
அந்த பூங்காவில் ஒரு ஓரமாக அமர்ந்து சிவப்பு ஆடை அணிந்திருந்த இளம்பெண் தேவி ஶ்ரீ கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு அதையே பார்த்தபடி சோகமாக இருந்தாள்.
“ அம்மா, உனக்குப் பிரியமான நீ செய்ய முடியாமல் போன கதை எழுத வேண்டும் என்ற ஆசையை நான் செய்யும் போது எப்போதும் பாராட்டி மகிழ்வாய். நான் அனுப்பிய கதைகள் பிரசுரமாகாமல் வருத்தப்படும் நேரங்களில் என் தலையைத் தடவி இன்னும் நன்றாக யோசித்து நிறைய எழுதிப் பழகு கண்ணு. ஒரு நாள் கண்டிப்பாகப் பிரசுரமாகும் என ஆறுதல் சொல்வாயே”.
“ உன் வாக்கு பலித்து இதோ என் கதை பத்திரிகையில் வந்திருக்கும்மா . ஆனால் அதைப் பார்த்து சந்தோஷப்பட நீ இல்லாமல் பாழாய் போன புற்றுநோய் உன்னை என்னிடம் இருந்து பிரித்து விட்டதே. இந்த மகிழ்ச்சியை இப்போ யாரிடம் போய்ப் பகிர்வேன்” என்று மனசுக்குள் புலம்பினாள்.
சத்தமின்றி அருகில் வந்து அமர்ந்த சிவப்புக் குருவி “ கீகீகீ என்று சந்தோஷக் கூச்சலிட்டு இவள் தலையைத் தன் அலகால் தடவி விட்டுப் பறக்க “அம்மா நீ தானா “ என்று ஆச்சரியத்துடன் கத்தினாள் தேவி ஶ்ரீ.
125
