
அன்று சைந்தவியின் மனம் குழப்பத்திலிருந்தது. அம்மா வசந்தா வாங்கித் தந்த ராசியான சிவப்பு பாவாடை சட்டையை அணிந்தால் மனத்தெளிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதை அணிந்தபடி தனது விடுதியில் முன் அறை பெஞ்சில் அமர்ந்து இருந்தாள் அப்போது அருகிலிருந்த சிவப்பு குக்கூ குருவி, “சிப்… சிப்…” என்று கூவியது.
“நேற்றோடு கல்லூரித் தேர்வு முடிந்துவிட்டது. ஆனால் அம்மாவின் கனவை எப்படி நிறைவேற்றுவது? பிரபல அலைவரிசையின் ‘இசை அரசி’ இறுதிப் போட்டிக்கு இன்னும் மூன்று நாட்கள்தான். அம்மா இருந்திருந்தால் எனக்கு ஊக்கமாக இருந்திருப்பாள்…” என்று கலங்கினாள்.
அப்போது குருவி ஒரு கடிதத்தை அவள்மீது போட்டது. அதில்,
“என் மகளைப் பார் போற்றும்… அவள் பாடல்கள் உலகெங்கும் ஒலிக்கும்!” என்று அம்மாவின் இறுதி வரிகள் இருந்தன.
தாயின் ஆசீர்வாதமாக அதை எண்ணிய சைந்தவி உற்சாகத்துடன் பயிற்சியில் இறங்கினாள்.
இறுதிப்போட்டியில் தாய்க்குப் பிடித்த பாடலை கர்நாடக-ஹிந்துஸ்தானி பாணியில் ஃப்யூஷனாகப் பாடினாள். அரங்கமே அதிர்ந்தது.
கேமராக்கள் புடை சூழ நடுவர் இசை அரசி கிரீடத்தைச் சைந்தவி தலையில் சூட்டினார் .
அவள் ‘இசை அரசி’ பட்டம் வென்றாள்.
ஆனந்தக் கண்ணீருடன் சைந்தவி கூறினாள்:
“அம்மா, இந்தப் பட்டம் உன் ஆத்மாவிற்குச் சமர்ப்பணம்!”
சிவப்பு குக்கூ குருவி வெகு சத்தமாகக் கூவியது.
