
“ஏன் தாமதம்?” என்றாள்.
“வரும் வழியில் புயல், மழை” என்றது பறவை. அடர் பச்சை நிறத்திலிருந்தது.
“என் உடையைப் பார்த்தாயா? நீ சொன்ன பச்சை போலவே இருக்கிறதா?” உடையை அலங்காரமாகக் காட்டியபடி கேட்டாள்.
“அழகு, அதெப்படி தினமும் நான் சொல்லும் நிறத்தில் உடை கிடைக்கிறது? செலவு வைக்கிறேனோ”
“இல்லையில்லை. எளிய வெள்ளைத்துணிகள் என்னிடம் நிறைய உண்டு. முதல்நாள் நீ சொல்லும் வண்ணத்தில் நனைத்துக்கொள்வேன்.”
“சிரமப்படுத்துகிறேனா?”
“உதவிதான் உன்னால். வண்ணங்களை நிறைய அறிந்து கொள்கிறேன். நீ எப்படி தினமும் வண்ணம் மாறுகிறாய்”
“எனக்கேத் தெரியாதே. தோன்றும். மாறுவேன்”
“நாளை?”
“வெளிர் நீலம்”
நாட்கள் போனது. பறவை தாமதமாகவும் சிலநாட்களில் வராமலும் இருந்தது. அவளுக்கு அழுகையாக வந்தது. பறவை சொல்லாத ஒருநாளில் அடிக்கடி சொல்லும் சிவப்பை அணிந்தாள்.
அன்று வந்தது.
“ஏன் இப்படிச் செய்கிறாய்?” என்றாள்.
“எப்போதும் போல்தான் இருக்கிறேன்”
“இல்லை, மாறிவிட்டாய்”
“நான் ஒரு பெண் பறவையைப் பார்த்தேன். அது வெள்ளை நிறம்”
“சரி. அதனால்?”
“இனி நான் வரமாட்டேன் “
அவள் சிவப்பு உடையில் வெள்ளை புள்ளிகள் உருவாகிப் பரவியது. முழுக்கவும். அதன்பின் அந்தப் பறவை வரவேயில்லை. அவளும் வண்ண ஆடைகளை அணியவேயில்லை.
அந்தப் பறவை வரவேயில்லை. அவளும் வண்ண ஆடைகளை அணியவேயில்லை.
