ஜே. செல்லம் ஜெரினா/கல்யாணமாலை! கொண்டாடும் வேளை!

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட பேரன்பின் சுகந்தம் என்ற முதல் சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி செல்லம் ஜெரினா எழுதிய “கல்யாண மாலை – கொண்டாடும் வேளை” என்ற சிறுகதை இங்கே – விருட்சம் மின்னிதழில்.

“கெட்டிமேளம்! கெட்டிமேளம்” என்ற குரலில் கணேச மூர்த்தி மூன்று முடிச்சிட்டு சாம்பவியைத் தன் சரிபாதியாக்கிக் கொண்டான். சாருமதியும் அவள் அன்னையும் இதில் எதிலுமே பட்டுக் கொள்ளாமலும், கன்றிய முகத்துடன் யாருடைய கவனஈர்ப்புக்கும் ஆளாகாமல், ஒதுப்புறமாய் நின்று கொண்டனர்.

சாருவுக்கு குமுறிக் கொண்டு வந்தது. மூன்று மாதம் முன்னால் நடந்ததெல்லாம் நினைவில் வந்து எரிச்சலையூட்டியது.

மேடையில் அக்னியை சுற்றி வந்து கொண்டிருந்தனர் புதுமணத் தம்பதியர். சாம்பவியின் மாநிறம் கூட கல்யாணக்களை கூடி பொன்னிறமாய் டாலடித்தது.

விழிகொட்டாமல் அவளையே பார்த்தாள். மாங்கல்யதாரணம் ஆன கையோடு கணவன் நெற்றியில் வைத்த குங்குமமும், கண்ணிலிட்ட காஜலும், நெற்றிச்சுட்டியும், பூஜடையும், பட்டுச்சேலையோடு சில தங்க நகைகளுமே அலங்காரம். அதிலேயே சாம்பவி லட்சணமாய்த் தெரிந்தாள். அதிகம் ஒப்பனை வேண்டாம் என்று தவிர்த்தே விட்டாள்.

மாப்பிள்ளை கணேசமூர்த்தி ஏதோ சொல்ல, முகம் சிவக்க. ஓரவிழிகளால் அவனை பார்த்து புன்னகை சிந்த, ஏனோ சாருவுக்கு இதைக் காணவே ஒப்பவில்லை.

இன்றைய தினம் சாருவுடையதும் கூட. எல்லாமும் சரியாக நடந்திருந்தால் இந்த மணமேடை அவளுடையதும் அல்லவா ? இவளும் இவளருகில் ரவியும் இருக்க இன்றைய நாளின் நாயகியாக ஜொலித்திருக்க வேண்டியவள் மூலையிலே முடங்கிக் கிடக்கிறாள். எத்தனை கனவுகள்?

ப்ச்! எல்லாம் நேரம். சாம்பவி சாருமதிக்கு அக்கா. பெரியப்பா மகள். சாருமதியின் தந்தை மஞ்சள் காமாலையால் மரணமடையும் வரையில் தனித்தனிக் குடித்தனம்தான். சட்டநாதன் பூரணி தம்பதிக்கு சாம்பவி அடுத்து ரிஷி.

சட்டநாதனின் தம்பிக்கு ஒரே மகள் சாருமதி.

ஒரே காம்பவுண்டுக்குள் அடுத்தடுத்து மூன்று வீடுகளைக் கட்டி சட்டநாதனின் தந்தை தான் உயிரோடிருக்கும்போதே மகன்களுக்கும் மகள் ஈஸ்வரிக்குமே ஆளுக்கொன்றாய் தந்து விட்டார்.

தம்பி அகாலமாய் இறந்ததுமே, சட்டநாதன் தம்பி மனைவியையும் மகளையும் தனியே இருக்க வேண்டாமென தன் குடும்பத்தோடு இணைத்துக் கொண்டார். அந்த வீட்டையும் வாடகைக்கு விட்டு அவர்கள் பேரிலேயே வங்கியில் போட ஏற்பாடும் செய்து விட்டார்.

ஒரு வயதே வித்தியாசம் பெண்களிருவருக்கும். ஆனாலும் தந்தையில்லாப் பிள்ளையென்று சாருவுக்கு கொஞ்சம் செல்லம் கொடுக்க, அவளோ தான்; தன் சுகமென பிடிவாதக்கார சுயநலவாதியாகிப் போனாள். சாம்பவியை,விட தான்,தான் மிகவும் அழகு என்ற எண்ணம் வேறு.

சாம்பவிக்கு விட்டுக் கொடுத்துப் போகும் அமைதியான குணம். யாரையுமே சட்டென்று பேசி விடமாட்டாள். பெரியவர்களை ஒத்துப்போவாள்.

எல்லாவற்றிலுமே சாம்பவிக்கு நேர் எதிர் சாருமதி. நடையுடை பாவனை அனைத்திலுமே அதிரடி!

சாம்பவி துடைத்து பொட்டு வைத்த வெள்ளிக் குத்துவிளக்கு என்றால் சாருமதி மினுக்கியெரியும் சாண்டலியர் சரவிளக்கு.

சாம்பவியினுடையதை விட சிறந்ததைத்தான் தனக்கு வேண்டுமென நிற்பாள். சாம்பவியும் பெரும்பாலும் விட்டுத்தந்து விடுவாள்.

இந்நிலையில் தான் –

பூ வைத்து உறுதி செய்ய ரவி வீட்டார் வந்திருந்தனர். சாம்பவியை கோயிலில் வைத்து பார்த்து பிடித்துப் போய் வந்த சம்பந்தம். முதலில் அலட்சியமாயிருந்த சாருமதி ரவியைப் பார்த்ததுமே ஜெர்க்காகினாள்.

“இந்தக் கருப்பிக்கா இத்தனை ஹாண்ட்ஸம்மான கை நிறைய சம்பாதிக்கிற மாப்பிள்ளை! அதுவும் வெளிநாட்டிலா?“ என்று எண்ணியவள் ஸ்டைலாக முன்னே நின்று வரவேற்றாள். நுனிநாக்கு இங்கிலீஷ்ஷில் ரவியுடன் பேசினாள். கண்களைக் கொட்டி லேசாக இதழ்களைக் கடித்து குலுங்காமல் குலுங்கிச் சிரித்தாள்.

லேசான ஒப்பனை ஸ்டைலிஷ்ஷான பேச்சு பாலிஷ்ஷில் குளித்த சீரான நகங்கள் கொண்ட விரல்களால் லிப்பாம்மில் மினுங்கும் இதழ்களை மூடியும் மூடாமலும் தலைசாய்த்து சிரிக்கும் மேனரிசம்.

ரவி குழம்பினான்.

சாம்பவியோடு பேச முயன்று தோற்றுப்போய் தன்னை தேற்றிக் கொண்டவனுக்கு சாருமதியின் கலகலப்பும், சலசலப்பும் அவனை கிளுகிளுப்புக்குள்ளாக்கி அவள் புறம் சாய வைத்தது.

சாம்பவி அவன் பேசும்போதெல்லாம் பேச்சை வளர்க்காமல் ஒற்றை வார்த்தையோடு நிறுத்திக் கொள்பவள். அதிகம் பேச முனையவில்லை. இவளோ அருவிபோல் பொழிபவள். அவளை விட கூடுதல் நிறமாக நவினமாக நாகரிகமாக சாருமதிக்கு அவனுடைய மதிப்பெண் கூடிக் கொண்டே போனது.

தப்பு செய்து விட்டோமோ என்று ஏங்கினான்.

தன் தாயிடமும் தமக்கையிடமும் பட்டவர்த்தனமாய் எண்ணத்தை சொல்லியும் விட்டான்.

சட்டநாதனின் சித்தப்பா முறையிலிருந்தவர் தான். முன்னே நின்றார் குடும்பத்துப் பெரியவராக. ரவியின் தமக்கை அவரிடமே சாம்பவிக்கு பதிலாக சாருவை கேட்க பெரியவருக்கு சொல்லொண்ணா கோபம்.

“பேச்சுமாறி பெண்ணை மாற்றி இதென்ன வழக்கம்,” என்று சத்தம் போட சாருவுக்கும் அவளின் தாய்க்கும் ஸ்விட்ச் போட்டாற் போல முகம் டாலடித்தது.

அயனான வரன், படிப்பு, வேலை, அழகு எல்லாவற்றிலுமே சிறந்த வரன். சாருவுக்கு விஷயம் தெரிந்ததுமே இமைகளை படபடவெனக் கொட்டி முறுவலித்து ரவியை பார்த்து வெட்கப் புன்னகை சிந்தினாள்.

“ரவிக்கு வெளிநாட்டுக்கு அடிக்கடி போக வேண்டி வரும். சாரு அதற்கேற்ப ஒத்து வருவாள் ரவியின் லைப்ஸ்டைலுக்கு அமைதியான சாம்பவியை விட மாடர்ன் டைப் சாருமதியே பொருத்தம் என்று சொல்லிவிட சாம்பவி குடும்பம் திகைத்தது.

சாருவுமே வீட்டுப் பெண்தான். ஆனால் – பூ வைப்பது வரை வந்து விட்டு பெண்ணை மாற்றினால் சாம்பவியின் மனசு கஷ்டப்படாதா?

“மணமேடை வரைக்குமே வந்து மணமகன் மாறுவது இல்லையாக்கும்?” சாருவின் அன்னை ஏகடியமாய் பேசினார்.

“கட்டிக்கிறவர்களுக்கு மனம் ஒத்துப் போனால் தான் வாழ்க்கை நன்றாகயிருக்கும். மாப்பிள்ளைக்கு சாருவைத்தானே பிடிக்குது” என்று அழுத்தமாய் பேச சட்டநாதன் தடுமாறினார்.

தன்னுடைய மகள் ரவியை ஆசைப்பட்டிருப்பாளோ? இப்போது தங்கைக்கு என்று பேசும்போது மனசு உடைந்து போய் விடுவாளோ?

மகளை நிமிர்ந்து பார்த்தார். முகம் நிர்மலமாயிருந்தது.

“இதோ பாரு சாம்பவி! அவருக்கு என் மேலே விருப்பம் விழுந்திடுச்சு; நீ ஒதுங்கிக்கிறதுதான் நல்லது. உனக்கெல்லாம் அந்த கேட்டரிங் கணேச மூர்த்தி மாதிரியான ஆளுதான் சரி. உள்ளூருலேயே குப்பை கொட்ட அதான் வசதி. ரவி ஐடியிலே வேலை பண்றவர். அவருக்கு நாந்தான் சரி ஜோடி,” என்று காதருகில் முணுமுணுக்க, சாம்பவி நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தாள்.

“என்னம்மா? “

“ஒன்னுமில்லேப்பா! “

“அப்பா மேலே வருத்தமாடா? “

“இல்லைப்பா. மாறாக சந்தோஷம் தான். பெரிய கஷ்டத்திலேருந்து தப்பிச்சுட்டேன்னு தோனுது.”

“புரியறாப் போல சொல்லும்மா. “

“இல்லப்பா. இந்த மாப்பிள்ளை என்னைப்பிடிச்சு போயி சம்மதம் சொன்னாரு. இப்போ சாருவைப் பாத்ததுமே அவளைப்பிடிச்சுப் போயி சம்மதம் சொல்றாரு. நாளைக்கு வேற யாரையாவது பார்த்து இது இன்னும் பெட்டர் போலவேன்னு மனசு மாறுனா என்னாகும்ன்னு நினைச்சேன். இப்படி க்ஷண சித்தம், க்ஷணப் பித்தம்ன்னு மனசு மாறிட்டே இருக்கிறவரோட நித்யகண்டம் பூர்ணாயுசா எப்படிப்பா குடும்பம் நடத்த முடியும்? “

சாருவின் முகம் ஒரு நொடி இருளடித்து விலகியது.

“ச்சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்ன்னு பேசாதே சாம்பவி. எம்பொண்ணு பதவிசா நடந்து குடும்பம் நடத்துவா. அவ நாகரிகம் தெரிஞ்சவ. “

“நான் ஒன்னும் சொல்லலை சின்னம்மா! நான் தப்பிச்சேன்னு சொன்னேன். ரவி மாதிரி ஆளெல்லாம் மனைவிங்கிறவ சரிபாதின்னு நினைக்காம மனைவியை ஸ்டேட்டஸ் ஸிம்பலா பார்க்கிற மென்ட்டாலிட்டின்னு சொன்னேன். எனக்கு சரிப் படமாட்டார்.”

“அதான் அவரே சரிப்படமாட்டேன்னு தூக்கிப் போட்டுட்டு தானே சாருவை செலக்ட் பண்ணிருக்காரு. உனக்கெல்லாம் குண்டுச்சட்டிலே குதிரையோட்டறவன் தான் சரிப்படுவான்.”

சாருவின் அம்மா பேச்சு பெரியவருக்கு கோபத்தை மூட்டியது. சட்டநாதனும் பூரணியும் விக்கித்து நின்றனர்.
இதென்ன வாயா? தேள் கொடுக்கா? கொஞ்சமும் யோசிக்காமல் எடுத்தெறிஞ்சு பேசும் தம்பி மனைவியை ஒன்றும் சொல்லமுடியாமல் அமைதியாயிருந்தார்.

“சாருமதி! உங்கம்மாவை கொஞ்சம் நாவடக்கமா இருக்கச் சொல்லு,” பெரியவர் காந்த;

“என்ன தப்பா சொல்லிட்டேன் மாமா? . இதே அவங்கப்பா இருந்தா இப்படியெல்லாம் பேசுவீங்களா “

சாருவின் அம்மா அடுத்ததை துவங்க சட்டநாதனின் தங்கை ஈசுவரி

“சும்மா பேசனுமின்னு பேசாதீங்க சின்னண்ணி. என்னா குறை உங்களுக்கு. வள்ளிசா வாடகைப்பணம் வருது . உங்களுக்கு பைசா செலவு இல்லாம எல்லாமே பெரியண்ணா பண்றான். இன்னும் என்ன? “

“எல்லாரும் பேசாமயிருங்க. சாம்பவி உன் முடிவு என்னம்மா? “

“எனக்கு இந்த வரன் வேண்டாம் தாத்தா. “

‘’க்கும். இதான் கீழே விழுந்தாலும் மீசையிலே மண் ஒட்டலை கதை. “
முணுமுணுத்தாள் சாரு.

“என்னம்மா சொல்றே?”

“ஆமாம் தாத்தா! நிமிஷத்துக்கு நிமிஷம் மனசை மாத்திக்கிற ஸ்திரமில்லாதவரோடு என் வாழ்க்கையை பிணைச்சுக்க இஷ்டப்படலை தாத்தா. என்னை எனக்காகவே விரும்பி ஏத்துக்கிறவன் தான் எனக்கு கணவனா வரனும். சாருவுக்கு ஓக்கேன்னா நீங்க போயி சாருவுக்காக தட்டு மாத்திக்கிடுங்க தாத்தா. எனக்கு முழுமனசா சம்மதம்.”

எல்லோருமே வெளியே போக சாரு மவர்ச்சியோடு வந்தாள்.

அத்தை மட்டும் பின்தங்கி “என்னடாம்மா இப்படி சொல்லிட்டே. நல்ல வேலையிலே கைநிறைய சம்பளம்.”

“வேண்டாம்த்தே! கடைசி நிமிஷத்திலே தப்பிச்சுட்டேன்னு சந்தோஷமாருக்கு அத்தே. “

சாம்பவி சிரித்தாள். அத்தை அவள் நாடியைப் பிடித்துக் கொஞ்சினாள்.

அதன் பின்னே – சாம்பவிக்குமே வரன் பார்த்து ஒரே பந்தலில் செய்வதே உத்தமம் என்று பெரியவர் அபிப்பிராயப் பட்டார். பூவைப்பது வரை வந்து நின்ற சுபகாரியத்தை ஊரார் பேச்சுக்கு இடம் தராமல் உடனடியாக வரன் பார்த்து முடிப்பதே சிலாக்கியம் என்று சொல்ல முன்பே வீடு தேடி வந்து கேட்ட கணேச மூர்த்திக்கே சம்மதம் சொன்னாள் சாம்பவி.

எல்லோருக்குமே ஒருவகையில் திருப்தி தான். எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன். கணேசமூர்த்தியை நன்றாகவே தெரியும். கணேசமூர்த்தியின் தந்தை சின்ன அளவில் கேட்டரிங் தொழிலை செய்து வந்தார். ரெண்டு பெண்ணும் பிள்ளையுமாக அழகான குடும்பம் கணேச மூர்த்தி காலேஜ் முடிக்கும் போது அவன் தந்தைக்கு பக்கவாதம் தாக்க உடனே குடும்பத்தையும், தொழிலையும் கையிலெடுத்துக் கொண்டான் கணேசமூர்த்தி.

அசுர உழைப்பு. நான்கே வருடங்களில் கணேஷ் கேட்டரிங் நம்பர் ஒன் நிலையை அடைந்து விட்டது. இரு தங்கைகளையும் திருமணம் செய்து கொடுத்தப்பின்னே தான், தன் திருமணம் என்றிருக்க, அவன் தாய்க்கோ சாம்பவி மருமகளாக வரவேண்டுமென்ற எண்ணம்.

பெண்கேட்டும் வந்தார் தான். சட்டநாதன் தான் பிடி கொடுக்கவில்லை. அப்போதுதான் ரவியும் கேட்டு வர, ரவியின் வேலை படிப்பை பார்த்து சம்மதிக்க, இப்போது வேறுவிதமாய் முடிந்து விட குழப்பத்திலிருந்தார்.

சாம்பவி அத்தையிடம் கணேசனையே முடிக்கும்படி கோடி காட்ட அத்தையின் கணவரும் அவரும் சட்டநாதனிடம் பேசினர்.

கணேசன் தொழிலில் அப்போதுதான் கால் வைத்த நேரம். சாம்பவியை ஒருமுறை எதேச்சையாய் சந்தித்து தன் மனதைக் கூறிவிட்டு தற்போதைய நிலையையும் விளக்கினான். காத்திரு என்றும் கூறவில்லை. இவளுமே இதை மனதில் ஏற்றிக் கொள்ளவில்லை. ஆனால் கணேசமூர்த்தியின் தாயார் பெண் கேட்டதுமே மனசுக்குள்ளே சின்னப்பூ பூத்தது உண்மைதான். ஆனாலும் தந்தையின் முடிவுக்கே தலைசாய்த்தாள். இப்போது அத்தையிடம் எனக்காக காத்திருந்து பெண் கேட்டவனையே முடிக்கலாமே என்று கூற அத்தையுமே இவள் பக்கம் நிற்க –

இதோ நாளும் குறித்து முறையாய் இரு திருமணத்திற்கும் வீடு தயாரானது.

புடைவை, நகை என்று எல்லாவற்றிலுமே மல்லுக்கு நின்று அதிக விலையிலேயே எடுத்துக் கொண்டாள் சாருமதி.

திருமணத்திற்கு நான்கு நாள் இருக்கையில் ரவி வீட்டிலிருந்து தாக்கல் வந்தது. திருமணத்தை நிறுத்தும்படி. சட்டநாதன் குடும்பம் ஓடியது.

அங்கே –

ரவி தன்னுடைய மேனேஜரின் மகளையே மணந்து கொண்டு, கனடா போய் செட்டிலாகி விட்டதாகக் கூறிவிட யாருக்குமே சுரத்தேயில்லை.

சாருமதி வீட்டில் ஆடித் தீர்த்து விட்டாள். தன் கல்யாணம் நின்று போக சாம்பவி கல்யாணம் நடக்கக் கூடாது என்று ஆகாத்யம் செய்ய அத்தை ஈஸ்வரி அவளுக்கு மேலே பேசி வாயை அடைத்தாள். பெரியவரும் கோபமாய்ப் பேச, ஒருவழியாய் எல்லா அக்கப்போரும் முடிந்தது. சாம்பவி கல்யாண வைபோகம் அமோஹமாக நடந்து கொண்டிருந்தது.

மணமக்களிருவரும் ஒருவருக்கொருவர் பாலும் பழமும் சாப்பிட கேலியும் கொண்டாட்டமுமாய் வீடு மகிழ்ச்சியிலிருந்தது.அடுத்தடுத்த சடங்கு சம்பிரதாயங்கள் தொடர்ந்தன.

யாரையோ அழைக்கப்போன ஈஸ்வரியத்தை சாருவின் குரல் கேட்டு திகைத்து நின்றாள். ஈஸ்வரியின் நாத்தனார் பையனின் நண்பனோடு விரல் நுனியால் இதழ் பொத்தி தலையைச் சாய்த்து தன் மேனரிசச் சிரிப்பை சிந்திக் கொண்டிருந்தாள் சாருமதி. அவன் அவளை மையலோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

சிறுத்தை புள்ளிகளை மாற்றிக் கொள்வதில்லை.

திருமதி செல்லம் ஜெரினா, சீர்மிகு சீர்காழியில் பிறந்து சென்னையை வாழுமிடமாகக் கொண்டவர். தினமலர் வாரமலரில் இவர் எழுதிய முதல் சிறுகதை டிவிஆர் சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்று, இவரை கதை எழுத அழைத்து வந்தது. அடுத்து அமரர் ராமரத்னம் குறுநாவல் போட்டியில் கலைமகள் பரிசு தந்து ஆசிர்வதித்தது. இதுவரை நாற்பத்தைந்து நாவல்கள், 250க்கு மேலான சிறுகதைகள் மற்றும் எட்டு வரலாற்று நாவல்கள் எழுதியுள்ளார்.

கல்கி, கலைமகள், குங்குமம், குமுதம், குமுதம் சிநேகிதி, ராணி, அவள் விகடன், வாரமல்ர், தினமணி கதிர் போன்ற பல்வேறு பத்திரிகைகளில் இவருடைய படைப்புகள் வெளியாகியுள்ளன. பல சிறுகதைகள், குறுநாவல்கள் மற்றும் நாவல் போட்டிகளில் பரிசுகள் பெற்றுள்ளார்.

குவிகம், கௌரா, ஓம்சக்தி, பொதிகைச்சாரல், கல்கி, கலைமகள் நடத்திய போட்டிகளிலும், ஸ்ரீ அனந்தநாராயணன் நினைவு நாவல் போட்டி, வரலஷ்மியம்மாள் நினைவு நாவல் போட்டி, சமுத்திரம் நினைவு சிறுகதைப்போட்டியென பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றுள்ளார். இவருடைய நாவல்கள் பெண்மணி, ராணி முத்துவிலும் வெளி வந்துள்ளன.

இவருடைய சிறுகதைகள் ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பத்திரிகைகளில் ப்ரசுரமானதோடு ஹிந்தியில் புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளன. வானதி பதிப்பகம் மூலம் இவருடைய நான்கு வரலாற்று நாவல்கள் புத்தகமாக வெளி வந்துள்ளதை இவர் பெருமிதமாக நினைவு கூர்கிறார்.

One Comment on “ஜே. செல்லம் ஜெரினா/கல்யாணமாலை! கொண்டாடும் வேளை!”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன