ஆர். வெங்கடேஷ்/மானே, தேனே, பொன்மானே!

பல ஆண்டுகளாக இணையத்திலேயே குடித்தனம் நடத்துவதாலோ என்னவோ, இணையத்தில் இடம்பெறும் எந்தவிதமான ‘ரெவ்யூ’க்களையும் (Reviews) என்னால் உண்மை என்று நம்ப முடிந்ததே இல்லை. அது எந்தவிதமான சேவையாக இருந்தாலும் சரி, பொருள்களாக இருந்தாலும் சரி, தேவை என்று தோன்றினால், கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டுத் துணிந்து அந்தப் பொருளையோ சேவையையோ வாங்கிவிடுவேன்.

விமர்சனங்களை மட்டும் பார்க்கவே மாட்டேன். அவை அத்தனையும் போலி என்று என் மனத்தில் ஆழமாகப் பதிந்துபோனதுதான் அதற்குக் காரணம்.

கடந்த சில நாள்களாகச் சிங்கப்பூரில் நடைபெற்றுள்ள ஓர் அதிரடி நடவடிக்கை என் நம்பிக்கையை உறுதி செய்துவிட்டது. அந்த நாட்டில் உள்ள சிங்கப்பூர் போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (CCCS), கிட்டத்தட்ட 100 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்கள் எல்லோரும் ‘ரெபுடிஃபை’ (Reputify) என்ற நிறுவனத்தைப் பணியமர்த்தி, இது போன்ற போலி இணைய விமர்சனங்களை விலைக்கு வாங்கியுள்ளனர்.

அதில் முதற்கட்டமாக 47 நிறுவனங்களைத் தொடர்புகொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், 45 நிறுவனங்கள் ‘ஆமாம், நாங்கள் இந்தப் போலி விமர்சனங்களை வாங்கினோம்’ என்று ஒப்புக்கொண்டுள்ளன. 100 நிறுவனங்களின் பெயர்களையும் அந்த ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்த ‘ரெபுடிஃபை’ என்ற நிறுவனத்தை ஜூலியன் டங் யான் கை என்பவர் நடத்தியுள்ளார். அவரும் தம் நிறுவனம் இதுபோன்ற போலி விமர்சனங்களை விற்பனை செய்ததை உறுதி செய்துள்ளார்.

இவர்களுடைய உத்தி கேட்கவே பிரமாதமாக இருக்கிறது. 219 சிங்கப்பூர் டாலர்களுக்கு 35 ஐந்து நட்சத்திர விமர்சனங்களை (5-star reviews) உற்பத்தி செய்வார்களாம். அதாவது, அந்தந்த நிறுவனமே தரும் ‘மானே, தேனே, பொன்மானே’ வகையிலான புகழ்மாலைகளை வேறு வேறு பெயர்களில் பல்வேறு வலைத்தளங்களில் பதிவேற்றுவார்கள். அல்லது செயற்கை நுண்ணறிவைப் (Generative AI) பயன்படுத்தி விமர்சனங்களை அவர்களே உற்பத்தி செய்துகொள்வார்கள்.

படிக்கும் அப்பாவி மக்கள் நம்பவேண்டும் அல்லவா? அதனால், விமர்சனத்தை ஆரம்பிக்கும்போது, ஏதோ திட்டுவது போலவும் குறை சொல்வது போலவும் ஆரம்பிப்பார்கள். படிப்பவர்கள் மனத்தில் நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு, பின்னர் படிப்படியாக இந்த ‘மானே, தேனே, பொன்மானே’ தொடரும்.

மார்க்கெட்டிங் துறையில், போலி விமர்சனங்களை உருவாக்கி அவை ஏதோ உண்மையான சாமானிய மக்கள் தாமாக முன்வந்து எழுதியது போலக் காட்டும் இந்த மோசடிக்கு ‘ஆஸ்ட்ரோடர்ஃபிங்’ (Astroturfing) என்று பெயர். முதலில் லேசாகக் குறைசொல்லிவிட்டுப் பிறகு புகழ்ந்து தள்ளுவதை ‘பிளெமிஷ் எஃபெக்ட்’ (Blemish Effect) என்பார்கள். இது படிப்பவர்களின் மூளையில் நம்பகத்தன்மையை மிக எளிதாக உருவாக்கிவிடும் ஓர் உளவியல் தந்திரமாகும்.

சிங்கப்பூர் சின்ன நாடு. அவர்களால் இத்தகைய இணைய மோசடியை உடனடியாகக் கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. இந்த ரெபுடிஃபை நிறுவனம் 2023 முதல் செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது. இப்போது, இந்தப் போலி விமர்சனங்களை வாங்கிய நிறுவனங்கள் பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்பதோடு, இத்தகைய போலி விமர்சனங்களைப் பல்வேறு வலைத்தளங்களில் இருந்து நீக்கவும் ஒப்புக்கொண்டிருக்கின்றன.

ரெபுடிஃபையும் இனிமேல் இத்தகைய தொழிலைச் செய்யக் கூடாது. இதில் இருந்து இனிமேல் வரக்கூடிய வருவாயை ஒரு தொண்டு நிறுவனத்துக்குக் கொடுத்துவிட வேண்டும் என்றும் சிங்கப்பூர் ஆணையம் உத்தரவு போட்டிருக்கிறது. இதுபோன்ற வேலைகள் இனியும் தொடருமானால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்றைக்கு இணையம் வழியாகப் பொருள்களையோ சேவைகளையோ வாங்குவது தவிர்க்க முடியாத அம்சமாகிவிட்டது. இந்நிலையில், வாடிக்கையாளர்களின் மனங்களைத் திசைதிருப்புவதற்காக எத்தகைய மோசடியிலும் இறங்குவதற்குப் பல நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. அவர்களுக்கு அத்தகைய சேவையைத் தருவதற்கென்றே புதிய நிறுவனங்கள் முளைத்து வருகின்றன.

உண்மையான விமர்சனம் என்பது மிக மிக அரிது. பல புடைவைக் கடைகளிலும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களிலும் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கிறேன். அங்கேயே ஒரு கேமராவைப் போட்டுக்கொண்டு ஒரு குழு உட்கார்ந்திருக்கும். உள்ளேயிருந்து வரும் வாடிக்கையாளரிடம் இருந்து அங்கேயே சுடச்சுட விமர்சனத்தையும் அனுபவத்தையும் பெற்றுக்கொள்வார்கள். இவற்றில் ஒருசில உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது. அதிலும் போலிகள் உலவக்கூடும். அவர்கள் எல்லோரும் உண்மையிலேயே வாடிக்கையாளர்கள்தாமா? அல்லது வெறும் ‘செட்-அப்’பா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இன்றைக்கும் நான் ஒருசில வலைத்தளங்களை நம்புகிறேன். பல்வேறு பொருள்களுக்கு ‘மெளத்ஷட்’ (MouthShut) தளத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று பார்ப்பேன். திரைப்படங்களுக்கு ‘ராட்டன் டொமேட்டோஸ்’ (Rotten Tomatoes) தளத்தில் மக்கள் விமர்சனம் என்னவென்று கவனிப்பேன். இவற்றில் ஒரு சௌகரியம் உண்டு. இவை அடிப்படையில் ஒரு பொது மேடை. எல்லோரும் தம் கருத்துகளைச் சொல்லலாம்.

அவற்றின் ஒட்டுமொத்த விமர்சனங்களின் அடிப்படையில் ஒரு மதிப்பீடு கிடைக்கும். அது அல்காரிதம் அடிப்படையில் வருவது. அதனால், இவற்றில் துளியூண்டு நியாயமாவது இருக்கும் என்று நம்புகிறேன். ஆனாலும் முழுமையாக நம்புவதில்லை.

உண்மையில், இன்றைக்கு இருக்கக்கூடிய மிகப் பெரிய பிரச்னை, பிராண்டுகள் மீதோ தயாரிப்புகள் மீதோ எந்தவிதமான நம்பிக்கையும் இல்லை என்பதுதான். அதனால், இத்தகைய டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் அந்த நம்பிக்கையை செயற்கையாக உற்பத்தி செய்ய முயல்கின்றன. ஆனால், தெரிந்தோ தெரியாமலோ அவை தரமற்ற பொருள்களுக்கும் தயாரிப்புகளுக்கும் தங்கள் விளம்பர உத்திகளைத் தருகின்றன.

கடைசியில் இணையத்தில் சல்லிசாகக் கிடைக்கிறது என்று பொருள்களையோ சேவைகளையோ வாங்க வருபவர்கள், ‘அடுத்தவர் என்ன சொல்கிறார்’ என்று தேடத் தொடங்குகிறார்கள். அந்த ‘அடுத்தவர்’ உண்மையிலேயே அங்கே இல்லை. அங்கே போலி விமர்சனங்கள்தான் கொலுவீற்றிருக்கின்றன.

பொருள்களையோ சேவைகளையோ வாங்குபவர் ‘தானுண்டு, தன்னுடைய பர்சேஸ் உண்டு’ என்று அடுத்த வேலையைப் பார்க்கக் கிளம்பிவிடுகிறார். அவர் அந்தத் தயாரிப்புகள் பற்றி வாயே திறப்பதில்லை. நல்லது என்றோ கெட்டது என்றோ சொல்வதற்குக்கூட அவரிடம் நேரம் இல்லை. இந்நிலையில், உண்மையான விமர்சனம் உருவாவதே இல்லை. இங்கேதான் இந்தப் போலிகள் உலவத் தொடங்குகின்றன.

சிங்கப்பூர் சின்ன நாடு; கட்டுப்பாடுகள் அதிகம். அங்கே ஆணையம் சொன்னால் நிறுவனங்கள் கேட்டுத்தான் ஆகவேண்டும். நமது நாட்டில், இந்தியத் தர நிர்ணயக் கழகம் (BIS), போலி விமர்சனங்களைத் தடுக்க ‘IS 19000:2022’ என்ற புதிய தரக்கட்டுப்பாட்டு நெறிமுறையை அறிமுகம் செய்துள்ளது. மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையமும் (CCPA) ஆன்லைன் மோசடி விமர்சனங்களைக் கண்காணித்து அபராதம் விதிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இவையெல்லாம் உண்மையில் பயன் தந்தால் மகிழ்ச்சி தான். அதுவரை ‘கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டுத் துணிந்து பொருளையோ சேவையையோ வாங்குவது’ ஒன்றே வழி.

—————

(c) ஆர். வெங்கடேஷ்

என் கட்டுரைகளைப் பற்றி உங்கள் எண்ணங்களை rvrv30@gmail.com என்ற இமெயிலுக்கு அனுப்புங்கள். மற்றவர்களோடு கட்டுரைகளைப் பகிர்ந்துகொள்ளும்போது, இந்த வாட்ஸ் ஆப் சேனல் சுட்டியையும் சேர்த்து அனுப்புங்கள்: https://whatsapp.com/channel/0029Vb8QUULAjPXT0Bvig803

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன