
குளத்துபாசியின் ஒளியுணரும் தன்மையை அடிப்படையாகக் கொண்டு, ‘ஆப்டோஜெனடிக்ஸ்’ என்ற புதிய மருத்துவத் துறையையே உருவாக்கிய கார்ல் டெஸ்சராத், பீட்டர் ஹெக்மான், ஜார்ஜ் நகல் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தி படித்திருப்பீர்கள்.
எவ்வளவு மகத்தான கண்டுபிடிப்பு என்பதைப் படிக்கப் படிக்க உணர்ந்துகொண்டேன். ஒரு மனிதர் அந்த பாசியையும் அதன் ஒளியுணரும் தன்மையையும் கண்டுபிடிக்கிறார். இன்னொருவர் அதனைப் பிரித்தெடுக்க முடியுமா என்று சோதிக்கிறார். மூன்றாமவர், அந்த பாசியின் மரபணுவை உயிரினங்களின் செல்களில் செலுத்தி, அதை ஒளியால் கட்டுப்படுத்தி மருத்துவம் பார்க்க முடியும் என்பதை நிரூபிக்கிறார்.
இந்த ஆப்டோஜெனடிக்ஸ் என்ற துறையே 2006க்குப் பிறகுதான் தோன்றுகிறது. நாம் வாழும் காலத்தில் நடைபெற்றுள்ள ஆகப்பெரிய கண்டுபிடிப்பாக அறிவியல் உலகம் இதைக் கொண்டாடுகிறது.
ஒவ்வொரு அம்சமாக தேடித் தேடிப் படித்தபோது வியப்பு மேலிட்டது. எலியின் மூளைச் செல்களுக்குள் இந்த பாசியின் மரபணுவைச் செலுத்தி, அது பாசிப் புரதத்தை உற்பத்தி செய்த பின், அதன் மீது ஒளிக்கற்றையை பாய்ச்சி, எலியின் நகர்வைக் கட்டுப்படுத்தும் சோதனையைப் படித்து அதன் காட்சிகளைப் பார்த்தபோது, ‘சே! என்ன அற்புதம்’ என்று உண்மையில் புளகாங்கிதப்பட்டேன்.
மூளை சார்ந்த மருத்துவத்தில் மிகப் பெரிய புரட்சியை இந்த ‘ஆப்டோஜெனடிக்ஸ்’ ஏற்படுத்தி வருகிறது, இன்னும் ஏற்படுத்தப் போகிறது என்பதற்கான அங்கீகாரமாகத் தான் நோபல் பரிசு இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதாவது, மூளை சார்ந்த நோய்க்கான மருத்துவத்தில் இதுநாள் வரை மொத்த உடலுக்கும் போய்ச்சேரும் மருந்துகளையும் மாத்திரைகளையும் தான் கொடுத்து வந்தார்கள். ஆனால், இந்த ‘ஆப்டோஜெனடிக்ஸின்’ மகத்துவம் என்னவென்றால், எந்த மூளைச் செல் பாதிக்கப்பட்டுள்ளதோ அதற்கு மட்டும் தனியே ஒளிக்கற்றை பாய்ச்சி, துல்லியமாக மருத்துவம் செய்ய முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இதனால், எபிலெப்ஸி (வலிப்பு நோய்), பார்க்கின்சன்ஸ் (நடுக்கவாதம்), மனநோய் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுக்குப் புதிய மருத்துவ முறை கிடைத்துள்ளது. மேலும் மூளை சம்பந்தமான என்னென்ன குறைபாடுகள் உள்ளவனவோ, அவை அனைத்துக்கும் கூட ‘ஆப்டோஜெனடிக்ஸ்’ பயன்படப் போகிறது.
நாற்பது ஆண்டுகளாக பார்வை இல்லாமல் இருந்த ஒருவருடைய கண்ணின் விழித்திரையில் (Retina) இந்த பாசியின் மரபணுவைச் செலுத்தி, சிறப்பு கண்ணாடி வழியாக ஒளிக்கற்றை பாய்ச்சி சோதித்தபோது, அவரால் ஒரு சில பொருள்களைப் பார்க்க முடிந்ததாக ஓர் ஆய்வு சொல்கிறது. ‘யே..அப்பா’ என்று என் மனம் கொண்டாடத் தொடங்கிவிட்டது.
இதையெல்லாம் படிக்காமல், தெரிந்துகொள்ளாமல், கண்ட விஷயங்களையும் தெரிந்துகொண்டு, பேசிக்கொண்டும் அலைகிறோமே என்று என்னையே நினைத்து வெட்கப்பட்டுக்கொண்டேன்.
நோபல் பரிசுக் குழு பயங்கர சின்சியராக வேலை பார்க்கிறது. பரிசு விவரம் வெளியானவுடன், அவர்களுடைய வலைத்தளத்தில், இந்தக் கண்டுபிடிப்புகள் தொடர்பான அவ்வளவு படங்களை, சித்திரங்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர். ஒவ்வொன்றும் இத்தனை ஆண்டுகளாக இந்த விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுகளின் விளைவுகளை விளக்குகின்றன.
அதைவிட ஆச்சரியம், நோபல் வலைத்தளத்தில் இருந்து ஒருவர், விருதுபெற்ற விஞ்ஞானிகளை தொலைபேசியில் அழைத்து முதல் ‘ரியாக்ஷன்’ கேட்கிறார். இரண்டு, மூன்று ஆண்டுகளாகவே அந்த தொலைபேசி உரையாடலும் நோபல் எக்ஸ் (X) பக்கத்திலும் வலைத்தளத்திலும் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
அந்த உரையாடல்களைக் கேட்கும்போது மனம் நெக்குருகுகிறது. ‘தானுண்டு, தன் வேலையுண்டு, உலகம் கவனித்தால் மகிழ்ச்சி, கவனிக்கவில்லை என்றால் என் பணி ஆய்வு செய்து கிடப்பதே’ என்ற தொனியில் விஞ்ஞானிகள் பேசுவார்கள். ஒருசிலர் மகிழ்ச்சி தெரிவிப்பார்கள். ஒருசிலருக்கு மகிழ்ச்சியை எப்படித் தெரிவிப்பது என்றுகூடத் தெரியாமல், வேறோர் உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் வாயில் இருந்து வார்த்தைகளை பிடுங்குவது அவ்வளவு கஷ்டமாக இருக்கும். ஒரு ‘நன்றி’, ஒரு ‘மகிழ்ச்சி’ என்ற சொல்கூட அவர்களுக்குச் சொல்லத் தெரியாது. ‘உவகை’ ‘கொண்டாட்டம்’ என்பதெல்லாம் அவர்கள் வாயில் அல்ல, சிந்தனையிலேயே இருக்காதோ என்று கூட நினைத்துக்கொள்வேன்.
நான் இரண்டு விஷயங்களுக்கு இறைவனுக்கு நன்றி சொல்வேன். இந்த செய்திகளை எல்லாம் மாணவர்களுக்கு கொண்டுசெல்லும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பது. தினமலர் மாணவர் ‘பட்டம்’ இதழில் மாணவர்களுக்குப் புரியும் விதத்தில் இந்தக் கட்டுரையை எழுத முடிந்தது. இரண்டு, இவ்வளவு விவரங்களையும் ஆய்வுகளையும் காட்சிகளையும் உடனடியாக தெரிந்துகொள்ள வசதி ஏற்படுத்தித் தந்த இணையம்.
நாம் மகத்தான அறிவியல் புரட்சி நடைபெறும் காலத்தில் வாழ்கிறோம் என்பதே இன்னொரு அரிய வாய்ப்பு
