
நீரஜா பூங்காவின் அமர்வில் அமர்ந்து புத்தகத்தைப் படிக்க முயன்று கொண்டிருந்தாள். அவள் நினைவெல்லாம் அந்த நிகழ்ச்சியைச் சுழன்று வந்தது.
நீரஜா அரவிந்த்தின் 4 வருடக் காதலுக்குப்பின் நடந்த திருமணம் ஒரே வருடத்தில் முறிந்தது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம் : “ ஒத்துவரல”. இன்று காலையில் நீதிமன்றம் விவாகரத்தை வழங்கி அவர்கள் சொத்தை சரியாக இரண்டாகப் பிரித்து எடுத்துக் கொள்ளும்படி தீர்ப்பளித்தது.
‘அடுத்து என்ன?’ என்று நீரஜா யோசித்துக்கொண்டிருக்கும்போது திடீரென அவர்கள் வளர்த்த லவ் பேர்ட்ஸின் ஒன்று அவளருகில் வந்து இவளைப் பார்த்து விடாமல் க்ரீச்சிட்டது. சொத்தைப் பிரிக்கும்போது இவற்றையும் ஆளுக்கொன்றாக அரவிந்த் கொடுத்தான். அரவிந்த் தன்னுடையதை கொண்டு போய்விட்டான். இவளுடையதை பூங்காவில் பறக்க விட்டாள். ஆனால் அது பறக்காமல் இவளருகேயே அமர்ந்து கத்துகிறது. அவளுக்குப் புரிந்துவிட்டது.
“ ஓ உன் ஜோடிய தேடறையா?” என்றதும் அது ஆம் என்பதுபோல் அமைதியாகத் தலையசைத்தது. அவள் உடனே அரவிந்த்துக்கு தொலைப்பேசி செய்து ” ஏய் ஃபூல் சொத்தை பிரின்னா லவ் பேர்ட்ஸையும் பிரிப்பாயா?அந்த குருவியை உடனே பூங்காவுக்கு எடுத்து வா. ஜோடியை பிரிக்கிறது மகா பாவம்” என்றாள்.
119
