்ல பார்த்திருக்கேன்..”
“கஸ்டமர் அந்த பிங்க் கலர் சட்டையைப் போட்டுட்டு வரேன்னு சொல்லியிருந்தா என்ன ஆயிருக்கும்..”
“அதுக்கு வாய்ப்பே இல்லே.. ஏன்னா.. போன வாரம் பயிர் இன்ஷூரன்ஸ் விஷயமா நானும் ‘அக்ரி’ ஆபீஸரும் இவரோட வயக்காட்டுக்குப் போயிருந்தோம்.. அங்க இருந்த சோளக்காட்டுப் பொம்மைக்கு கிழிஞ்சு போன அந்த ரோஸ்மில்க் சட்டையைதான் மாட்டி வெச்சிருந்தார்.. அந்தத் தைரியத்துல தான் சொன்னேன்..” என்றாரே பார்க்கலாம்.

2 Comments on “சித்ரூபன்/ திருவாளர் வில்லங்கம்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன