
மீனா தினமும் மாலை மொட்டை மாடியில் உள்ள பெஞ்சில் அமர்ந்து கடிதம் எழுதுவாள். அவள் எழுதும் கடிதங்களை யாருக்கும் அனுப்புவதில்லை. ஒவ்வொரு கடிதத்தின் முடிவிலும், “ஒருநாள் நீ இதைப் படிப்பாய்” என்று எழுதுவாள்.
அவளுடைய கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக வெளிநாடு சென்றிருந்தார். ஆரம்பத்தில் வாரம் ஒருமுறை கடிதம் வந்தது. பின்னர் மாதம் ஒருமுறை. அதன்பின் கடிதங்களே வரவில்லை.
மீனா கடிதங்கள் எழுதுவதை மட்டும் நிறுத்தவில்லை.
அவள் கடிதம் எழுதும் பொழுது பெஞ்சின் அருகில் இருக்கும் சிறு கல்தூணில் அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருக்கும் சிவப்புப் பறவை நாளடைவில் அவளது தோழமையானது. நாள்தோறும் அவள் எழுதுவதை அது அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கும்.
ஒருநாள் மீனா “நீ திரும்பி வருவாயா என்று தெரியவில்லை. ஆனால் உனக்காகக் காத்திருந்த இந்த வீட்டில் என் நினைவுகள் எல்லாம் இருக்கின்றன. இதுதான் எனது கடைசி கடிதம்” என்று எழுதி அந்தக் கடிதத்தை மடித்து பறவையின் அருகில் வைத்தாள்.
மறுநாள் காலை கதவைத் திறந்தபோது, வாசலில் ஒரு பழைய அஞ்சல் உறை கிடந்தது.
நடுங்கிய கைகளால் அதைத் திறந்தாள்.
அதற்குள் ஒரே ஒரு வரி இருந்தது:
“நான் வருகிறேன்”
125
