அதிரன்/கடைசி பஸ்

பூச்சிகளின் சத்தத்தில்
அந்தி முழு இரவுக்கு
தயாராகிக் கொண்டிருந்தது.

நிலவை முழுவதும் உண்ட
மேகங்கள் மெல்ல
நகர்கின்றன.

கூரையற்ற அந்த
நிறுத்தத்தில்
அவள் மட்டும்
தனியாய்.

இரண்டில் ஒன்று
கடந்து விட்டது என்பதை
குறிப்பில் உணர்ந்தவளுக்கு
மேலும் பயம்.

தூரத்தில் தெரிந்தது
இன்னொன்று வருவது.
அதுவும் கடந்து விட்டால்??

சுழலுகிறது
அடிவயிறு.

சரியாக வந்து
நின்றது.
விரைந்து ஏறியவள்
மட்டுமே பேருந்தில்.

நகரம் தாண்டி
தெருவிளக்கற்ற சாலையில்
ஊர்கையில்—
“டிக்கட்…. டிக்கட் …”
என்றது
சாராய நெடி.

பழுது என்று
நடுவில் நிறுத்தப்பட்டது
மட்டும்
அவள் நினைவில்……

—

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன