தி.வள்ளி/ கொலுசு

WriterSCafe எழுத்தாளர் சங்கமம் சார்பாக வெளியிடப்பட்ட பேரன்பின் சுகந்தம் என்ற முதல் சிறுகதை தொகுப்பில் இருந்து திருமதி வள்ளி எழுதிய “கொலுசு என்ற சிறுகதை உங்கள் வாசிப்பிற்கு –

“அம்ம்ம்ம்மாடீடீடீடீடீ… ஆராச்சும் வாங்களேன்,” வேலாயியின் அலறல் கேட்டு ‘சங்கரன் மெஸ்’ஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்த எல்லோரும் போட்டது போட்டபடி பின்கட்டுக்கு ஓடினர். ஈரக்குலையை புடுங்கி போட்டது போல அதிர்ந்து போய் நின்றனர். அங்கே அவர்கள் பார்த்த காட்சி???
…..
பொழுது இன்னும் சரியாக விடியாத வேளை. சேவல் ரெண்டும், மூன்று முறை கூவி விட்டு, சோம்பலாக படுத்துக் கொண்டது. சேவல் கூவும் சத்தம் கேட்டு எழுந்த வேலாயி, உள்ளங்கையை பரபரவென தேய்த்து அதில் கண்விழித்து, “அப்பா குளத்தங்கரை கணேசா, இன்னிய பொழுது நல்ல பொழுதாகட்டும். வியாபாரம் நல்லபடியா நடக்கட்டும்,” என்று வேண்டியபடிக்கு எழுந்து வாளி தண்ணீரில் சாணத்தை கரைத்து, வாசல் தெளித்து, கோலமிட்டாள். பின் மடமடவென மெஸ்ஸில் காலை டிபனுக்கு தேவையான வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள். எந்த வேலைக்கும் மருமகள் தனத்தை எதிர்பார்க்க மாட்டாள்.
வேலாயி “சங்கரன் மெஸ்”ஸின் சொந்தக்காரி. ஒடிசலான தேகம். உழைத்து, உழைத்து ஓய்ந்து போனவள் என்பதை உணர்த்தியது சுருக்கம் விழுந்த முகமும், கைகளும்.
அவள் உழைப்பில் கட்டிய அந்த சின்ன வீடும், மெஸ்ஸும் தான் அவள் சொத்து. அவளிடமிருந்த ஒரே பொக்கிஷம் அந்த டிரெங்கு பெட்டி. அதை எப்போதும் பூட்டி வைத்திருப்பாள். சாவி, கழுத்திலே தொங்கும் கருப்பு கயிறுடன் பின்னிப் பிணைந்திருக்கும். அன்னைக்கும் அப்படித்தான் குனிந்து தன் கழுத்தில் கிடந்த கயிற்றில் இருந்த சாவியை வைத்து ட்ரங்கு பெட்டியை திறந்தாள் வேலாயி.

உள்ளே நுழைந்த மருமகள் தனத்திற்கு பத்திக் கொண்டு வந்தது. சாதாரணமாகவே தனத்திற்கும், வேலாயிக்கும் எப்போதும் ஒத்து வராது.
“அப்படி என்னத்தத்தான் கிழவி வச்சிருக்குதோ? இந்த டிரங்கு பெட்டிய தொறந்து தொறந்து பார்க்குது. என்னமோ கிலோ கணக்குல தங்கமும், வெள்ளியும் இருக்கிறாப்ல,” மனதிற்குள் காய்ந்தாள் தனம்.

தனம் சொன்னதிலும் தப்பில்லை. ஒரு நாலஞ்சு பழைய சேலைகளும், வேலாயி அவன் கணவன் ஞாபகமாக வைத்திருந்த ஒரு குடும்ப போட்டோவும், இல்லைன்னு சொல்லாம தாய் வீட்டு சீரா, அவளோட அம்மா சின்னத்தாயி மூத்தவன் தங்கராசு பிறந்தப்ப, செஞ்சு போட்ட கனமான வெள்ளி கொலுசு. இவ்வளவுதான் அவள் சொத்து. அந்த கனமான வெள்ளி கொலுசுதான் தனத்தின் கண்களை உறுத்திக் கொண்டிருந்தது.

கணவன் தங்கராசுவிடம் பொரிந்து தள்ளினாள்.
“ஏன்யா, அந்த வெள்ளி கொலுச வச்சுக்கிட்டு உன் ஆத்தா என்ன செய்யப் போகுது? நானும் இந்த வீட்டுக்கு வந்து குப்ப கொட்டி அஞ்சாறு வருசமாச்சு. இந்த ஓட்டு வீட்டையும், மெஸ்ஸையும், தவிர என்னத்த கண்டேன்? சிங்கக்குட்டி மாதிரி ஆம்பளப் புள்ளைய பெத்து கொடுத்தது உங்க ஆத்தாளுக்கு பெருசா தெரியல.”
“நான் என்ன வைரமும், வைடூரியமுமா கேக்கிறேன்? தேஞ்சு போன கொலுசை கடைல குடுத்துட்டு, நல்ல கொலுசு வாங்கி போடலாம்னு ஒரு சின்ன ஆச. உங்க ஆத்தா வச்சிருக்கற கொலுசக் கேட்டேன். அதுக்கு கிழவி என்ன பேச்சு பேசிடுச்சு.. உனக்கு கொலுசு வேணும்னா உங்க ஆத்தா கிட்ட கேட்டு வாங்கிட்டுவான்னு சொல்லுது.”
“ஆனைக்கு ஒரு காலம் வந்தா, பூனைக்கு ஒரு காலம் வராமலா போகும்?”
இருக்கு இந்த கிழவிக்கு. இந்த கிழவி மட்டுமென்ன, அவ ஆத்தா வீட்லயிருந்து வண்டி நிறைய சீரு செட்டு கொணாந்துச்சா? உங்க ஆத்தாள கேக்குறதுக்கு உனக்கும், உன் தம்பிக்கும் வக்கில்ல. அதான் ஆத்தாள தலையில தூக்கி வச்சுக்கிட்டு கொண்டாடுதீகளே!”

“ஆத்தா சீரு செனத்தி கொண்டாராட்டி என்னடி? அது கையில தான் இருக்கு பொக்கிஷமே; அம்புட்டு ருசியா சமைக்கப்போயிதான், இன்னைக்கு சின்ன இட்லி கடையா ஆரம்பிச்ச இடத்துல பெரிய மெஸ் போட்டிருக்கோம். எல்லாம் ஆத்தாளோட உழப்புதான? அதப்போய் இப்படி கரிச்சு கொட்டுறியே. ஒரு கொலுசு கொடுக்கலைன்னு இந்த பேச்சு பேசுற. அத அவுக ஆத்தா ஞாபகமா வச்சுருக்கு. அத போய் கேக்குறியே?”
தங்கராசுவின் பதிலடியை எதிர்பார்க்காத தனம் வெடுக்கென முகத்தை திருப்பிக் கொண்டு உள்ளே போய்விட்டாள்.

வேலாயியின் புருஷன் சங்கரன் சாரம் கட்டி, பெயிண்ட் அடிக்கும் தொழிலில் இருந்தான். விதி செய்த சதி ஒருமுறை பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது, சாரத்தில் இருந்து தவறி விழ, அந்த இடத்திலேயே உயிரை விட்டான்.

இடிந்து போனாள் வேலாயி. உறவுகள் ஆளுக்கொரு விதமாய் படுத்த, பிள்ளைகளை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்று மனதைரியத்தை வரவழைத்துக் கொண்டாள். தன் கையை நம்பி உழைக்க ஆரம்பித்தாள். சின்ன அளவில் இட்லிக்கடை போட்டாள். அவளுடைய மல்லிப்பூ போன்ற இட்லியும், கமகமக்கும் சாம்பாரும், கெட்டிச் சட்னியும், வெகு விரைவில் பிரபலமானது. அவள் கை மணத்தால் அவளைத்தேடி வந்து சாப்பிடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது.

தங்கராசுவையும், குமாரசாமியையும் உள்ளூர் பள்ளிக்கூடத்தில் படிக்கத்தான் வைத்தாள். இருவருக்குமே படிப்பு ஏறவில்லை. வேலாயி தலையாலே தண்ணி குடிச்சுப் பார்த்தாள், ஒன்றும் நடக்கவில்லை. அஞ்சாம் கிளாஸ் வரை படிச்சதே பெரும்பாடு. ஆனால் அம்மாவின் கைமணம் அப்படியே இருவருக்கும் கை வர, கடையிலே சமையலை பார்த்துக் கொண்டார்கள். தரமான உணவும், நியாயமான விலையும், அவள் கடையில் கூட்டத்தைக் கூட்டியது.

கொஞ்சம் கொஞ்சமாக அந்த சின்ன இட்லி கடை வருமானம் ஈட்ட ஆரம்பித்தது. கட்டும் செட்டுமாக இருக்க, சொந்தத்தில் ஒரு வீடும், முன்பகுதியில் சின்ன கடையும், போட முடிந்தது. அங்கே இங்கே என்று அலைய, ஆளுக்கொரு பைக்கும் வாங்கிக் கொண்டார்கள்.

அவர்கள் வாழ்க்கை தரம் உயர்ந்தது. இட்லி கடை “சங்கரன் மெஸ்”ஸாக உயர்ந்ததும், கூட நாலு பேரை வேலைக்கு வைத்துக் கொண்டார்கள். உட்கார்ந்து சாப்பிட பத்து டேபிள்கள், சேர்கள் வாங்கிப் போட்டார்கள். அண்ணனும் தம்பியும் பம்பரமாக சுழன்று, நேரடியாக சமையலை கவனித்துக் கொண்டார்கள்.

தங்கராசுவுக்கு கல்யாண வயது வந்ததும் ஊரைப் போல, நாட்டைப் போல, வேலாயிக்கும் மகனுக்கு கல்யாணம் பண்ணிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் வந்தது. பெண் பார்க்கப் போன இடத்தில் லட்சணமாகவும், அமைதியாக, மென்மையாக பேசிய தனத்தின் வலையில் விழுந்த வேலாயி, அவளை மகனுக்கு கல்யாணம் செய்து வைத்தாள்.

தனம் கொஞ்ச நாளைக்கு சந்தோஷமாக இருந்தாலும், ஆசைப்படுவதில் அவளுக்கு அளவே கிடையாது. வேலாயி கஷ்டப்பட்டு இந்த அளவுக்கு உயர்ந்த கதையை சொல்லும் போது அவளுக்கு எரிச்சல் தான் வரும். அண்ணி படுத்தும் பாட்டை பார்த்து, குமாரவேலு தனக்கு கல்யாணமே வேண்டாம் என்று சொல்லி விட்டான்.

தனத்திற்கு அடுத்த வருடத்தில் ஆண் குழந்தை பிறக்க குடும்பமே சந்தோஷத்தில் ஆழ்ந்தது. “நீலன்” என்று பெயர் வைத்தார்கள். நீலன் தவழ்ந்து, பின் நடக்க ஆரம்பித்தான். வீடு முழுக்க சுற்றி சுற்றி வருவான். பற்றாக்குறைக்கு மெஸ்ஸிலும் சுற்றி வருவான். அவனை சமாளிப்பதே பெரிய காரியமாக இருந்தது.

அவன் பிறந்து ஆறு மாதமாகும்போது, வேலாயிக்கு கண்ணில் பிரச்சனை ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக பார்வை குறைய ஆரம்பித்தது.
ஒரு நாள் சங்கரனிடம், “தங்கராசு அந்த பெட்டியில ஒரு ஜோடி வெள்ளி கொலுசு இருக்கு, அதை எடுத்துட்டு வா, என் பேரனுக்கு என் கையால போட்டு விடுறேன். ஆச்சி உனக்குன்னு பண்ணுனது. நீ சின்ன வயசுல போட்டது, இத்தனை நாள் பத்திரப்படுத்தி வைச்சிருந்தேன். உன் மகன் பிறந்ததும், பாலிஷ் போட்டு புதுசு போல வச்சிருக்கேன். பார்வை குறைஞ்சு, இப்பவே லேசாதான் அவன் முகம் தெரியுது, முழுக்க பார்வை போயிடுச்சுன்னா அந்த பிள்ளையை பார்க்க முடியாது. அவன் நடமாடும் போது கேட்கும், இந்த கொலுசு சத்தம் எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்” என்று கூற, தங்கராசு கண் கலங்கினான். வேலாயி கழுத்து கயிற்றில் இருந்த சாவி கைமாற, டிரங்கு பெட்டியை திறந்து கொலுசை எடுத்து அம்மாவிடம் கொடுத்தான். தன் கையாலேயே நீலன் காலில் மாட்டிவிட்டாள் வேலாயி.

“ஆமாம் பெருசா அஞ்சு பவுனுக்கு தங்கச்சங்கலி பண்ணி போட்டுட்டீங்க. இந்த பழைய வெள்ளி கொலுச போடுறதுக்கு இவ்வளவு அலப்பற,” என்றாள் தனம் குத்தலாக. அம்மாவின் உணர்வுகளை மதிக்காமல், அவள் மனம் நோக பேசும் தனத்தை ஆற்றாமையோடு பார்த்தான் தங்கராசு.

“ஏண்டி தனம், நீ என்னமோ 100 பவுன் போட்டுகிட்டு வந்து இங்க கொட்டுன மாறி பேசுற. நானும், எம்புள்ளைகளும், கஷ்டப்பட்டு உழச்சு இந்த அளவுக்கு வந்திருக்கோம். அன்னைக்கு உன்ன கல்யாணம் பண்ணி குடுக்கும் போது இந்த வசதியான வாழ்க்க, உங்க வீட்டுக்கு பெருசா தெரிஞ்சது. இப்ப இங்கிட்டு வந்த பின்ன உனக்கு எதுவுமே பெருசாத் தெரியல,” என்று மல்லுக்கு நின்றாள் வேலாயி.

“எங்கள மட்டும் பெரிசா சொல்லுதீக. உங்க குடும்பமே ஊனமுள்ள குடும்பம்தான். உங்களுக்கு கண்ணு பார்வ போச்சு. உங்க பிள்ளைங்க ரெண்டு பேருக்கும் இப்பவே காது கேக்க மாட்டேங்குது. உரக்க பேசினாதான் ஓரளவு கேக்குது. இதையெல்லாம் மறச்சுதானே என்னை கல்யாணம் கட்டி கூட்டிட்டு வந்தீக. அதான் உங்க சின்ன பையனுக்கு ஒரு பொண்ணும் வரமாட்டேங்குது.”

“வேணான்டியம்மா.. உன்ன மாதிரி ராட்சசி கிட்ட சிக்கிக்கிட்டு சங்கடப்படுறத விட, அவன் எனக்கு புள்ளயாவே இருந்து, காலத்த கழிச்சிட்டு போவட்டும்.”

“அம்மா அவளப் பத்தி தெரியாதா? எதுக்கு பதிலுக்கு பதிலு பேசுற. சே வீட்ல நிம்மதியே போச்சு. காலைல பூரா கடையில உழைச்சிட்டு வந்தா, நீங்க ரெண்டு பேரும் ஆரம்பிச்சிடுதீக.”

“அண்ணி எங்களுக்கு காது கேக்கல, நீங்க கத்தி பேசணும்னு சொல்றது சரிதான். ஆனா நாங்க அந்த குறைய வெளிய தெரியாமத்தான கடைய நடத்திக்கிட்டு வரோம். உதட்ட பாத்தே கஸ்டமர் என்ன கேக்குறாங்க, என்ன பேசுறாங்கங்கறத தெரிஞ்சுக்கிட்டு, எவ்வளவு அழகா நிர்வாகம் பண்றோம்”

“அட ஆமாம் கொழுந்தனாரே, உங்க மூணு பேரையும் மாதிரி மகா கெட்டிக்காரங்க ஒலகத்துல கிடையாது. உங்க அம்மாவுக்கு கண்ணு தெரியாது. உங்க ரெண்டு பேருக்கும் காது கேட்காது.. இவ்வளத்தையும் மீறி பிசினஸ்ல கொடி கட்டி பறக்குறீக,” என்றாள் கிண்டலாக.

தங்கராசுவுக்கு மனைவியின் பேச்சு கோபத்தைக் கிளப்பியது.

“நீ சொன்னாலும், சொல்லாட்டியும் அந்த கெட்டிக்காரத்தனம் எங்ககிட்ட இருக்கு தனம். அம்மாவுக்கு பார்வ குறை இருந்தாலும், அவ்வளவு காய்கறிகளையும் நறுக்கி கொடுக்குது, கொதிக்கிற சாம்பாருடைய வாசத்த வச்சே உப்பு கூடவா, கொறச்சலான்னு சொல்லிடும்.”

பேச்சு நீண்டு கொண்டே போனது. தங்கராசுவுக்கு அலுப்பாக இருந்தது. ‘மூன்று பேரா இருக்கும்போது கடையப் பாத்துக்கிட்டு எவ்வளவு நிம்மதியாக இருந்தோம்,’ என்று தோன்றியது. நீலன் மட்டுமே அவன் வாழ்க்கையின் சந்தோஷம்.

நீலன் ஒரு வயசாகும்போது கிட்டத்தட்ட முழுக்க பார்வையை இழந்தாள் வேலாயி. பேரன் பிறந்ததும் ஆனந்தத்தில் திளைத்தவள், அவனை கண்ணால் பார்க்க முடியாத சோகத்தில் மூழ்கினாள். முகங்கள் நிழலாய் தெரிய லேசான பார்வை மட்டுமே. கொலுசு சத்தம் கேட்க, கைகளால் துளாவி நீலனை அள்ளி அணைத்துக் கொண்டாள் வேலாயி.

“என் தங்கமே, என் கண்ணே,” என்று கொஞ்சியவள். சாதத்தை பிசைந்து, ரசம் ஊற்றி, ஊட்டி விட்டாள். தத்தி தத்தி தளர் நடை போட்டு வந்த நீலனும் பாட்டியிடம் ஒட்டிக் கொண்டான். பாட்டி சொல்லும் கதைகள் அவனை அவளோடு கட்டிப் போட வைத்தது. அது பொறுக்க முடியாமல் தனம் சில நேரம் கொலுசை கழட்டி வைத்து விடுவாள்.

பேரனுக்காக தனத்திடம் அடங்கிப் போக ஆரம்பித்து விட்டாள் வேலாயி.
“தனம் என்னோட ஒலகமே சுருங்கிப் போயிடுச்சு. பேரப்புள்ளைய கொஞ்சறது, கத சொல்றது, சாப்பாடு ஊட்டுறது, மட்டும்தான் நிம்மதியத் தருது. அந்தப் பிள்ளைய ஒளிச்சு வைக்கறியே. அவன் கொலுசு சத்தம் என் காதுல கேட்கிறது தான் எனக்கு சந்தோஷமே. அத கழட்டாதடியம்மா,” என்று கெஞ்சுவாள். மாமியார் கெஞ்சுவதை ரசித்தபடி, கொலுசை போட்டு விடுவாள் தனம்.

நீலன் சில நேரம் வீட்டிலிருந்து, மெஸ்ஸுக்கு வந்து விளையாடிக் கொண்டிருப்பான். யாராவது ஒருவர் தூக்கி வைத்துக் கொள்வார்கள் அல்லது வேலாயி மடியில் வைத்துக் கொண்டே ஏதாவது வேலை பார்த்துக் கொண்டிருப்பாள். அவள் சொல்லும் சின்னச் சின்ன கதைகள், பாட்டுகள் எல்லாம் நீலனுக்கு ரொம்பப் பிடிக்கும்.

கண் பார்வை குறைவு கொஞ்சம் முடக்கத்தை கொடுத்தாலும், நீலன் தூங்கும் நேரங்களில், வேலாயி மெஸ்ஸுக்கு வந்துவிடுவாள். தன்னால் முடித்த உதவிகளை செய்து கொடுப்பாள். துல்லியமான அசைவையும், சத்தத்தையும், வைத்தே நிகழ்பவற்றை கணித்துவிடுவாள்.

வெங்காயம், பூண்டு உரித்து கொடுப்பது, கீரை ஆய்ந்து கொடுப்பது, அரிசி கழுவி கொடுப்பது என்று உட்கார்ந்த வேலைகளை செய்து கொடுப்பாள். மெஸ்ஸில், பின்கதவின் அருகே ஒரு பெரிய மண்தொட்டி வைத்திருப்பார்கள். அதில் சாதம் வடிச்ச கஞ்சி, அரிசி கழுவிய கழனி, காய்கறி தோல்கள், கழிவுகள் எல்லாவற்றையும் போட்டு விடுவார்கள், தொட்டி நிறைந்ததும், அதை குமாரசாமி நகட்டி வெளியே வைத்து விடுவான். அந்தப் பக்கம் போற ஆடு, மாடுகள் அதைக் குடித்து, தங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்ளும். வயற்றை நிரப்பிக் கொள்ளும். ஆரம்ப காலத்தில் இருந்து வேலாயி செய்து வந்ததை, தங்கராசுவும் கடைபிடித்தான்.

வழக்கம்போல நீலன் தூங்கியதும் வீட்டில் இருந்தால் தனம் ஏதாவது ஒரு பிரச்சனையை ஆரம்பித்து, சண்டை போடுவாள் என்று வேலாயி மெஸ்ஸுக்கு வந்தாள் . முறத்தில் இருந்த பச்சை பட்டாணியை உரிக்க ஆரம்பித்தாள். பக்கத்தில் கிரைண்டரில் வடைக்கு மாவு அரைந்து கொண்டிருந்தது. கொலுசு சத்தம் லேசாக கேட்டது போல உணர்ந்த வேலாயி, கிரைண்டரை நிறுத்திவிட்டு கவனித்தாள். சத்தம் இல்லை என்றதும் கிரைண்டரை ஓட விட்டு தன் வேலையை தொடர்ந்தாள். பிறகு உரித்த பட்டாணியை கூடையில் போட்டுவிட்டு பட்டாணி தோலை கழனி தொட்டியில் போட தொட்டிக்கு துளாவினாள். கழனியின் லேசான அதிர்வு ஏதோ உணர்த்த அவசரமாக கழனிக்குள் கையை விட்டாள். பானையின் விளிம்பில் கையில் கொலுசு தட்ட.. விபரீதம் புரிந்து அலறினாள்.

மற்றவர்கள் ஓடிவரும் முன் தானே குழந்தையின் கால்களை பற்றி வெளியே எடுக்க முயற்சித்தாள், தட்டென்று தொட்டியை இரு கைகளாலும் தரையில் கவிழ்த்து, உள்ளே இருந்த கழனியை வெளியேற்றினாள். பிறகு கனமான அந்த வாய் குறுகலாக தொட்டியை ரெண்டு கைகளாலும் பலம் கொண்ட மட்டும் தரையில் மோதி உடைத்தாள். சுற்றி நின்ற எல்லோரும் செய்வதறியாது ஸ்தம்பித்து நின்றனர். வீட்டில் இருந்த தனம் கேட்டு கூட சத்தம் கேட்டு ஓடி வந்தவள் குழந்தை கழனி தொட்டிக்குள் விழுந்ததை பார்த்து அலறினாள்.

குழந்தையை தூக்கிய வேலாயி, அப்படியே குப்புற போட்டு வயிற்றை அமுக்கினாள். சிறுவயதில் அப்பாவுடன் போகும் போது இப்படி யாராவது தண்ணீரில் மூழ்கி விட்டால், அவர் முதலுதவி செய்வதை அவள் பார்த்திருந்தாள். கொஞ்சம் கூட நிதானம் தவறாமல் முதலுதவி செய்தாள். சிறிது நேரத்தில் நீலனுக்கு உடலில் அசைவு வர, சங்கரனிடம் பிள்ளையை கொடுத்து “உடனே ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போ,” என்று அலறினாள். அசைவு வந்த குழந்தையை தூக்கிக் கொண்டு அனைவரும் ஆஸ்பத்திரிக்கு ஓடினர்.

அடுத்த ரெண்டு நாளில் நீலன் சகஜமாக, வீட்டுக்கு கூட்டிட்டு வந்தனர். குற்ற உணர்வில் இருந்த தனம், “என்ன மன்னிச்சிடுங்க அத்த; இன்னிக்கு உங்களால தான் குழந்த புழச்சுது. நான் செத்த கண்ணசந்துட்டேன். என்கூட படுத்திருந்த நீலன், முழிச்சிட்டு உங்களத் தேடி மெஸ்ஸுக்கு வந்திருக்கான். தூக்க கலக்கத்தில் கழனி தொட்டிக்குள்ள விழுந்துட்டான்.”

“ஆமாண்டிமா, எனக்கு கொலுசு சத்தம் லேசாக கேட்டது போல தோணுச்சு, ஏதோ ஒரு உள்ளுணர்வும் உணர்த்துச்சு; கழனி தொட்டியில தோலப் போட்டுட்டு, அவனத் தேடத்தான் எழுந்தேன். இருந்தாலும் அவனக் காப்பாத்துனது அவன் கால்ல போட்டிருந்த கொலுசு தான். கொலுசு சத்தம் கேட்டுச்சோன்னு தான் நான் உசாரானேன். கொலுசு தொட்டி விளிம்பில மாட்டப் போய் தான் அவன் முழுசும் உள்ள போகாம இருந்தான். ஏதோ அந்த குலசாமி நமக்கு நம்ம பிள்ளைய திரும்ப குடுத்துட்டாரு.

“ஐயா கருப்பசாமி, பிள்ளய காப்பாத்திட்ட, உனக்கு இந்த வருஷம் பொங்க வைக்கிறேன்,” என்றபடி விண்ணை நோக்கி இரு கைகளை கூப்பினாள் வேலாயி.

கொலுசு சத்தம் அருகில் கேட்க, இரு கைகளை நீட்டி நீலனை அணைத்துக் கொண்டாள். எப்போதும் கடுகடுக்கும் தனத்தின் முகம் நன்றியுடன் அத்தையை பார்த்தது. வேலாயியின் கைகளோ நீலனின் கொலுசை மனதில் நன்றியுடன் தடவிக் கொண்டிருந்தது.

தி.வள்ளி

திருமதி வள்ளி கடந்த 10 ஆண்டுகளாக மின் மற்றும் அச்சு இதழ்களிலும, முகநூல் குழுக்களிலும் எழுதிக் கொண்டு இருக்கிறார். இதுவரை 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், குறுந்தொடர்கள், நெடுந்தொடர்கள், நாவல்கள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார்.
19 புத்தகங்கள் (12 அச்சு புத்தகங்கள் மற்றும் 7 மின் புத்தகங்கள்) எழுதி வெளியிட்டுள்ளார். பல போட்டிகளில் இவருடைய படைப்புகள் சான்றிதழ்களையும் விருதுகளையும் பெற்றுள்ளன.
ஜெயஸ்ரீ ராஜ் நினைவுச் சிறுகதை போட்டி, புதுமைப்பித்தன் நினைவுச் சிறுகதை போட்டி, சஹானா மின்னிதழின் சிறந்த சிறுகதைப் போட்டி, பிரதிலிபியின் சிறந்த தொடர், குமுதம் சினேகிதி சிறுகதை போட்டி என்று பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றுள்ளார்.
“புதுமைப்பித்தன் விருது”, நீரோடை மின்னிதழின் “சிறந்த கதை சொல்லி விருது’ மற்றும் பிரதிலிபியின் “சிறந்த கதாசிரியர் விருது” போன்றவை இவர் பெற்ற விருதுகள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன